பாரதி - இராஜ்குமார்

சென்னை , திருவான்மியூரில் அமைதியான ஓர் மென்பொருள் அலுவலகத்தில் அந்தி மாலைப்பொழுதில் கணினியோரம் கைப்பேசி ஒன்று
" காதலே காதலே எங்கு போகிறாய் என்
கண்ணையும் நெஞ்சையும் திருடி போகிறாய் "
என சிணுங்க , அவளின் விரல் கைப்பேசி திரைக்கு முத்தமிட , அவளின் காதோடு செம்மொழி தளும்பியது.

நேரம் 5.40 இப்போது கைபேசியில் தன் காதலனோடு பேசிவிட்டு இதழ் புன்னகையோடு வீட்டிற்கு கிளம்ப தயாரான அவளின் பெயர் தாமரை .விரைவாய் கீழ்த்தளம் சென்றவளின் விழிகள் என்றுமில்லா பரபரப்புடன் யாரையோ தேடின ..
இரண்டு நிமிட தேடலுக்கு பின் இதோ அவளின் தோழியை பார்த்துவிட்டாள். வண்டியோடு வந்த அவள் தோழியின் பெயர் துளசி . தன் உயிர் தோழி என்றாலும் இத்தனை நாள் துளசியிடம் சொல்லாத ரகசியம் ஒன்றை இன்று சொல்லப்போகும் பரவசம் தாமரையின் பார்வையில் .

"கொஞ்சம் சீக்கிரம் போப்பா " ( தாமரை )

"என்னடி அப்படி ஒரு அவசரம்" ( துளசி )

"இன்னைக்கு வெள்ளிக்கிழமை பஸ்ஸ புடுச்சி வீட்டுக்கு போகனும்மில்ல "

"அடி பாவி எப்படியும் 11 மணிக்குதான் தாம்பரம் போய் பஸ் ஏற போற ..இப்போ மணி 5.50 தான் ஆகுதுடி "

"சரி நான் சொல்றேன் ..சொன்னா திட்ட கூடாது சரியா "

"சொல்லி தொலைடி , அய்யோ சிக்னல் வேற போட்டுட்டான் அஞ்சு நிமிஷம் ஆகுமே "

உடனே தாமரை தனது கைபேசியில் இருந்த ஒரு போட்டோவை காட்டி
" பேரு மாணிக்கம் ரொம்ப நல்ல பையன் நாங்க இரண்டு பேரும் ஆறு மாசமா லவ் பண்றோம் ..சாயந்தரமே போன் பண்ணி இருந்தான் இன்னைக்கு நைட் ஒன்பது மணிக்கு அவன பாக்க போகணும்..சோ நாளைக்கு காலையில் தான் வீட்டுக்கு பஸ் " என சொல்லி முடிப்பதற்குள் துளசி சட்டென போனை வாங்கி உற்று பார்த்தாள் .

துளசியின் விரல் தளர்ந்துப் போனது இருந்தும் உடனே அருகிலிருந்த பெட்ரோல் பங்கிற்கு வண்டியை விட்டு பெட்ரோல் போட்டவள் பின் கடைக்கு சென்று ஏதோ வாங்கினாள் ..தாமரைக்கு ஏதும் புரியவில்லை ...
மிக விரைவாய் இருவரும் தங்கள் விடுதிக்கு சென்றனர் .

துளசி மிக தெளிவாய் கவனமாய் சில உண்மைகளை சொன்னாள் ..தாமரை அதை அமைதியாய் கேட்க அவளுக்கு அழுகையே வந்து விட்டது ..ஆனால் அழ இது தருணமல்ல என முடிவு செய்து இருவரும் கட்சிதமாய் திட்டமிட்டு செயல்பட முயன்றனர் .

