கடவுளும் காதலும்

எப்படி சொல்றது ?
ஏத்துப்பாளா ?
'இன்னிக்கி வேணாம் .
நாளைக்கு சொல்லலாம்'...
தவித்து திணறி,
இறுதியில்
என் உடம்பின்
206 எலும்புகளுக்கும்
துணிவுதந்து
"ஐ லவ் யு"
சொன்னபோது
இரண்டு வருடம்
முடிந்திருந்தது!

பின்னர்
கோயில் , சினிமா
தடம் எண்
23C, 47A
மண்டபம் , கோட்டம்
இக்கின்பாதம்ஸ்
எலியடஸ் கடற்கரை...
பிரதேசங்களில்
காதலை
இதயம் , தேகம்
எல்லாவற்றிலும் சேர்ப்பதற்குள்
நான்கு வருடம்
முடிந்திருந்தது!

பின்னர்
வேலை கிடைத்து
நீ ஒரு ஊர்
நான் வேறூர்
இன்லேன்ட் கடிதம்
ஏக்கமாய் கவிதை
எஸ்பிபி பாட்டு
எஸ்டிடி அழைப்பு
இரவினில் குடித்து,
எஞ்சியதில் உண்டு
பிரிவினில் காதல் பிராண்ட
ஆறு வருடம்
முடிந்திருந்தது.!

பின்னர்
எங்கப்பன்,உங்கப்பன்
ஏத்தமா பார்த்த
சித்தப்பன்
எல்லாரையும்
சந்தித்து
சரிசொல்ல வைத்து
என் சேமிப்பில்
உன் தேர்வில்
குலதெய்வம் கோயிலில்
கோலாகல கல்யாணம்
எட்டாவது வருடம்
இனிதே முடிந்தது.!!

சாதித்துவிட்ட
சேர்ந்துவிட்ட
சந்தோஷத்தில்
நானுன் கரம் பிடிக்க
சன்னதியை
சுற்றும்போது
நீ உரைத்தாய்.!
"இந்த கடவுளுக்கு
நான் நன்றி சொல்றேங்க
நம்ம சேத்ததுக்கு"..!?

உன்கடவுள் மாதிரி
நான் மௌனமாய்
நின்றேன்!

"சாரிடா "
என்று கையை இறுக்கினாய்!
அந்த இறுக்கம்தான்
தெளிவாக தெரிவித்தது.!
காதலின் உறுதியை.
அதற்கான நன்றியை.!

எழுதியவர் : ராம்வசந்த் (7-Sep-14, 9:11 am)
Tanglish : kaathalum katavulum
பார்வை : 383

மேலே