அனுபவம் புதுமை
இன்று - இளங்குமரனுக்கு சந்தோசம் , உற்சாகம் இவற்றின் உச்சியில் இருந்தான் . குளிரத்தான் இல்லை அவனுக்கு.காரணம் கேட்டால் , உலக விதிகள் , நடப்புகளுக்கு உட்பட்டு இருக்கும் காரணம் .
" ஏனெனில் இளங்குமரனுக்கு இளம் வயது வேறு , இளம் வயதில் சந்தோசத்தின் உச்சியில் இருப்பதற்கு என்ன இருக்க போகுது அதே தான் . பெயர் தெரியவில்லை என்றால் இளங்குமரன் கோவித்துக்கொள்வான் .
இளங்குமரனுக்கு அதில் மிக நீண்ட நீள அகல ஆழத்தில் நம்பிக்கை உள்ளது. அவனை பொறுத்தவரை உலகம் முழுவதும் காற்று , நீருக்கு, மாசு கூட அடுத்ததுதான் . அது தான் நிரம்பியுள்ளது. அது அவனை தன்னை அடையாள படுத்தியது. மற்றொரு முகமூடி தந்தது. அந்த முகமூடியுடன் பறவை போல பறந்தான் மேலே மேலே. மேலிருந்து கீழே வரவும், கீழே பார்க்கவும் அவனுக்கு ஆசையில்லை ."
இன்று சுரமஞ்சரியிடம் காலையில் இல்லை! அதிகாலையில் தொலைபேசியில் அழைப்பு வந்தது. "12 மணிக்கு ஆபீஸ்க்கு வந்துரு உன்ட்ட பேசணும்" அழைப்பு துண்டிக்கப்பட்டது. இளங்குமரன் இப்பொழுது " ஹலோ ஹலோ" என்று முனகிக்கொண்டிருந்தான்.
180 நொடிகளுக்கு பிறகு பாதி சுயநினைவுக்கு வந்தான். அவனுக்கு அழைப்பு வந்தது, அதுவும் சுரமஞ்சரியிடம் இருந்து, வரசொன்னது மட்டும் நியாபகம் இருந்தது. எத்தனை மணிக்கு வரச் சொன்னாள் என்பது இல்லை. இருந்தாலும் புரிந்து கொண்டான். அவசரம் இல்லாமல் வர சொல்ல மாட்டாள். அதுவும் இல்லாமல் அந்த குரலில் ஏதோ கோபம் கலந்த கவலை இருந்ததை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.
இருந்தாலும் இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு சுரமஞ்சரியை பார்க்க போகும் மகிழ்ச்சி , குதுகலத்துடன் இருந்தான். அதனால் என்னவோ காலை உணவை எடுத்துக்கொள்ளவில்லை. சந்தோசம் தொண்டையை அடைத்து இருக்கும் போல்.
காலையிலேயே மக்கள் அன்றைய தினத்தை கடப்பதற்கும், ஏதோ ஒரு தேடுதலுக்காக தன்னை பரப்பாக்கி கொண்டு திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் திரிந்தும், அலைந்தும் கொண்டிருந்தனர். கூட்டத்தில் தன்னை ஐக்கியமாக்கி கொண்டான் இளங்குமரன்.
ண்ணா ஒரு ஆனந்த விகடன் குடுங்க" , இல்லப்பா தீந்திருச்சு ".
" அதுக்குல்லவா " இன்னைக்கு வெள்ளிக்கிழமை தானா?
" ஆமா, வெள்ளிக்கிழமைதான் " நீங்க போன வாரம் வரல "
" ஏன் ?"
" வியாழக்கிழமையே தீந்துருச்சு. அன்னைக்கு முத படம் விஜய் தம்பி போட்டோ. இந்த வாரம் அஜித் தம்பி போட்டோ "
இளங்குமரன் சலிப்புடன் கடையை விட்டு நகர்ந்து கோயம்புத்தூர் போகும் பேருந்திடம் தன்னை ஒப்படைத்துக் கொண்டான். பேருந்து புறப்பட தயாராக இருந்தது போல, ஓட்டுனர் இருக்கையிலேயே அமர்ந்திருந்தார்.
