பெருமையோடு விடைப்பெறுகிறேன் அம்மா - இராஜ்குமார்
![](https://eluthu.com/images/loading.gif)
பெருமையோடு விடைப்பெறுகிறேன் அம்மா
==========================================
என் அழகு அன்னையே
நான் அதிசய அதிஷ்டசாலிதான்
கொடுமை கண்டு வெக்கப்படாத
பூக்கள் மட்டும் புன்னகை புரியும்
மனிதமில்லா மாந்தர் வாழும்
உலகில் நானும் உலவ வேண்டுமா ?
எல்லாம் விதியென சொல்லி
இறைவனே கதியென சொல்லும்
சோம்பல் மனிதனை காண வேண்டுமா ?
வேண்டாம் அம்மா... வேண்டாம்
தீண்டாமை எரிந்து தீரும் வரை
சாதிகள் ஒழிந்து ஓடும் வரை
மனிதம் மலராய் மாறும் வரை
மழலை பாதமிங்கே படியாது
போதும் அம்மா ....போதும்
உந்தன் அன்பு நீளும் வரை
தந்தை வார்த்தை கொஞ்சும் வரை
பத்து மாதம் முடியும் வரை
உந்தன் கருவறை ஒன்றே போதும்
தாயே என்னை மன்னி
உன் முகத்தை நானும் காணவில்லை
ஆனால்...
கருவறை கரிசனத்தில் உணர்ந்தேன்
அன்னை நீயே அன்பின் தேவதையென ...
எத்தனை பேருக்கு கிடைக்கும்
கருவறை மட்டுமே முழு உலகமாய்
பெருமையோடு விடைப்பெறுகிறேன் அம்மா
உன் கருவறையே கல்லறையானதை எண்ணி ..
கண்ணீரை மட்டும் சிந்தாதே அம்மா
அதையும் காசுக்கு விற்கும் - இந்த
மனதில் மக்கி போன மனித இனம் ...
- இராஜ்குமார்
நாள் : 8 - 6 - 2014