என் மனம் என்னும் பாஞ்சாலி

காலம் என்னும் சகுனியால்
கவர்ந்திழுக்கப்பட்ட என்
புலன்கள் என்னும் பாண்டவர்கள்!
அவர்களின் எதிர் வரிசையிலே
ஓர் ஆயிரம் கௌரவர்கள் எண்ணங்களாக
கர்வம் என்னும் துரியோதனன் தலைமையில்!
அங்கே உணர்வு என்னும் பீமன்
பார்வை என்னும் விஜயன்
கேள்வி என்னும் சகாதேவன்
வார்த்தை என்னும் நகுலன்
அறிவு என்னும் தருமன்!
எண்ண கௌரவர்கள் ஆர்பரிகிரார்கள்!
சூது ஆரம்பிகிறது !
விதி என்னும் பகடை உருட்டபடுகிறது !
இழப்பதற்கு தயாராகிறான் தருமன் !
எல்லாம் இழந்த பின்
மனம் என்னும் பாஞ்சாலி இழக்க படுகிறாள்!
இழுத்து வா என்கிறான் என் கர்வம் என்னும்
துரியோதனன்!
எனக்குள்ளே உருவான அந்நியன் அவனே!
கேட்கிறாள் பாஞ்சாலி
உங்கள் ஐவரின் துணையாக
வழி நடத்தி சென்றேனே!
காலம் என்னும் சகுனியால்
விதி என்னும் பகடை ஆட்டம் ஆடியது ஏனோ!
எண்ணமென்னும் கௌரவர்கள் என்னை
ஏளனம் செய்ய காத்திருகிறார்கள்!
அறிவென்னும் தருமரை கேட்கிறாள்!
"என்னை இழந்து நீர் தன்னை இழந்தீரா?
தன்னை இழந்து நீர் என்னை இழந்தீரா?"
அறிவை இழந்த பின் மனம் தான் வாழுமா?
மனதை இழந்த பின் அறிவு தான் நிலைக்குமா?
பார்வை என்னும் விஜயனை
பீமன் என்னும் உணர்வை தாண்டி
கேள்வி என்னும் சகாதேவனை
வார்த்தை என்னும் நகுலனாக்கி
ஆத்மா என்னும் கடவுளை நோக்கி
தூது அனுப்புகிறாள்!
அப்போது தான் அறிவு என்னும் தருமனும்
மனம் என்னும் பாஞ்சாலியும்
ஆத்மாவை தரிசனம் செய்கின்றனர் !
அவள் மானம் காக்கப்பட்டு
என் கர்வம் என்னும் துரியோதனன் வெளியேறுகிறான்!

எழுதியவர் : sai (11-Sep-14, 5:29 pm)
பார்வை : 116

மேலே