சிறு துளி பெரு வெள்ளம்

ஹாய் குட்டீஸ் நலமா?

அன்றாடம் நம்மோடு உறவாடும் உயிர்களில் எறும்பு மிக முக்கியமானது இல்லையா? எறும்பைப் பார்க்காமல் இருப்பவர்கள் மிகக் குறைவு. இந்த எறும்பைப் பற்றி என்ன தெரியும் உங்களுக்கு? பெரிய தலையும், முழங்கையாக வளைந்த கொம்பும், உறுதியான தாடையும் கொண்ட ஒரு சிறிய பூச்சி வகையைச் சார்ந்தது. அளவில் மிகச் சிறியதொரு உயிரினமாயினும் பல தனிப்பட்ட தகுதிகளை உடையது இந்த எறும்பு. உலகம் முழுவதும் 10,000க்கும் அதிகமான எறும்பு வகைகள் இருக்கின்றன. பொதுவாக கூட்டமாக மண்ணிற்கு அடியிலோ, மண் தரையில் புற்று அமைத்தோ அல்லது மரத்தினிலோ வாழக்கூடியது.

ஆயிரக் கணக்கான முட்டைகள் இடுவது மட்டும் தொழிலாகக் கொண்ட இராணி எறும்புகளே தலைமைப் பதவி வகிக்கும். இறக்கை இல்லாத பெண் வேலையாட்கள், முட்டையிடும் சக்தியற்றது. ஆனால் உணவு தேடவும், இராணியின் குழந்தைகளை பாதுகாக்கவும், கூட்டிற்குள் வேலை செய்யவும், குழுவினருக்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதோடு இன்னும் பல வகையான கடமைகளை நிறைவேற்றுகிறது. ஆண் எறும்புகள் இன விருத்திக்கான தன் பணியைச் செய்துவிட்டு உயிரை விட்டுவிடும்.

இன்னொரு ஆச்சரியமான விசயம், பேச்சுத் திறமையற்ற இந்த எறும்புகள் தங்களுக்குள் எந்த வகையில் தொடர்பு வைத்துக்கொள்கிறது என்று அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். ஆம், அவைகள் தங்கள் உடலிலிருந்து சுரக்கும் ஒரு வகை இரசாயண திரவத்தின் மூலம் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டு கூடி வாழ்வதோடு, உணவு சேகரிப்பில் ஈடுபடுவது மற்றும் அபாயங்கள் குறித்து எச்சரிக்கையையும் பரிமாறிக்கொள்கிறது. இப்படி பல்வேறு திறமைகள் கொண்டது இந்த எறும்பு.

சரி கதைக்கு வருவோமா?

ஒரு அழகான மண் குடில். அதில் சிகப்பு வண்ண, சற்றே தலை பெருத்த , இறக்கை இல்லாத சிப்பாய் சுள் எறும்புகள் சாரி சாரியாக அணி வகுத்து நின்றிருக்கின்றன. தலைமை ஆசனத்தில் சற்றே பெருத்த வயிற்றுப் பகுதியுடன் மெல்லிய இறகுகளை ஒய்யாரமாக ஆட்டிக் கொண்டே அனைவரையும் கண்காணித்துக் கொண்டிருக்கிறது. ஒரு கூட்டம் குழந்தை குங்சுகளை அரவணைத்து உணவு புகட்டி, தாலாட்டி உறங்கச் செய்து கொண்டிருக்கின்றன. ஒரு கூட்டம் குடிலுக்குள் இறைந்து கிடக்கும் மீந்த உணவுப் பண்டங்களை அகற்றி சுத்தம் செய்து கொண்டிருக்கின்றன. மற்றொரு கூட்டம் உணவுக் கிடங்கின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கின்றன. இன்னொரு சாரி உணவுத் தேடலுக்குக் கிளம்பிக் கொண்டிருக்கின்றன. எல்லாம் தத்தம் பணிகளைச் சரியாகச் செய்து கொண்டிருக்கும்போது, ஒரு 20 எறும்புகள் சேர்ந்து கொண்டு ஒரு சாரியாக நின்றுகொண்டு வேலைக்குச் செல்ல மாட்டோம் என்று தர்ணா பண்ணிக்கொண்டிருக்க, இராணியிடம் தலைமை சிப்பாய் வந்து அந்த எறும்புகளைப் பற்றிய புகார் கொடுக்கிறது. உடனே அவர்களை இழுத்து வரும்படி ஆணையிட்ட மகாராணியார் படு கோபமாக தன் இறகை ஒரு சுழட்டு சுழட்டி கண்கள் வெளியே பிதுங்க, துள்ளிக் கொண்டிருந்ததால் உணர்கொம்பும் (ஆண்டெனா) விரைத்துக் கொண்டு இருந்தது பார்க்கவே அச்சமூட்டுவதாக இருந்தது.