இளங்குமரன் ஜன்னல் ஓர இருக்கையை தேர்ந்தெடுத்துக் கொண்டான். கண்ணாடியை மேலே உயர்த்தி நிறுத்தி, பேருந்தில் இருப்பவர்களை கவனிக்க ஆரம்பித்தான்.
" ஓட்டுநர், " ந்தா பெரியம்மா தள்ளி உக்காரும்மா. அந்த புள்ள பாரு என்ஜின் கிட்ட விழுந்துரும் போல, தள்ளி உக்காரும்மா. யாரு அது உன் பேத்தியா ? மருமகளா ?"
" அம்மாங்க, அண்ணாங்கா எனக்கு ஒன்றை கண்ணும்மா, பாக்கமுடியல அம்மாங்க, வேலைக்கு போக முடியல அண்ணாங்கா, நா சாப்டனும் ங்க" இந்த வசனம் பேருந்தின் கீழ்படியின் ஓரத்தில் இருந்து வந்து கொண்டிருந்தது. வசனம் முன்னேறவும் இல்லை , மாறவும் இல்லை"
இளங்குமரன் பணம் கொடுக்கலாமா? வேணாமா? இவன் ஏமாதுக்காரனா, உண்மையிலேயே கண் தெரியாம இருக்குமோ என்று அவனுடைய மூளையும், மனமும் மூன்றாம் உலகப்போர் மாதிரியுடன் சண்டைபோட்டுக் கொண்டது.இளங்குமரனை முட்டாளாக்க விடாமல் மூளையும், மற்ற மனிதர்களை விட தன்னை வித்தியாசப்படுத்த விடாமல் மனமும் சண்டையிட்டுக் கொண்டது.
இறுதியில் அந்த வசனத்தின் உரியவரின் தட்டில் பணமும்,ஒரு மனமும் இருந்தது,அது அவருக்கு தெரிந்து இருக்கும்,மற்றவருக்கு தெரிந்து இருக்க வாய்ப்புஇல்லை
மறுபடியும் தன் ஜன்னல் இருக்கையில் அமர்ந்து கொண்டான்,அவன் மனம் பழைய நினைவுகளை நோக்கி செல்ல தயாராகிக்கொண்டுஇருந்தது,பேருந்தும் கூட
"தம்பி எங்க ? டிக்கெட் "நடத்துனர்
"ஒண்ணு கோயம்புத்தூர்"
பயணசீட்டை பத்திரபடுத்திகொண்டான்,காலணிகளுக்கு விடுதலை கொடுத்தான்.பார்வை கோணத்தை மாற்றி ஓடும் பேருந்து,கட்டிடம்,மரங்கள் தாண்டி முன் நடந்த,உடன் இருந்த சுரமஞ்சரியின் நினைவுகளை தேடிக்கொண்டு இருந்தான்.
ஒரு நிகழ்வு அகப்பட்டுகொண்டது."அன்று சுரமஞ்சரியின் பிறந்த நாள்.கோயம்புத்தூர் சாரல் அன்று பொழிந்து கொண்டுஇருந்தது,இருவரும் சாலையின் தூரத்தை கடந்து சென்று கொண்டு இருந்தனர்,ஒரே வேகத்தில்.
"எனக்கு விஷ் பண்றதுல அவ்ளோ இஷ்டம் இல்லை, நம்பிக்கையும் கூட இல்ல"
"தெரியும் எனக்கு"என்று வாய்திறந்து சொல்லவில்லை
அவளுக்கும் அதில் எந்த ஈடுபாடும் இல்லை,அதனால் தான் அவர்கள் சேர்ந்து இருக்கிறார்கள், இத புள்ளியில் கூட
"ஆனா அதுக்கு பதிலா உனக்கு ஒரு கிப்ட் தரபோறேன்"
"என்னது" வாய் திறந்தாள்,நோட்டம் விட்டாள்,அவன் கை, சட்டை பை, ஒன்றும் இல்லை
"தேடலாம் வேணாம்.நீ அத பாக்க முடியாது "
"அப்டி என்ன " நடையை நிறுத்தி கேட்டாள்.
