முதிர்காலக் காதல்

பதினாறு ... அல்லாது
பதினேழாவதாக இருக்கும்...!

அன்றும்கூட
அப்படித்தான்... என்
ஒற்றைக்கால் மடிந்த
தூக்கங்களிலிருந்து
கெண்டைக்கால் சதைகிள்ளி
எழுப்புகிறாய்....!!

பழகிப் போயிருந்த
வலிக்கு பதட்டமாய்
எழத் தெரியாமல்...ம்ம்ம்ம்...
இன்னும் கொஞ்சநேரமென
தலையணை
இறுக்குகிறேன்.....!

அரிசிமூட்டையென நீ
பரிகசித்து தலைகுட்டி
தூக்கி நிறுத்துவது
இரசிப்பதெற்கெனவே... சரிந்து
விழுந்து கொண்டிருக்கிறேன்
நான்....!

ஒரு ஒற்றை முதலிரவு
ஆதியாய் பிரசவித்திருந்த
நெருக்கங்களை
வழக்கமெனப் படுத்தி...
காதெலனப் பெயரிட்டிருந்தோம்
நாம்...!!

இன்றும்... இன்னும்...
ஒரு காதுமடல் ஓரத்தில்
பதுங்கியிருக்கும் உன்
வெட்கம்..... நொடியில்
பரவி வளர்கிறது
தேநீர்க் கோப்பைகளுடனான
என்
புருவத் தூக்கியசை
ஏறிடுதல்களில்............!

ஐந்துக்குக் கூடாத
குறையாத .. இட்டிலிக்
கணக்குகள்... மல்லி சாம்பார்
என எதுவும்
மாறியிருக்கவில்லை...!!

இப்பொழுதும் நீ
கைத்துண்டு மறுக்கிறாய்...
அனிச்சையாய் என்
கைகள் தேடுகிறது
உன் முந்தானைகளை....!!

மதியச் சோறு பிரித்தல்களில்
எந்நாளும் எனக்கு
சலித்திருந்ததில்லை.....
பதமும்...!. பசியும்....!!
நானும் கூட
அப்படித்தான் உனக்கு..என
இருந்திருக்கலாம் ...

பேருந்து நெரிசல்கள்
பிடித்திராத எனக்கு...
விதிகள் இடாமல்
தேவையாய் இருக்கிறது
உன் தோள்பற்றல்
அணைத்தல்களூடான
ஒரு
மாலைத் தேநீர்....!!

எப்போதும் போலவே
இன்றைய இரவு
நெருக்கங்களில்...... முன்நெற்றிக்
கூந்தல்
வருடிப் பிரிக்கிறேன்...!நிலவொளியை
எட்டிப் பார்த்திருந்தது
ஒருகற்றை நரை....!!

கெக்கலித்துச் சிரித்த
என்னை வாய்பொத்தி
முத்தமிட்டிருக்கிறாய்
காதோர நரைகளில்....!!

இப்படியே கழிந்திருக்க
வேணும்... ஒவ்வொரு நாளும்
திருமண நாளாய்...!!

எழுதியவர் : நல்லை.சரவணா (12-Sep-14, 10:29 pm)
பார்வை : 288

மேலே