“என்ன பிரச்சனை உங்களுக்கு? ஏன் வேலைக்குச் செல்ல மறுக்கிறீர்கள்? இத்தனைபேரும் ஒழுங்காக அவரவர் வேலையைச் செய்யும்போது உங்களுக்கு மட்டும் என்ன வந்தது? உடல் நலம் இல்லையென்றால் சொல்ல வேண்டியதுதானே” என்று கோபமாகக் கத்தியது.

அதற்கு அந்த சிறிய எறும்புக் கூட்டத்தின் தலைவனைப் போல இருந்த ஒருவன் மெதுவாக, “அரசியாரே, வணக்கம். எங்களை மன்னியுங்கள். நம்மிடம் கிடங்கில் ஏற்கனவே தேவையான உணவு இருக்கும்போது மீண்டும் ஏன் உணவு தேடச் செல்ல வேண்டும். போதும் என்ற மனம் வரவே மாட்டேன் என்கிறது உங்களுக்கு. எப்பொழுது பார்த்தாலும் எங்களை உணவு வேட்டைக்கு விரட்டிக்கொண்டே இருக்கிறீர்களே. இது நியாயமா” என்று வாதிட்டது.

உடனே அந்த இராணி எறும்பு “வேலைக்குச் சென்றால்தானே சாப்பிட முடியும். அவரவர் கடமைகளை ஒழுங்காகச் செய்பவர்களுக்கே சாப்பிடும் உரிமை இருக்கிறது. யாரும் வேலை செய்யாமல் சும்மா உட்கார்ந்து சாப்பிடக்கூடாது. அது நம் எறும்பு இனத்திற்கே பெருத்த அவமானம்” என்றது.

உடனே அந்த எறும்பு, “மகாராணியாரே நீங்கள் சொல்வது சரிதான். இன்று காலையிலேயே என் கடமையை நான் நிறைவேற்றிவிட்டேன். உணவுக் கிடங்கைச் சுத்தம் செய்யும் பணி எனக்கு இடப்பட்டிருந்தது. அதை நிறைவேற்றிவிட்டேன். இப்போது அதிகப்படியான இந்த வேலையைத் தான் மறுக்கிறேன். என் உணவிற்கான இன்றைய வேலை முடிந்துவிட்டது” என்றது.

“அப்படியா, அதுவும் சரிதான். நீ போகலாம். இனிமேல் நீ வேலை செய்யும் நாட்கள் மட்டுமே உணவு உண்ண வேண்டும் என்று கட்டளையிடுகிறேன். உன்னோடு இருப்பவர்களுக்கும் இதே கட்டளைதான். நீங்கள் போகலாம்” என்றது.

