அழகான வாழ்க்கைஆனந்தமாய்போட்டிக் கவிதை- பொள்ளாச்சி அபி
அழகான வாழ்க்கை..ஆனந்தமாய்..போட்டிக் கவிதை- பொள்ளாச்சி அபி.
-------------------------------------
பாலுக்கு அழுது
படிப்புக்கு அழுது
வசதிக்கு அழுது
நோய்க்கு அழுதென..
பிறந்து வளர்ந்து
வாழ்ந்து மடிகின்ற
வாழ்க்கை..!
இருப்பவன் இல்லாதவன்
இயற்கை செயற்கையென
பிறந்ததிலிருந்து துருவங்களாய்
பிளந்திருக்கிறது வாழ்க்கை.!
கடைந்தெடுத்த பொய்களினால்
கட்டப்பட்ட நம்பிக்கைகளில்
பதைப்புடன் நகர்ந்தே
சிதைந்திருக்கிறது வாழ்க்கை.!
விதியை நம்பி வீழ்வதா.?
மதியை எண்ணி வாழ்வதா.?
இருப்பதெல்லாம் இயல்பெனில்
மக்களுக்கும் மாக்களுக்கும்
வேறென்ன வேறுபாடு.?
மனதினில் கேள்விகள்
மந்தையாய்த் திரிய,
சிந்தையைத் திருப்பினேன்
மாற்றங்களை நோக்கி..,
பெருமலை தகர்க்கும்
சிறுஉளி கையுடன்
செயலில் இறங்கினேன்..
அனுதினமும் இயங்குவேன்.!
விளைவில் கொண்ட
நம்பிக்கை எனக்கு
விடியலைத் தருகிறது.
வினாக்கள் ஒடிகிறது.
இந்தப் பிறவிக்கு
இதுவே போதும்..இப்போது
வாழ்க்கை அழகுதான்
வருதே ஆனந்தம்தான்..!