"இப்போ சொல்றது எப்பவும் மாறபோறது இல்ல,உனக்கு ரெண்டு விஷயம் சொல்றேன்.அதுக்கு முன்னாடி நா சொல்ல போற அந்த ரெண்டு விஷயமும் உன்ன பாத்ததுல இருந்து தந்துட்டு தான் இருக்கேன்,ஆனா சொன்னது இல்ல,இன்னைக்கு சொல்றேன் .இப்ப சொன்னா கரெக்டா இருக்கும்"
"முதல் விஷயம் சுதந்திரம், உனக்கான ப்ரீடம்குள்ள நா எப்பவும் வர மாட்டேன்,ரெண்டாவுது விஷயம் சத்தியம்.இத நா எப்பவும் மீற மாட்டேன், நம்ம கல்யாணத்தப்போ யாரு என்ன சொன்னாலும் நீ என் கால்ல விழவேகூடாது,அப்டி ஒரு சடங்கு இருந்தா நீ அத மறந்துரு,கல்யாணத்தப்ப மட்டும் இல்ல நா செத்தப்பகூடவும்"
சுரமஞ்சரி கண் இமைக்காமல் இளங்குமரனையே பார்த்து கொண்டு இருந்தாள்.அவளுக்கு அது பொது இடம்,மனிதர்கள் பார்பார்கள்,முகம் சுழிப்பார்கள் என்று கவலை கவலை படவில்லை.இளங்குமரனின் வலது உள்ளங்கையில் அழுத்தத்துடன் இதழ் பதித்தாள்.இளங்குமரன் நடுங்கித்தான் போயிருந்தான்.
இந்த நினைவுடன் கண் அயர்ந்து உறங்கிவிட்டான்,சிறிது மணி நேரம் கழித்து விழித்து பார்த்தால் கோயம்புத்தூர் நெருங்கி இருந்தான்,பேருந்தும் .கோயம்புத்தூர் குளிர் காற்று அவனை பரவசமடைய செய்தது.சுரமஞ்சரிக்கு இந்த முறை ஏதும் வாங்கவில்லை அவளுக்காக,அவளும் புரிந்து கொள்வாள்
மாதக்கடைசி பணம் இருக்காது என்று.
ஆனால் அவனுக்கு பசியும் வயிற்றை கிழித்தது,பசிக்கு தெரியாது சுரமஞ்சரியை.இருவரும் சென்று மதிய உணவை எடுத்துகொள்ளலாம் என்று திட்டமிட்டு இருந்தான்,விரைவு பேருந்திலிருந்து நகரபேருந்துக்கு மாற்றலானான்.
"ஆர்.எஸ் புரம் ஒண்ணு குடுங்க "என்று பத்து ரூபாய் நீட்டினான்
"சில்ற நாலு ரூபாய் இருந்தா குடு,இல்லைன்னா கீழ இறங்கு"என்று சொல்லிவிட்டு அடுத்தவரிடமும் அதே வசனத்தை எதிரொலித்தார்,அடுத்தவரிடமும்.....
"அய்யோ காலையிலேயே நோகடிக்கராங்கலே"என்று பணப்பையில் தேடிக்கொண்டு இருந்தான்,கடைசியில் மூன்று ரூபாய் மட்டும் இருந்தது.இதென்ன வம்பாபோச்சு ,ஒரு ரூபாய் எங்க போறது என்று திருட்டு முழியை பிதிக்கு கொண்டு இருந்தான்"
" நா வேலை செஞ்ச இடத்துல கூட இப்டி பயந்துதில்ல,இவனுக்கு எவ்ளோ பயக்க வேண்டியது இருக்கு"என்று முனகிகொண்டே இருந்தான்.நடத்துனர் அருகில் வந்து கொண்டுஇருந்ததை கவனித்தான்.
என்ன தோன்றியது என்று தெரியவில்லை, தன் முன் இருக்கையில் இருந்த பெண்ணிடம் "சில்ற 1 ரூபாய் இருந்தா குடுங்க ப்ளீஸ்,என்ட்ட சில்ற இல்ல" கேட்டே விட்டான்.
அந்த பெண் சற்றும் எதிர்பார்கவில்லை "என்ட்ட இருந்ததையும் வாங்கிட்டாரு, இருங்க பாக்கறேன்" தன் பணப்பையை அலாசிபார்த்த முடிவில் இளங்குமரனுக்கு அதிர்ஷ்டம் இருந்தது.1 ரூபாயும் இருந்தது.