இருவரும் தங்கள் வீட்டிற்கு செல்ல தயார் செய்து பின் திருவான்மியூர் பேருந்து நிறுத்தம் அடைந்த போது நேரம் இரவு 8.45 .
இருவரின் விழிகள் ஒரு தீர்க்கமான முடிவில் இருந்தது எனலாம் .
துளசி வலது புறம் கைகாட்டி சைகை செய்தாள்..பின் துளசி மட்டும் தன் வண்டியில் சென்றாள்...10 நிமிடத்திற்கு பின் தாமரை A51 என்ற தாம்பரம் செல்லும் பேருந்தில் ஏறி விட்டாள். நடத்துனரிடம் ஒரு பயண சீட்டு வாங்கியவள் உடனடியாக அடுத்த நிறுத்தத்தில் இறங்கி யாரையோ தேடினாள்..

ஹ்ம்ம் ..மீண்டும் அதே தோழி துளசி தான் .தாமரை வண்டியில் அமர்ந்துடன்

" வானில் நட்சத்திரங்களின் ஒளியை நசுக்கி நசுக்கி செல்லும் வளர்பிறை வால்நட்சத்திரமாய் விரைந்து சென்றது அவளின் வாகனம் ",
" வலது கையின் ஐந்து விரல் அழுத்தத்தில் அதிவேகத்தில் பறக்கும் இறகானது அவ்வண்டி "
அந்த நெடுஞ்சாலை பாதை கூட துளசியின் விழிக்கு ஒற்றையடி பாதை ஆனது .

பின்னால் அமர்ந்த தாமரைக்கு வண்டியின் வேகத்தைக் கண்டு கொள்ள கண்ணுமில்லை காலமுமில்லை. அவளது விரல்கள் கைப்பேசி திரையை தடவி தடவி பார்க்க , வெண்ணிலவில் இருந்து இருவெந்நீர் ஊற்றுகள் சுதத்திரமாய் சுரப்பதுப் போல் அவள் விழிகளில் வேதனை கலந்த சோதனை .

ஆறுமாதத்தில் தொலைத்த அவளின் இதயம் விம்மி விம்மி விடைகளை காணாத விடியல் ஆனது .
காதலின் அர்த்தம் அறியவில்லை எனினும்,
அதன் "அழகியல் அன்பை தினமும் பனித்துளியில் படுக்க வைத்து ரசித்தவள்" ,
"உறக்கத்தை உடைக்கும் நினைவை நீட்டி பார்த்து நிம்மதி பெறுபவள் ",
அவளின் "விரல் கணுக்களும் காதலுக்கு கவிதை வடிக்கும் வித்தை அறியும் "
இப்படி
"காதலை உயிரில் உணர்ந்து உணர்வில் உருகி போனவள் " தாமரை.

தன் காதலனுக்கு அனுப்பிய குறுஞ்செய்திகளை பார்த்து பார்த்து மனம் நொந்து போக ,
தீயில் சிக்கிய தென்றலின் உணர்வுகளை நெஞ்சில் நிறைப்பினாள் .

பதினைந்து நிமிடமாய் இரவை விரட்டி விரைந்த துளசியின் வண்டி ஒரு மேம்பாலத்திற்கு அடியில் மெதுவாய் நிற்க தாமரை சட்டென விழிகளை துடைத்து இறங்க ,

"பத்திரமா பாத்துக்கோடி " என்றாள் துளசி .

"ஹ்ம்ம்... சரிடி நீ கவனமாய் இரு சரியா " தாமரை .

தன் கைப்பையுடன் நான்கு நிமிடம் நடந்து கொண்டே கைப்பேசியை எடுத்து அழைத்தாள். மறுமுனையில் தாமரைக்கு பிடித்த ,

"வெண் மேகம் பெண்ணாக உருவானதோ
எந்நேரம் எனை பார்த்து விளையாடுதோ " பாடல் ஒலித்தது .

எடுத்ததுடன் ,

"எங்க இருக்கீங்க " .......தாமரை .
"வலது பக்கம் பாரு தாமரை " .....என்றது மறு குரல் .

வலது புறம் சாலை ஓரமாய் ஓர் மகிழுந்து அருகே ஓர் உருவம் கை அசைத்தது ...
அழகாய் நடந்து சென்று மெதுவாய் மகிழுந்தில் அமர்ந்தாள் ..
இதழில் புன்னகை வழிய அருகில் அமர்ந்து கை குலுக்கிய அந்த ஜீவன் தாமரையின் காதலன் மாணிக்கம் தான் ..

