அழகான வாழ்க்கை ஆனந்தமாய் - சந்தோஷ்
பிதுங்கிவெளியேறும் சாக்கடைநீர்
நிரம்பிவழியும் குப்பைத்தொட்டி
கடந்துசெல்வோரின் நாசிகளை
பாதுகாத்துக்கொள்கிறது
அவரவரின் கைகள்.
யாரோ செய்த தவறாக
கண்டித்து பொருமுகிறது
அவரவரின் மனங்கள்.
இல்லத்துக்குள் சுகம் கூட்ட
தெருவுக்குள் கழிவு கழிக்கும்
இவர்கள் எப்போதும்
உணர்வதே இல்லை..
கொசுக்களும் ஈக்களுக்கும்
இவர்கள்
அலட்சியமாக விட்டெறிந்த
விந்துத்துளியுடைய
கருத்தடை பைகளின்
மாதவிடாய் இரத்தம் தோய்ந்த
பஞ்சுபொதிகளின்
குழந்தைகள் என்று.
தாம் தூம்
சாலைமறியல்.
ஆச்சா போச்சா
கூச்சல் போராட்டம்
அது சரியில்லை
இது சரியில்லை
அரசாங்கம் சரியில்லை
அதிகாரி சரியில்லை .
மக்களே..!
நான் சொல்கிறேன்
எப்போதும்
நீங்கள்தான் சரியில்லை..!
கை நீட்டினால் மட்டுமே
நீங்கள் நீதிபதி ஆகிவிடமுடியாது.
குப்பையை
குப்பைத்தொட்டியில் போடுங்கள்
உங்கள் எண்ணத்தில் அல்ல.
சாக்கடை கால்வாயில
மட்டும் ஓடட்டும்
சாக்கடை சகதிகள்..!
உங்கள் புத்திகளில் வேண்டாம்.
சுத்தம் , சுகாதாரம்
கோரும் மக்களே!
முதலில் உங்களையும்
உங்கள் மனதையும்
சுத்தப்படுத்தி பாருங்களேன்
நீங்கள் வாழம்
இந்த வாழ்க்கை
சந்தோஷமாய் சுகமாய்
அற்புதமாய் நிம்மதியாய்
அமைய வேண்டாமா?
கொஞ்சம் மாறித்தான் பாருங்களேன்
மாற்றம் வேண்டுமெனில்
நீங்கள் மாறித்தான் பாருங்களேன்.
மாறிப்பாருங்கள்
மாறும் உங்கள்
அழகான வாழ்க்கை
ஆனந்தமாய்...!