"இந்தாங்க, இருக்கு"
பவ்யமாக வாங்கிகொண்டான் "ரொம்ப தேங்க்ஸ் " மானத்த காப்பத்தீடீங்க" இதை மனதிற்குள் சொல்லிகொண்டான்.
நடத்துனர் அருகில் வந்தார்,ஆர்.எஸ். புரமும் வந்தது.பயணசீட்டை வாங்கிகொண்டு கீழே இறங்கி,சுரமஞ்சரியின் அலுவலகம் நோக்கி நடந்தான்.சாலையின் இருபுறமும் இருந்த மரத்தின் நிழலும்,காற்றும் அவனுக்கு இதம் அளித்தது.
அலுவலக வரவேற்ப்பரையில் தன்னை அறிமுகப்படுத்திவிட்டு சுர்மஞ்சரிக்கு சின்னசெய்தியும் அனுப்பிவிட்டான்.ஆனால் இன்று காலையில் அந்த ஒருமுறை தவிர மற்ற எந்த அழைப்பும் வரவில்லை.ஒரு சின்னசெய்தியும் கூட வரவில்லை.என்ற கேள்வியும் அவனுள் எழுந்தது.
மெதுமெது இருக்கையில் அமர்ந்து இருந்தான்.சுரமஞ்சரியின் வருகைக்காக காத்து கொண்டு இருந்தான்.தன் பார்வையை மாடிப்படியில் வைத்து கவனித்துக்கொண்டு இருந்தான்.
வருவது சுரமஞ்சரிதான், பார்த்துவிட்டான்.முகத்தில் நண்பகல் வெளிச்சம்,அவனது முகத்தில் பிரதி பலித்தது,எழாவுது படிக்கட்டில் நின்றிருந்ததாள்.ஆனால் அவள் முகத்தில் கோபத்தின் அங்க அடையாளங்கள் நிர்வாணமாக தெரிந்தது.ஒவ்வொரு படிக்கட்டு குறைய குறைய கோபத்தின் உச்சியில் செல்வதை இளங்குமரனுக்கு தெரியவும் செய்தது,பயக்கவும் செய்தான்,எழுந்து நின்று கொண்டான்.
இரண்டாவுது படிக்கட்டில் :சுரமஞ்சரி சாப்ட கிளம்பிட்டயாம்மா"அக்கறையுடன் கேட்டார் அலுவலகத்தில் வேலை செய்பவர்.பாவம் அவருக்கு தெரியவில்லை,கோபத்தில் இருந்தது.
"ஆமா ஸார், கெஸ்ட் வந்து இருக்காங்க,அவங்ககூட சாப்டனும்.வெளிய போறோம்" அந்த படிக்கட்டில் கோபம் இல்லை.முதல் படிக்கட்டில் மீண்டும் எல்லை தொட்டதை இளங்குமரன் கவனித்துக்கொண்டு இருந்தான்.தன் அருகில் வந்து நின்றாள்.
அதுவரை வரவேற்ப்பரையில் இருந்த சிரித்த முகமும்,சப்தமும் அடங்கி போனது.அதற்கு காரணம் இளங்குமரனின் கன்னத்தில்
"பளார் "என்ற அரை கன்னத்தில் விட்டால் சுரமஞ்சரி
அதிர்ந்து போனான் இளங்குமரன்,ஆடியும் போயிருந்தான்.அன்று வரவேற்பறையில் அடியும் விழும்
என்று அனைவரும் உணர்ந்து இருந்தனர்.இளங்குமரனுக்கு ஒன்றும் புரியவில்லை,பேசவுமில்லை .
"வெளிய பக்கத்துல ஒரு கோவில் இருக்கு அங்க போலாம் "என்று இழுத்துச்சென்றாள் சுரமஞ்சரி.
செல்லும் வழியில் ஒரு வார்த்தை கூட பேசவேயில்லை இருவரும் .இளங்குமரன் மனதில் ஆயிரம் கேள்விகள் உதித்து கொண்டு இருந்தது.அதற்கான விடைகள் அனைத்தும் சுரமஞ்சரி தருவாள் என்றே இருந்தான்.இருமுறை அவள் முகத்தை பார்த்தான் செல்லும் வழியில்,அதே கோபம் சிறிதும் மாறவில்லை.கோவிலினுள் நுழைந்துனர்,பிரகார தூணில் சாய்ந்தவாறு நின்று கொண்டாள் சுரமஞ்சரி.