ஆகா எப்படியும் சாமர்த்தியமாகப் பேசி அரசியை ஒப்புக்கொள்ளச் செய்துவிட்டோம். இனி மகிழ்ச்சியாக பொழுது போக்கலாம் என்று அந்த 20 எறும்புகளும் கொண்டாடிக் கொண்டிருந்தன. அடுத்த நாளும் இதேப்போல காலையில் அவரவர்க்கு இட்ட பணியை முடித்துவிட்டு மாலை உணவு தேடும் அதிகப்படியான வேலையைச் செய்யாமல் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தன. இப்படியே ஒரு சில நாட்கள் கழிந்தன. அன்று காலையில் தூங்கி எழுந்து வேலைக்குச் செல்ல முனையும்போது குளிர் காற்றும், மழையும் சேர்ந்து அசைய முடியாமல் முடக்கிப்போட்டது. அனைத்து சிப்பாய்களும் அமைதியாக உணவு அருந்தச் செல்லும் வேளையில் அந்த சிறிய கூட்டம் மட்டும் வேலை ஏதும் செய்யாமல் சாப்பிட அனுமதி கிடைக்காமல் பசியுடன் துவண்டு கிடந்தது. மறு நாளும் இதே நிலை நீடிக்கவும், வேறு வழியில்லாத அந்த எறும்புகள் மகாராணியிடம் ஓடிச்சென்று “பசி தாங்கவில்லை, உடனே சாப்பிட அனுமதி வேண்டும். இல்லையென்றால் பசியால் வாடி உயிர் விட வேண்டிவரும்” என்று மன்றாடியது.

அதற்கு அந்த இராணி எறும்பு, “இப்பொழுது தெரிகிறதா, சேமிப்பின் அவசியம். இந்த மழை நாட்களில் வெளியே உணவு தேட முடியாமல் போகிறதே. நாம் முன்பே சேமித்து வைத்திருந்த உணவு இன்று நம் உயிரைக் காக்கும் அல்லவா? ஆண்டவன் அருளால் மழை வரப்போகிறது என்பதை முன்கூட்டியே அறியும் வல்லமையை நாம் பெற்றிருக்கிறோம். அதன் மூலமாக நாம் மழைக் காலங்களுக்குத் தேவையான உணவை முன்கூட்டியே சேமித்து வைத்துக் கொள்ள அதிகப்படியான வேலை செய்ய வேண்டியது அவசியம்தானே. சேமிப்பு பற்றிய அவசியம் புரிந்து இனி ஒழுங்காக நடந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். இந்த முறை உங்களுக்கு மன்னிப்பு வழங்கப்படுகிறது. ஆனால் இதுவே இறுதியான மன்னிப்பு. போய் சாப்பிடுங்கள்” என்றது. அந்த எறும்புகளும் தங்கள் தவறை உணர்ந்து ஒழுங்காகத் தங்கள் கடமையைச் செய்ய ஆரம்பித்தது.

இப்படித்தான் குட்டீஸ் நம்மில் பலர் சேமிப்பு பற்றிய விழிப்புணர்வே இல்லாமல் வாழ்கிறோம். நம்மால் உழைக்க முடியாத நேரங்களில் சிரமத்திற்கு உள்ளாகிறோம். இந்த சிறிய எறும்புகளுக்கு இருக்கும் அறிவுகூட நமக்கு இல்லாமல் போவது வேடிக்கை இல்லையா? அந்தக் காலத்தில் போர் நடக்கும் போது, அரசாங்கம் செய்யும் முதற் காரியம் உணவுச் சேமிப்புதான். போர்க்காலங்களில் மற்ற எந்த பணிகளையும் கவனிக்க முடியாது அல்லவா. அந்த நேரத்தில் பெண்களும், குழந்தைகளும் சிரமத்திற்குள்ளாகாமல் இருக்க வீட்டிற்குள் தேவையான அனைத்தும் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டிய தேவை ஏற்படுவது இயற்கைதானே..

இனி நாமும் தவறாமல் சேமிக்கும் வழக்கத்தைக் கடைப்பிடிப்போமா? சிறு துளி பெரு வெள்ளம் அல்லவா! இன்றிலிருந்து நாமும் அந்த எறும்பைப்போல சிறுகச் சிறுக சேமிப்போம்!

எழுதியவர் : பவள சங்கரி (19-Sep-14, 3:33 pm)
சேர்த்தது : Adam Biju1
பார்வை : 8290

மேலே