ஊர்க்கோடி புதுக்கவிதை

*
பொன்னிறமான நெல்மணிகள்
பரந்துவிரிந்தக் களத்தில்
வெயிலில் காய்ந்து காய்ந்து
சூடேறக் கொண்டிருக்கின்றன
மேனிக் கொதிக்க கொதிக்க
வெளியில் சொல்ல முடியாமல்…
*
இன்னொரு பக்கம்
முத்துக் கொட்டைகளாய்
மண்நிறத்தில் வேர்க்கடலைகள்
பரவியிருக்கின்ற பகுதியில்
வேலையாட்கள் பேசிக்கொண்டே
உதிர்க்கும் வார்த்தைகளாய்
காலில் துழாவும் போது
கலகலவென சத்தமிட்டு
சூரிய வெப்ப அனலில்
காய்ந்து தவிக்கின்றன
உள்ளிருக்கும் பதமானப்
பச்சைப் பருப்புகள்.
*
அரைக்கும் மிஷினில்
கூலியாட்கள் வாரிவாரிக்
கொட்டுகிறார்கள் நெல்லை
அரிசி வேறாகவும்
உமி வேறாகவும் பிரிந்துக்
குவிகிறது மனிதர்களி்ன்
உறவைப்போல….
அதே போன்று தான்
வேர்க்கடலை மிஷினும்
பருப்பு வேறாகவும்
பொட்டுக்களை வேறாகவும்
வெளியே தள்ளிகின்றது
குவியல் குவியலாய்…
*
வாலிப ஆண்களும் பெண்களும்
குவிந்த அரிசியை, வேர்க்கடலையை
முறங்களில் வாரிவாரி
கோணியில் போட்டு தைத்து
ஒதுக்கி வைக்கிறார்கள்
எண்ணிக்கைப்படி….
*
முன்னிரவு வேளையில்
வெளியூரிலிருந்து வந்த
லாரியில் மூட்டைகளை
ஏற்றி அடுக்கிறார்கள்
உள்மூச்சு வெளிமூச்சு வாங்க
வியர்வை வழியவழிய
அலுப்பின்றி, களைப்பின்றி…
*

இப்படியெல்லாம்
பரபரப்பாக இயங்கி
பலருக்கும் படியளந்த தொழில்
நலிவடைந்தப் பின் மூடபட்டு,
*
இன்று, இளைஞர்கள், வாலிபர்கள்
எந்நேரமும் சுறுசுறுப்பாகக்
கில்லி, கிரிக்கெட்,
பேட்மிட்டன் விளையாடும்
மைதானமாய் காட்சியளிக்கின்றது
அந்த ஊர்க்கோடி அரிசி ஆலை….!!
*
*

எழுதியவர் : ந.க.துறைவன் (5-Sep-14, 8:19 am)
பார்வை : 88

மேலே