அவளுக்கு எதிரே உள்ள தூணில் சாய்ந்தவாறு அமர்ந்து கொண்டான்.கோவிலினுள் கூட்டம் அதிகமாக இல்லை,நடை சாத்தீருப்பார்கள் போல்.
"என்ன எப்போ கல்யாணம் பண்ண போற" சுரமஞ்சரி
"அதுக்காகவா அடிச்ச"
"நா இந்த கேள்வி கேக்கலையே"
"அடுத்த வருஷத்துல பண்ணிரலாம், சரி எதுக்கு அடிச்ச "
"இல்ல இன்னும் நாலு மாசத்துல பண்ணிரலாம்"
"நாலு மாசமா? ஏன்? அதுக்குள்ள என்ன அவசரம்...?
"கண்டிப்பா காரணம் சொல்லனுமா?இல்ல நீ இப்ப கேட்ட கேள்விக்கு பதில் சொன்னா மட்டும் போதுமா?"
சுரமஞ்சரியின் கோபம் இன்னும் குறையவில்லை.
"பதில் வேணாம்,காரணம் சொல்லு"இளங்குமரனுக்கு இப்பொழுதுதான் கோபமே வர ஆரம்பித்தது.
"சில விஷயங்கள் நமக்காக வாழலாம்,இருக்கவும் செய்யலாம்.ஆனா என்னால ப்ராக்டிகல் லைப்ல, ஒரு சில விஷயங்கள் நலுபேருக்காக நா இருக்கேன், அதுதான் எனக்கும் சந்தோசம்,அதனால அவங்க என்ன சொல்ல வர்றாங்கனு கேக்க வேண்டியது இருக்கு"
"சரி அந்த நாலுபேரு சீக்கிரமா கல்யணம் பண்ண சொன்னாங்களா ?" இளங்குமரனுக்கு சிறிதும் புரியவில்லை.
"ஆமா "
"எதுக்காக ? இப்ப பதில் சொல்லு"
"நீ என்ன கட்டி பிடிக்கறப்ப உனக்கு கஷ்டமா இருக்குமா"? சுரமஞ்சரியின் கோபம் ஆவியாகியது.குரலில் குழந்தைத்தனம் இருந்தது.
"அப்டிலாம் இல்ல,ஆனா கொஞ்சம் கஷ்டம் தான்,,,,,எனக்கு புரியல இதுக்கும் கல்யாணத்துக்கும் என்ன முடிச்சு" இளங்குமரனின் கோபம் நெற்றியில் இருந்தது.
"புரியலையா.... உனக்கு?நா இப்பவே இவ்ளோ குண்டா இருக்கேன்,வயசு கம்மி,ஆனா பாக்கறதுக்கு இப்பவே ஆண்ட்டி மாதிரி இருக்கேன்,கல்யாணத்துக்கு அப்புறம் குழந்தைன்னு வர்றப்ப ரொம்ப குண்டா இருப்பேன்,இது குழந்தைக்கு கஷ்டம்.." "இத உன் முதுகு பின்னாடி சொல்றத விட உன் முகத்துக்கு நேரா
வந்து அந்த நாலுபேரு சொல்றப்ப எப்டி இருக்கும் தெரியுமா.கூனி குறுகி போயிருவேன்.பேச்சே வராது."
சுரமஞ்சரி இதை சொல்லும் போது நொறுங்கி போயிருந்தாள்.
"இதுதான் பிரச்சனையா...?இதை பத்தி நான் தான் பேசணும்.ஆனா எனக்கு அது தோணவே இல்ல,அப்டி தோணவும் தோணாது.நீ எப்டி இருந்தாலும் நா உன்னதான்....சரி இதெல்லாம் உனக்கு சொன்னதான் புரியுமா...?"
"சுரமஞ்சரி,இளங்குமரனிடம் எப்படி எடுத்துசொல்லி புரியவைப்பது என்று தெரியவில்லை,ஆனால் அவளின் மனச்சுமை இப்பொழுது குறைந்து இருக்கும்.
