நாடன் வயிறும் பாமரத் தீனியும்

பொரிச்ச கோழி பொசுக்குதுங்க
அடைச்சமாவு புழுங்குதுங்க
அஜினோமோட்டோ வேகவச்ச
அறைசாண் குழாய் அழுகுதுங்க.....!!
பசிச்சா மட்டும் பந்திபோட்டு
பக்குவமா வாழ்ந்த கதை... இது
ருசியப்பிச்சி பங்குவச்ச
பாமரத்தா(ன் ) எம்பாட்டங் கதை...!!
இளங்கால நீர்க்கஞ்சி
எளஞ்சூட்டு வரத் தண்ணி
வழிப்போக்கு வாய்க்காலோரம்
கொறிச்சி நடக்க தட்டப்பயிறு(மா)
தொடங்கியிருந்த வாழ்க்கை...!!
தெணைமாவுக் களியோட
தேங்காப்பூத் தொவையலுமா
திண்ணையில நா மடங்கி
தெகட்டத் தெளியக் குடிச்சிருப்பேன்...
முற்பகலு வரப்புமேல
பொற்பனையா நீயும்வர
பனங்காயா சோத்துக்கூடை
சல்லிவேரா கொலுசுக்காலு....!!
மஞ்சத்தாலி மினுமினுக்க
மசக்கவயித்த பிடிச்சிகிட்டு
மஞ் சட்டி தூக்கிவர
மெத்தையாகும் பச்சைப்புல்லு...!!
உப்புகுடிச்ச கருவாடு
உசுருக்குள்ள இனிக்குதடி ..
எண்ணகுடிச்ச கத்தரியும்
ஏர் இழுத்து நிறுத்துதடி....!!
என்னோட சேந்துகிட்டு
சொறேறக்கும் எறும்புக்கூட்டம்
எட்டடில தள்ளிநின்னு
காவக்காக்கும் சாம்பக் காக்கா...!!
எனக்கும் எறும்புக்குமா
எண்ணி எண்ணி கவளம் ரெண்டு
இடுப்பு கடுத்த காக்காய்க்கும்
ஏந்தி ஊட்டும் வளையல் கையும்...!!
ஏதாவது தீவளிக்கி
இட்டிலிய நாம்பாப்பேன்
தோசையத்தா இழுத்துருப்பே (ன் )
தொடர்ந்துவருங் கார்த்திகைக்கு...!!
திருவிழாக்கோ தீமிதிக்கோ
பூக்கவடிச்ச புதுச் சோறும்
பொசுபொசுன்னு ஆட்டுக்கறியும்..
கூடவே கோத்துக்கிரும்
கொழகொழன்னு கோழித்தொக்கு...!!
அவிச்ச கெழங்கு ஏப்பத்தோட
அரை நெல்லிச் சாறுகுடிக்க...
அமிர்தமா எறங்கி நின்ன
அந்த வாழ்க்க எங்கிருக்க....?