"ஹ்ம்ம் ..என்ன ஸ்பெஷல் "........ தாமரை ..
"இன்னைக்கும் எல்லாமே ஸ்பெஷல் தான் " ........மாணிக்.

"சரி எங்க போறோம் இப்போ "

"அப்படியே பேசிகிட்டே போவோம் "

"அதான் எங்கனு கேட்டேன் "

"ஹ்ம்ம் ..இதோ இந்த மலைக்கு மேல இருக்கிற மேனகா ரெஸ்டாரென்ட் ஓகே வா "

"ஹ்ம்ம் ..ஓகே அப்பறம் "

இப்படி இருவரும் பேசிக் கொண்டே அந்த மலைப் பகுதி சாலை வழியாக சென்றனர் ,

மாணிக் ஒரு ஓரமாய் மகிழுந்தை நிறுத்தி

"இது உனக்காக " .......மாணிக் .

"என்ன இது " .......தாமரை .

"ஓபன் பண்ணி பாரு தெரியும் "

"கிப்ட் ரொம்ப நல்லா , அழகா இருக்கு மாணிக் "

"ஹ்ம்ம் சரி சரி ..அடுத்த வாரம் வெளியே போலாமா "

"ஹ்ம்ம் ..போலாம் சனிக்கிழமை ஓகே வா "

"ஓகே "

"மாணிக் இது நினைவிருக்கிறதா "

"நான் வாங்கி தந்த நீலநிற கர்சீப் "

"அதே தான் செல்லம் "

என சொல்லிக் கொண்டே தாமரை , குளோரோபார்ம் நிறைந்த அந்த கைக்குட்டையை அவன் முகத்தில் வேகமாய் வைத்து அழுத்தினாள்...
நடப்பது என்னவென்று புரியும் முன்னே மாணிக் மயங்கி போனான் .
அவன் மயங்கியவுடன் அவனது கைகளை பின் புறமாய் கட்டி இருக்கையில் இருந்து மாற்றி அமர வைத்தாள் . பின் காரில் இருந்து வெளிய வந்து கைப்பேசி எடுத்து யாருக்கோ அழைத்தாள் ..
அழைப்பை யாரும் எடுக்கவில்லை
மேலும் சுற்றும் முற்றும் தன் விழிகளை வேட்டைக்கு அனுப்பினாள் இரவு நேரம் மலைப்பகுதி என்பதால் ஆள் நடமாட்டம் அதிகமில்லை ..

மீண்டும் காருக்குள் விரைவாய் சென்று காரின் கருப்பு கண்ணாடிகளை மூடி தனது மனதை தைரியமாக்கி கொண்டு அவளின் காதலன் மாணிக்கை வெறுப்புடன் பார்த்தாள்.

"உங்களுக்கு எல்லாம் மனசு அப்படின்னு ஒன்னு இருக்கா ..
இல்லா உயிர் மட்டும் தான் இருக்கா ..
ஏண்டா நீங்க எல்லாம் இப்படி இருக்கீங்க ..இருந்து என்னடா பண்ண போறீங்க "

என சொல்லியவள்
தனது கைகடிகாரத்தில் இருந்த நீளமான கம்பியை விரைவாய் வெளியில் எடுத்து அவன் கழுத்தின் அருகே கண நேரத்தில் கொண்டு சென்றாள் ..அதே சமயம்

காரின் கருப்பு கண்ணாடியை ஓர் உருவம் டொக் டொக் டொக் என தட்டியது ..
உடனே தன் நிலையை மாற்றி கண்ணாடியை மெல்ல திறந்தாள் ..திறந்துடன் தாமரை முகத்தின் மீது கையுறை இரண்டை வீசி யாரோ காரில் ஏறினர் ..ஏறியது தோழி துளசிதான் ...