"எனக்கு புரியலைன்னு நினைச்சுக்கோ,ஆனா நாம அடுத்த நாலு மாசத்துல ஒண்ணாத்தான் இருக்கணும் . நீ இப்ப கிளம்பு "என்று கட்டளையிட்டு பின் பார்க்காமல் அலுவலகம் நோக்கி நடையை கூட்டினாள்.
இளங்குமரனுக்கு என்ன செய்வதென்று தெரியவும் இல்லை,கோபத்தின் உச்சியில் இருந்தான்,அன்று காலை உணவும் எடுத்துக்கொள்ளவில்லை."ஒரு மனிதனின் கோபத்தை அறிய வேண்டுமெனில் பட்டினியோடு இருக்கும்போது அவனுக்கு பிடிக்காததை செய்து பார்த்தால் தெரியும்."இந்த நிலையில் தான் இருந்தான் இளங்குமரன்.
அவனுக்கு கோபத்தை விட பசி அவனை ஒரு டீக்கடையை நோக்கி நகர வைத்தது.
"ண்ணா ஒரு காபி குடுங்க"....அவன் மனம்,மூளை இரண்டும்,இதெல்லாம் ஒரு பிரச்சனையா?,இல்ல நமக்குதான் புரியலையா? அதுக்காக.... எதுக்கு அடிக்கனும்.அவ்ளோபேர் பாக்க?"இந்த மாதிரி பல கேள்விகளை கேட்டுகொண்டே இருந்தது.
"காபி எடுத்துகோங்க "கடைக்காரர்.
இளங்குமரனின் முதுகை யாரோ தட்டுவது போல் இருந்தது,திரும்பி பார்த்தான்.
"ஸார்"... வலது கையை ஒரு குழி தட்டு போல் நீட்டினார் பெரியவர்.
"சில்லறை இல்ல" இளங்குமரன்
"ஸார், சாப்டல,பசிக்குது எதாவுது குடுங்க ஸார்" பாவத்தின் எல்லையின் முகபாவனையில் கேட்டார் பெரியவர்.
"இல்லைன்னு சொல்றேன்ல.. போ"இளங்குமரனின் மனம் இங்கு இல்லை
"ஸார் எதாவுது வாங்கி..."என்று முடிப்பதற்குள் இளங்குமரனின் கை அந்த பெரியவரின் கன்னத்தில் இருந்தது பலத்த சப்தத்துடன்"
"அடிங்க ஸார் இவனுங்கள...இப்டிதான் வர்றவங்க,போறவங்கள டார்ச்சர் பண்றான் இந்த கிழவன்.அந்த கன்னத்தலையும் ரெண்டு போடுங்க ஸார்" என்றான் ஒரு மனிதன்.
"இளங்குமரனின் கை ரேகை ஜாதகம் பார்க்கவேண்டுமென்றால் அவரின் கன்னத்தை பார்த்தால் போதும்,துல்லியமாக கணிக்கலாம்."
அந்த கிழவரிடம் எந்த எதிர்ப்பும் இல்லை,அமைதியாய் நகர்ந்தார், அருகில் இருந்த மரத்தடிக்கு.
"இளங்குமரனுக்கு ஒரு வித குற்ற உணர்வு ஏற்ப்பட்டது.இப்பொழுது கோபம் இல்லை,ஆத்திரம்,கோபம் தன்னை முட்டாளாக்கியதை உணர்ந்தான்.மன்னிப்பு கேட்க வேண்டும் " அவரை நோக்கி சென்றான்.
"ஸாரி தாத்தா, நான் பண்ணது ரொம்ப தப்பு, நா என்ன சொல்றது, கோபம் யாரோமேல,உங்க மேல காட்டிட்டேன்,ரொம்ப ஸாரி தாத்தா"இளங்குமரனின் கண் கலங்கியது,வார்த்தைகளை அவனால் கோர்த்து பேசமுடியவில்லை,அவர் அருகேயே அமர்ந்து கொண்டான்.இருவரும் பேசவேயில்லை ,கல்லறை மயக்கம் நிலவியது.
"பரவாஇல்லப்பா, தெரியாமத்தான" என்றார் பெரியவர்
இளங்குமரன் இப்பொழுது பொது நிலைமைக்கு திரும்பினான்.
