இல்லாமை இனிமை

இன்றய கால கட்டத்தில் இல்லாமை என்பதும் 1960-களில் இல்லாமை என்பதும் மிகவும் வேறுபட்டது.

இல்லாமை எனபது வறுமை என்பதைவிட பற்றாக்குறையே மேன்மையாக இருந்தது. ஒவ்வொரு பொருளும் இருந்த அளவைவிட தேவைகள் அதிகமாக இருந்தது. ஆனால் மிக அதிகமாக மனித நேயம் பல்கிக் கிடந்தது. இருப்பதைப் பகிர்வதும், விட்டுக்கொடுத்து வாழ்வதும் இயல்பாகவே பழகப்பட்டது.

அன்று ஐவர் அம்மா கொடுக்கும் உருண்டை சோற்றுக்கு கை நீட்டும்போது இருந்தது ஒரு நிறைவு. ஒரு தெருவில் ஒரே ஒரு தொலைபேசி இருந்தாலும், நாலு வீடு தள்ளியிருப்பவர்கள் சுவாதினமாய் வந்து உபயோகப் படுத்தினர். அவர்களை ஓடிச்சென்று அழைத்துவர பிள்ளைகளும் துணையாய் நின்றனர். அதேபோல் தொலைக்காட்சிப் பெட்டியில் வெள்ளி மாலை "ஒலியும் ஒளியும்" ஞாயிறன்று "தமிழ்த் திரைப்படமும்" நம்மைவிட நமது சுற்று வட்டார மக்களே நமது கூடத்தில் அமர்ந்து அதிகமாக கண்டு களித்தனர்.

அக்கம் பக்கத்தில் கொடுக்கல் வாங்கல் என்பது விகல்பமில்லா பரிவர்த்தனை. விசேஷ தினங்களில் அண்டை அயலுடன் தின்பண்ட பரிமாற்றம் இல்லாமல் உண்டதாக நினைவே இல்லை. பல கல் தூரம் சென்று உறவுகளுக்கு இனிப்பு, பலகாரம் பரிமாற்றம் செய்வது தலையாய கடமையாய் இருந்தது.

மற்றும் கடன் கொடுக்க தயக்கம் காட்டாத மளிகை கடைக்காரர்களும், திரும்ப வாங்க கெடுபிடி செய்யாதவர்களும் நிறையவே இருந்தார்கள். உதவிக்கரம் கொடுக்க ஓடி வந்தவரகளும், ஒருங்கிணைந்து செயல்பட்டவர்களும், மாலை, மதிய வேளைகளில் கூடிப்பேசி மகிழ்ந்தவர்களும் நிறையவே இருந்தார்கள்.

ஒண்டுக் குடித்தனம் எல்லோரையம் ஒன்றாகவே பிணைத்திருந்தது.

மாறாக இன்றய வாழ்வு முறையையும் எண்ணிப் பார்த்துக் கொள்ளவும்.
--- மு மு

எழுதியவர் : முரளி (3-Sep-14, 9:18 am)
Tanglish : illamai enimai
பார்வை : 353

மேலே