தாமரை கையுறை அணித்து கொள்ளும் போது ,
'எல்லாம் ஓகே வா ".........துளசி
"ஹ்ம்ம் ..ஓகே ..முன்னையே உனக்கு கால் பண்ணேன் " .............தாமரை

"சரி விடு அப்போ நான் டிரைவ் பண்ணிட்டு இருந்தேன் "

"பயமாய் இருக்குடி "

"பயப்படாதடி நான் இருக்கேன் "

"ஹ்ம்ம் ..சரி .."

"நீ காரை அந்த மலை விளிம்புக்கு கொண்டு வா நான் பின்னாடி வண்டியில் வரேன் சரியா "

"ஹ்ம்ம் ..சீக்கிரம் நீ கிளம்பு "

"அந்த தைரியம் வேணும் கண்ணு "

தாமரையின் கால்கள் ஆக்சிலேட்டரை அழுத்தி காரை மெதுவாய் நகர்த்த கார் மலை விளிம்பில் விளையாட்டு பொம்மை போல் நின்றது .
பின் தொடர்ந்த துளசி ஆள்நடமாட்டம் இல்லை என உறுதி செய்ய ,
தாமரையின் மெல்லிய கைகள் வேகமாய் மாணிக்கின் கை கட்டை அவிழ்த்து "படார்" என்ற பயங்கர சத்தத்துடன் கார் கண்ணாடியை உடைத்து அதில் ஒரு பெரிய துண்டு கண்ணாடியை எடுத்து ,
" வினாடிக்கும் விரைவான நேரத்தில் காதலனின் கழுத்தில் கம்பீரமாய் துளையிட்டாள் "
அந்த ஒற்றை துளை வழியில் அவன் உயிர் வெளியேற தாமரையின் காதல் உணர்வின் ஆழம் சொல்லும் கண்ணீர் துளிகள் அத்துளையில் மூழ்கி அவன் இதயம் நனைத்திருக்கும் .
உயிர் பிரியும் முன் ஒரு கண்ணீர் துளியால் காதலை கற்று உலகை பிரிந்தான் அந்த காமுகன் .

உடனக்குடன் தாமரை வெளிய வர , துளசி தாமரை இருவரும் சேர்ந்து விளிம்பில் நின்ற காரை
கையுறையுடன் விரைவாய் தள்ள ,
"விண்ணில் இருந்து ஓர் விண்கல் மண்ணில் மோதி மடிந்தது "போல்
இமைக்குமுன் இல்லாமல் போனது அந்த காரும் தாமரையின் காதலனும் .

மிக வேகமாய் துளசி தன் வண்டியில் தாமரையை அழைத்து செல்லும் வழியில் கையுறைகள் சாக்கடையோடு சங்கமம் ஆனது .
தாமரை பயணசீட்டு வாங்கிய பேருந்து தாம்பரம் வந்த அதே சமயத்தில் இவர்கள் இருவரும் தாம்பரம் வந்து சேர்ந்தனர் நேரம் இரவு 10.20 .

தாமரை சேலம் பஸ் ஏறினாள் ...துளசி தாம்பரத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்றாள் .

அடுத்த நாள் காலை ஈரோட்டில் தனது வீட்டில் குட்டி தூக்கம் போட்ட தாமரையின் காதில் விழுந்த புதிய தலைமுறை செய்தி
"சென்னையில் பல இளம் பெண்களை ஏமாற்றிய வாலிபர் மாணிக்கம் போஸிசார் துரத்தும் போது மலைப் பகுதியில் காருடன் தவறி விழுந்து உயிர் இழந்தார் " என காவல் துறை அதிகாரி திருமதி . பனிமலர் தெரிவித்துள்ளார் .

செய்திக் கேட்டு சிலிர்த்துப் போன தாமரையை அவளின் செல்லப் பெயரான ,
"பாரதி பாரதி "
என அழைத்து கொண்டே அவளின் தங்கை தமிழ் தேநீரோடு வந்தாள் .


......முடிந்தது.......,....

- இராஜ்குமார்

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (9-Sep-14, 2:14 pm)
பார்வை : 429

மேலே