"வாங்க தாத்தா, நா வாங்கித்தறேன்,எந்திரிங்க "
"இல்லப்பா,பசி போயிருச்சு " சிரித்து கொண்டே சொன்னார்
"தாத்தா உங்க கூட யாரும் இல்லையா? உங்க பேமிலிலாம் இல்லையா ?"வினோத கேள்வி கேட்டான்
பெரியவரிடம் கடும் அமைதி,அவனை ஒருமுறை பார்த்துவிட்டு தலைகுனிந்து கொண்டார்.பேசவே இல்லை.
"உங்களுக்கு சொல்லனும்னு தோணுதுனு நினைக்கறேன்,ஆனா சொல்லமட்டேங்கறீங்க"
"இப்பொழுதும் பேசவே இல்லை பெரியவர்"
"சரி தாத்தா ரொம்ப ஸாரி, நா வர்றேன்"கிளம்ப எழுந்தான்
"அம்மையப்பன் பேரு"
"அந்த வேகத்திலேயே அமர்ந்தான் இளங்குமரன்"
"நா, பாப்பாத்தி ,மூர்த்தி நாங்க மூணு பேருதான்.மூர்த்தி ஒரே பையன்.பாப்பாத்தி என் வீட்டுக்காரம்மா ,சொந்தமா வீடு,தோட்டம்லாம் இருந்துச்சு.மழை போச்சு,விவசாயம் போச்சு,கூடவே மூர்த்தி வேலைக்கு திருப்பூர் போய்ட்டான்,அப்றம் சந்தோசம் மட்டும் எங்க இருக்க போகுது.
ரியல் எஸ்டேட்னு வந்தாங்க,கம்மியான காசுக்கு சொந்த நிலம் போயிருச்சு.அந்த காசு இருக்கறவரைக்கும் வீடு இருந்துச்சு.காசும் போயிருச்சு,அதனால வீடும் போயிருச்சு.ரொம்ப வருஷமும் போயிருச்சு.கொஞ்ச நாள் மூர்த்திகிட்ட இருந்து பணம் வந்துச்சு.அப்றம் வரலள், ஒரு தகவல் வந்துச்சு,மூர்த்தி இந்த மாதிரி ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிட்டான்,அப்டினு
பாப்பாத்தி அவன் மேல ரொம்ப பாசம்,ஒரே பையன் வேற அப்டியே இருந்துட்டா,என்னாலயும் அங்க இருக்க முடியல,திருப்பூர் வந்தோம் மூர்த்திய தேடிகிட்டு,தங்கறதுக்கு வீடு இல்ல,தெருவலதான் இருந்தோம்,ஒரு வழியா மூர்த்தி வேலை செஞ்ச கம்பனிக்கு போய் கேட்டோம்,மூர்த்தி எப்பவோ கோயம்புத்தூர் போயிட்டதா சொன்னாங்க."
"சரி நம்மால காசு இல்லாம தேட முடியாதுன்னு,நா ஒரு கம்பெனிக்கு வாட்ச்மேனா போனேன்,அப்டியே ரெண்டு மாசம் போயிருச்சு,அப்பா ஒரு நாள் நானும்,பாப்பாத்தியும் ரோட்ல நடந்து போயிட்டு இருக்கறப்ப மூர்த்தியோட ப்ரெண்ட பார்த்தோம்.
"உங்க பையன் மூர்த்தி கிடைச்சாரா "கதையின் உள்ளே சென்று கேட்டான்
"இல்ல,ஆனா...அவன் கிடைக்கல ,பாப்பாத்தி போய்ட்டா , சுயநினைவு இல்லாம போய்ட்டா.. அந்த தகவல் கேட்டதும் .பூமியை பார்த்தே சொன்னார் பெரியவர்.
"ஏன் என்னாச்சு?"
"மூர்த்தி போன வருஷம் லாரில அடிபட்டு இறந்துட்டான்..சொன்னத கேட்டு பாப்பாத்தி அப்ப இருந்து "கோயம்புத்தூர் போகணும் ,கோயம்புத்தூர் போகணும் "இதையே திருப்பி திருப்பி சொல்ல ஆரம்பிச்சுட்டா "சொல்லிமுடிக்கும்போது "அம்மையப்பரின் கண்ணீர் பூமியை நனைத்தது,இளங்குமரனின் கண்ணீர் கூட".
