தொலைக்காட்சியாக

தொலைக்காட்சியில்
சரோஜா தேவி
பத்மினிகளைப்
பார்க்கும்போதெல்லாம்
தனது பால்யத்தைப்
பூக்கின்றன
தாத்தாவின் உதடுகள் !
பிற்பகல்களில்
ஒளிபரப்பாகும்
சிவாஜி படங்களுக்கு
முந்தானையால்
கண்துடைத்து
மூக்குச் சிந்திக்கொண்டிருக்கிறது
ஆயா !
எந்த
நெடுந்தொடரிலாவது
என் வயதொத்தவனுக்கு
ஏதேனும்
இன்னல் நேர்ந்தால்
அம்மாவிடமிருந்து
வந்துவிடுகிறது
போன் !
சூரிய வம்சம்
படம் பார்த்து
தன்னிச்சையாய் வழியும்
கண்ணீரை
என்னைப் போலவே
துடைத்துக் கொண்டிருக்கக்கூடும்
அங்கே அப்பாவும் !
கிரிக்கெட்
பார்க்கும்போதெல்லாம்
சிநேகிதனாகிவிடுகிறார்
சித்தப்பா !
இப்போதும்
பழைய
ரஜினி படங்களுக்கு
வாய் நுனிவரை
வந்தே விடுகிறது
விசில் !
செய்து காட்டப்படும்
சமையல் குறிப்புகளுக்கு
பேனாவும்
பேப்பருமாக
வந்து நின்றுவிடுகிறாள்
தங்கை !
அரவிந்த சாமி
படம் போட்டால்
ரிமோட்டைப்
பிடுங்கிக் கொள்கிறாள்
மனைவி !
காதலின் தீபமொன்று
பாட்டை
என்னைப்போலவே
வெறித்துக்கொண்டிருக்கக்கூடும்
எங்காவது
" அவளும் " ..............
இப்படியாக ,
தொலைக்காட்சியாக
நிறைந்து கிடக்கிறோம்
நாம் !
நாமாக
நிறைந்து கிடக்கிறது
தொலைக்காட்சி !
========================
குருச்சந்திரன்