உனக்கே உனக்காய் ஆசைப்பட்டு

அதிகாலை எழுந்து வாசலில் கோலமிட்டேன்
என் கன்னத்திலும் மாக்கோலமிட்டு கொண்டேன்
சிரித்தபடியே கண்களை தேய்த்து நிற்பாய்
உன் கலை ரசனைக்காக ஆசைப்பட்டு....!

பிரதிபளிப்பும் நானும் மாறி மாறி
சில அலங்காரம் செய்து கொண்டோம்
எனதருகே நீனின்று என் பிரதிபலிப்பை
கேலிசெய்யும் உன் அழகிற்காக ஆசைப்பட்டு....!

வேண்டும் என்றே தேநீரில் இனிப்பையும்
சாப்பாட்டில் உப்பையும் சற்று குறைத்தேன்
உன் எச்சில் உணவை கட்டாயப்படுத்தி
நீயே ஊட்டி விடுவதற்காக ஆசைப்பட்டு....!

பூசையறையில் உனக்கான வீண்போகாத வேண்டுதல்கள்
அந்நொடியே சின்னதாயொரு ஓரக்கண் பார்வைகள்
என் அழகை ரசித்தபடி அத்தனை சிறப்பான
அதிசய உடனடி வரங்களுக்கு ஆசைப்பட்டு....!

மறதியாய் நீ மறந்து செல்வதற்காகவே
சிலவற்றை மறைத்துவைப்பேன் எனக்கு மட்டுமே
தெரியுமென்று எண்ணி நீ தேடச்
சொல்வாய் அந்த அறியாமைக்கு ஆசைப்பட்டு....!

அனைத்து வைக்கப்பட்ட கைபேசிக்கும் எக்கச்சக்கமாய்
அழைப்புகள் கடைசியாய் ஓர்குறுஞ்செய்தியும் கைகோர்த்து
உரிமையாய் சிலவார்த்தைகள் முன்னும் பின்னுமாய்
சேர்த்து சில சிணுங்கலுக்கு ஆசைப்பட்டு...!

சலித்து சத்தம் போட்டு உடைத்து
வேலைகள் செய்வேன் முனங்கிக் கொண்டே
குட்டி குட்டி சண்டைகளோடு வரும்
சிலகொஞ்சலுக்கும் சிலகெஞ்சலுக்கும் அளவாய் ஆசைப்பட்டு....!

தெரியாது என்பதையே முழுதாய் அறிந்தேன்
கன்னத்தை கிள்ளியபடி செல்ல கொட்டுகளோடு
தெனாவட்டாக திட்டி சொல்லிக் கொடுப்பாய்
அந்த அதிகபடியான அதிகாரத்திற்கு ஆசைப்பட்டு....!

எழுதியவர் : மணிமேகலை (14-Sep-14, 8:09 pm)
பார்வை : 570

மேலே