போய்வருகிறோம்

நகர்ந்துவிட்டன நான்காண்டுகள்...

இன்று செல்லவிருக்கிறோம்

எங்கள் உடைமைகளோடு

இக்கல்லூரியின் நினைவுகளையும்

சுமந்து கொண்டு!

அனைவரும் விடைகொடுங்கள்...

நாங்கள் போய்வருகிறோம்!



நாங்கள் வரும்பொழுதெல்லாம்

பூமாரி தூவி

எங்களை வரவேற்கும்

மரங்களே...

இனி உங்கள் சுவாசக்காற்று

எங்கள் உயிர் தொடாது!

எங்கே... உங்கள்

கிளைகளை அசைத்து

விடைகொடுங்கள்...

நாங்கள் போய்வருகிறோம்!



தினமும் எங்களை

கண்கொட்டாமல் பார்க்கும்

கரும்பலகையே...

அழிப்பானை வைத்து

உனக்கு அரிதாரம் பூச

நாங்கள் இனி இருக்கமாட்டோம்...

விடைகொடு வகுப்பறையே...

நாங்கள் போய்வருகிறோம்!



வகுப்பறை பாடம்

பிடிக்காவிட்டால்

எங்கள் கால்கள் நகரும்

உன் திசை நோக்கி...

சிற்றுண்டிச் சாலையே!

இனி எங்கள் சிரிப்பொலி

உன் செவிகளுக்கெட்டாது!

நாங்கள் போய்வருகிறோம்!





அலமாரியில் அடைபட்டிருக்கும்

கலைமகளை விடுவிக்க

உன்னோடு நாங்கள் நடத்திய

மௌன யுத்தம்

இன்றோடு முடிகிறது நூலகமே!

பாரதி... கம்பா...

ஷேக்ஸ்பியர்... ஷெல்லி...

எல்லோரும் விடைகொடுங்கள்...

நாங்கள் போய்வருகிறோம்!



எங்கள் காப்பாளரசிகளின்

அரண்மணையே!

எங்கள் விடுதி அலுவலகமே...

கடவுச்சீட்டு வாங்க

உன் வாசலில் காத்திருப்பது

இன்றே கடைசி!

விடைகொடு விடுதியே...

நாங்கள் போய்வருகிறோம்!



எத்தனை முறை துவைத்தாலும்

அழுக்குப் போகாத

எங்கள் துணிகளை

தாங்கி நிற்கும் கொடிகளே!

இனி எங்கள் பாரத்தை

உங்கள் தலையில்

சுமத்த மாட்டோம்...

நாங்கள் போய்வருகிறோம்!



எங்கள் வயிற்றிற்கு

உணவு மட்டுமல்ல,

எங்கள் நட்பிற்கு

முகவரியும் தந்த

உணவுக்கூடமே... இனி

உன் மடியில் அமர்ந்து

பசியாற மாட்டோம்...

நாங்கள் போய்வருகிறோம்!



கல்லூரி ஆரம்பித்த அன்று

வெளியிட்ட செய்தியையே

இன்றும் கூறிக்கொண்டிருக்கும்

அறிவிப்பு பலகையே!

உனக்கோர் புதிய செய்தி...

நாங்கள் போய்வருகிறோம்!



அனைவரிடமும் கூறிவிட்டோம்...

எங்கள் கல்லூரித் தாயே...

இனி நீ மட்டும் தான் பாக்கி!

அதிகபட்சம் இரண்டு மாதம்,

அதற்கு மேல் இருந்ததில்லை

உன்னை விட்டு!

இன்று கனவுகளோடு

கண்ணீரையும் சுமந்துகொண்டு

பிரிகிறோம்,

உன் இளைய பிள்ளைகள்

உன்னை கவனித்துக்கொள்வார்கள்

என்ற நம்பிக்கையில்...

நாங்கள் போய்வருகிறோம்!

எழுதியவர் : திவ்யதர்ஷினி (23-Aug-14, 8:09 pm)
பார்வை : 68

மேலே