"சரி பையன் போய்ட்டான்,இவளவாவுது பாத்துக்கலாம்னு ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தோம்.ஒரு நாள் வேலைக்கு போயிட்டு வந்து பார்த்தா வீட்ல பாப்பாத்தி இல்ல.அக்கம் பக்கம் விசாரிச்சப்ப தெளிவு கிடைக்கல.அப்றம் பஸ்ஸ்டாப்ல வந்து கேட்டப்ப "அடையாளம் வைச்சு பார்த்தா அந்தம்மா கோயம்புத்தூர் பஸ் ஏறினாங்க"அப்டினு ஒரு டிரைவர் சொன்னாரு.நானும் அப்டியே கிளம்பிட்டேன் கோயம்புத்தூர்க்கு.
"இங்க ஊரும் பெரிசு,என்னால வேலைக்கும் போக முடியல, ஒரு நேரத்துல பசி பொறுக்கமுடியல, அப்ப கையை நீட்ட ஆரம்பிச்சேன்"என்று சொன்னவாறு தன் கையை பார்த்தார் அம்மையப்பர்"
"இன்னும் அவங்க கிடைக்கலையா"தழுதழுத்த குரலில் கேட்டான் இளங்குமரன்.
"இல்ல,ஆனா நா சாகறதுக்குள்ள பார்த்துடுவேன்னு நம்பிக்கை இருக்கு,ஏன்னா என்ட அது மட்டும் தான் இருக்கு" என்று கூறியவாறே சாலையின் நீளத்தை பார்த்தார்."
"உன் பேரு கூட என்னான்னு எனக்கு தெரில,ஆனா நீ ஒரு பிரச்சனைல இருக்க,அது மட்டும் தெரியுது,ஒண்ணு மட்டும் சொல்றேன் ,எப்பவுமே நமக்கு பிடிச்சவங்க பக்கத்துல இருக்கறப்பவே சந்தோசமா இருக்க பழகிக்கங்க.என்ன மாதிரி அவங்கள தொலைச்சுட்டு தேடிட்டு,கஷ்டபடாம இருங்க " அம்மையப்பர்
இந்த விஷயம் இளங்குமரனுக்கு பொருந்தவும் செய்தது" மௌனமாகவே இருந்தான்.
"என்னோட கஷ்டத்தை உன்ட்ட சேர்த்துடேனா"
"அப்டிலாம் இல்ல தாத்தா ,சரி நா வர்றேன் தாத்தா"ஒரு குற்ற உணர்வுடன் திரும்பினான்.
"ஸார்...கொஞ்சம் இங்க வாங்க "என்று இரண்டு அடி தூரம் நகர்ந்தவனை அழைத்தார் பெரியவர்.
"பாப்பாத்தி சுருள் முடி,வலது கன்னத்துல ஒரு தழும்பு இருக்கும்,அப்றம் ....அப்றம் என்ன ஒல்லியா இருப்பா,சேலை கிழிஞ்சு இருக்கும்,குளிச்சு இருக்கமாட்டா...இந்த அடையாளத்தோட யாராவுது இருந்தா எனக்கு தகவல் சொல்றியாப்பா,நா இங்க தான் இருப்பேன்,"அமர்ந்திருந்த அம்மையப்பர் எழுந்து நின்று
இளங்குமரனின் கன்னத்தில் ஒரு அரை விட்டார்,இப்பொழுது அம்மையப்பரின் கைரேகையை இன்னும் அழுத்தமாக இளங்குமரனின் கன்னத்தில் பதித்தார்.
இளங்குமரனுக்கு இப்பொழுதுதான் சந்தோசம்,இது அம்மையப்பருக்கும் புரியும்,அடியை வாங்கி கொண்டு "கண்டிப்பா சொல்றேன் தாத்தா "என்று கிளம்பினான் சுரமஞ்சரியின் அலுவலகம் நோக்கி...
( இது ஒரு உண்மை கதை )
நன்றி ,
பெயர் தெரியாத அந்த பெரியவருக்கு (இன்னும் தேடி கொண்டுதான் உள்ளார் கோயம்புத்தூர்-இல் )