பல்லி விழுந்த பலன்
விட்டு போனதென்று இருந்துவிட்டேன்
அளவற்ற வாட்டம் அடைந்து விட்டேன்
விதியை நொந்து வாழ்வில் சோர்ந்து
தாடி வளர்ப்பதில் முழு கவனம் வைத்தேன்
சுற்றி இருந்தோர் குழம்பினர் வருந்தினர்
நல்லா தானே இருந்தான் இவன் கெட்டநேரம்
இப்படி படுத்தி எடுக்குதே என்று கருத்து பரப்பி
இன்னும் கழிவிரக்க புதைமணலில் அழுத்தினர்
நான் நிலைமாறி நிறம்மாறி உருமாறி ஒருமாதிரி
பித்துபிடித்த புலவர் என புனைபெயர் அமைத்து
பலமாதிரி தத்துவ கவிதைகள் புனையும் முனைப்புடன்
பேப்பரும் பேனாவும் கொண்டு விட்டத்தை பார்த்தேன்
பல்லி ஒன்று எத்தனை அறிவுள்ளது ஐந்தா ஆறா
என்னையே உற்று உற்று பார்ப்பது போல இருந்தது
நானும் ஒன்றும் சளைத்தவனல்ல என காட்டுவதற்காக
அதையே வைத்த கண் வாங்காமல் பார்த்து இருந்தேன்
ஆனால் அதன் செயலில் அதிசயம் உணர்ந்தேன்
என்னையே பார்த்தபடி இருந்தாலும் நடுநடுவே நாக்கை
நீட்டி சுழற்றி ஈசல் பூச்சிகளை ஒவொன்றாய் பிடித்து
உணவாக அருந்தி கொண்டு லேசாக முன்னும் பக்கமும்
அசைந்து அசைந்து இன்னும் ஈசல் பூச்சிகளை பிடிக்க
வாட்டமாக தன்னுடைய இடத்தை மாற்றி கொண்டு
எதோ பல்லிக்கும் ஈசல் பூச்சிகளுக்கும் சிறு போர்க்களம்
போல என்னுடைய பேதலித்த புத்திக்கு தோன்றியது
ஆனாலும் அதன் கண்களும் முகமும் என்னையே
பார்த்து என்மேல் அனுதாப பட்டு கண்கலங்கியது போல
உணர்ந்தேன் என்னுடைய கண்களில் நீர்மல்க மூடினேன்
சிறிது நேரத்தில் கண் விழித்து முகத்தை கண்ணாடியில்
பார்த்தால் அதன்மேல் பல்லி அதன் கண்களோ என்னையே
பார்ப்பது போல அனால் அதன் வேட்டை தொடர்ந்தபடி
சுரீரென்று உரைத்தது எழுந்தேன் முகசவரம் செய்து
சிலீரென்ற நீரில் குளித்து உடையுடுத்தி கிளம்பினேன்