காத்திருக்கும் கன்னி

கண்ணிரண்டில் காதலுடன் காத்திருக்கும் கட்டழகி
கண்டாங்கி கட்டிக் கவர்ந்திடுவாள் - எண்ணற்ற
கற்பனைகள் நெஞ்சிலாடக் கால்கடுக்க நின்றிருக்கும்
கற்பிற் சிறந்தவள் காண் .

செஞ்சாந்து பொட்டுவைத்து செவ்வரளிப் பூத்தொடுத்து
கெஞ்சுவிழிப் பார்வையால் கிள்ளினாய் -மஞ்சுளமே
முத்துநகைப் போட்டவளே முல்லைப்பூ வைத்தவளே
சித்திரமே பெண்ணே சிரி .

பூக்கூடை மெல்லிடையில் புன்முறுவல் பூத்தபடி
ஏக்கமுடன் பார்த்தல் எவருக்காய் ?- சீக்கிரமே
வாரானோ காக்கவே வைப்பானோ அன்றியும்
சேரானோ உன்னைச் செப்பு .

கடிதம் வருமெனக் காத்திருந்து மெல்லத்
துடிக்கும் இதயத்தைத் தேற்றி - அடித்த
மணியோசைக் கேட்டு மலரை, சிலைக்கு
அணிவிக்கச் சென்றாள் அணங்கு .

மஞ்சளிலே பட்டுடுத்தி மாங்கல்யம் சூட்டிட
வஞ்சியைக் கைப்பிடிக்க வந்தானோ ?- கொஞ்சிட
இன்பமது பொங்கும் இசைவெள்ளம் பாய்ந்திடும்
அன்பினால் கூடும் அழகு . .


கன்னியவள் பார்வை கவிதைபல சொல்லிடும்
தென்பொதிகைச் சாரலாய் பூத்தூவும் - கன்னலாய்
தித்திக்கும் வான்மழையும் தேன்சிந்தும் என்றுமே
சித்திக்கும் காதல் சிறப்பு

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (4-Sep-14, 6:43 pm)
பார்வை : 173

மேலே