ஊமைக்காதலி

கண்டதெல்லாம்
கனவாகிப்போக மனதில்
நின்றதெல்லாம்
நிஜத்தோடு மோத.....

அடித்து துவைத்து
சல்லடையாய்ப்போன
மடிப்பு மாறவில்லை
உள்ளத்தடையும் போகவில்லை.....

கனலாய் எரிந்து
அனலாய் கொதித்து
ரணமாய் வேகும் - என்
காதல் கதையை கேட்டால்
கல்லும் கரையும்......

வேதனையை சொல்ல
யாருமில்லை....
சோதனையின் தீவிரம்
குறையவில்லை.....
என் மனதிற்கு மட்டும்
தெரிந்த ரகசியத்தை
என் பேனை முனையில்
காட்டுகிறேன்
வெளிச்சம் போட்டு......

அறியா வயது
புரியா பருவம்
அவனைக்கண்டேன்
உள்ளத்தில்
பள்ளி கொண்டேன்....

எட்டி நடந்தேன்
தட்டிக்கொடுத்தேன்
ஒரு சிறு புன்னகையில்
ஓராயிரம் கதைகள்....

பள்ளிப்பருவமதில்-அவனில்
பள்ளிக்கொண்ட என் காதலை
சொல்லிக்கொண்டேன் என்னுள் -அவன்
தள்ளி நடப்பது அறியாமல்

முதல் காதல்
புதுக்காதல்
அனுபவம் பெற
களத்தில் இறங்கினேன்.....
கலக்கமில்லா பேதை மகள்

மூன்று வருட காதலில்
நாங்கள் சந்தித்த
நாட்களை
விரல்விட்டு எண்ணிவிடலாம்....

ஏதாவதொரு பண்டிகை
தினத்தில் பட்டாசு கொளுத்தி
விழா எடுக்கும்
எங்கள் காதல்.....

காதலித்த காலங்களில்
காதல் பரிசுகள்
பரிமாறிக்கொள்ளவில்லை
பரிமாறிக்கொண்டது
காதல் என்ற பரிசை மட்டும்தான்........

கண்ணில் உறக்கமில்லை -என்
கண்ணாளனின் வரவால்......
என் விழிதிறந்து நான்
கனவுலோகத்தில் சஞ்சரிக்கும்
போதெல்லாம்
என் முரட்டுக்காளையவன்
குறட்டை விட்டு
தூங்கிக்கொண்டிருப்பான் என்று
எனக்கு புரியவில்லை........

எப்போதாவது
ஒருசில வார்த்தைகள்
வாய்விட்டு வெளிவரும்
நீ நலமா.....?
என்று கேட்டபடி...

நான் அவனை சந்திக்காவிட்டாலும்
என்னை அவன் சிந்திக்காவிட்டாலும்
கிடைக்கும் சந்துகளில்
நித்தம் சிந்து பாடியது
என் காதல்.....

என் தலைவன் என்னை
கைவிடும் வரை
அறியவில்லை நான்
இது ஒருதலைக்காதல் என்று.........

என்றாவது ஒரு நாள்
அவன் மனைவியாக
பதவியேற்று
அவன் கைகோர்த்து
வாழ்க்கைப்பயணத்தை
தொடரலாம் என்றே
கனவுக்கோட்டை
கட்டியிருந்தேன் வெகுநாட்களாய் .......

என்கனவும் நனவாகியது
ஒரே ஒரு வித்தியாசம்
அவனருகில் இந்த
ஊமைக்காதலியில்லை
அவனது
உண்மைக்காதலியே
நின்றிருந்தாள்....

என்னுள் மையமிட்டவனே
என் மையிட்ட
கண்களை கலங்கச்செய்தான்

எனக்குள் காதல் தந்தவனே
என்னை காயப்படுத்தி
சென்றான்....

எழுதியவர் : ம.கலையரசி (18-Sep-14, 12:05 pm)
பார்வை : 95

மேலே