வெட்கித் தலைகுனிகிறேன் -பொள்ளாச்சி அபி

ஏமாற்றுவது குற்றம் அல்ல,ஏமாறுவதே குற்றம்..என்று பார்க்கப் பழகிவிட்டது இன்றைய சமூகம்.

காலையில் எழுந்ததிலிருந்து தொடரப்போகும் ஒவ்வொரு செயலிலும்..பயணம்,பணி,பழக்கம் என..மனிதனின் ஒவ்வொரு நடவடிக்கையின் போதும்;, இந்த முன்னெச்சரிக்கை ஒருமுறையேனும் வந்து மனதுக்குள் ஊசலாடாமல் போவதில்லை.

அன்றாட நடவடிக்கைக்கே..இப்படியொரு அபாய மணி எனில்,காதல் மட்டும் அதிலிருந்து விலக்கப்படுமா.. என்ன.?

காதலில் இந்த எச்சரிக்கை தேவையில்லை என யாருமிங்கே இப்போது வாதிக்கவும் முடியாது.காரணம்,அனுபவங்களுக்கும், அவனையா காதலித்தாய்..? அவனைப்பத்தி தெரியாதா உனக்கு.? நீயென்ன படிச்ச முட்டாளா..?..என்று ஏதேனும் ஒரு கட்டத்தில்,பெண்கள் இந்தக் கேள்விகளை சந்திக்க நேரும் அவலங்களுக்கும் குறைவில்லையே..!

அனுபவங்கள் தரும் பாடத்தை,அடிப்படையாகக் கொண்டு மனிதமனம் தனது பண்பை வடிவமைத்துக் கொள்கிறது.அதன் வழியே தனக்கு முன்னுள்ள உலகத்தைப் பார்க்கிறது.இப்போது காதலையும் எடைபோடுகிறது..! அது தீர்மானத்திற்கு வருகிறது..,
“நீதான் ஏமாந்திருக்கக் கூடாது என்ற வார்த்தைகளுக்கு முன்பாகவே,துளிரிலேயே கிள்ளி எறிந்தேன்..எனது சிறு காதலையும்..!” என்று.

கவிஞர். மணிமேகலை மணியின்,"நீ தான் எமார்ந்திருக்க கூடாது என்ற வார்த்தைகளுக்கு முன்பாகவே..." [ கவிதை எண்-10850 ] என்று தலைப்பிட்ட அந்தக் கவிதை இப்படித்தான் துவங்குகிறது. கூடவே,பொட்டிலறைந்தாற் போன்ற நிதர்சனங்களையும் நம்முன் வெளிப்படுத்தி நிற்கிறது.

தோலின் ஈர்ப்பால் வரும் சிலரின் ஆசை போதைகளை துரத்திவிட்டேன்..-பெண்ணின் குணம் பார்த்து,அவளது இயல்புகளை அப்படியே அங்கீகரித்து,அவளோடான தனது வாழ்வைப் பிணைத்துக் கொள்வதே காதல்..என்பது போய்,நிறம் பார்த்து,அதில் ஆசை கொண்டு,பித்தம் தலைக்கேறிய நிலையில் காதலிப்பதாய் தன்முன் பிரேரணைகளை வைக்கும்போது,எச்சரிக்கையுடன் அதனை உணர்ந்து கொள்ளும் பெண்மனம்..அந்தக் காதலை துரத்திவிடுகிறது. ஆனாலும்,அதன் எதிர்விளைவுகளை எண்ணி உள்@ர நிலவும் அச்சத்தையும் வெளிப்படுத்தவே செய்கிறது.-“துரத்திவிட்டேன்..இருந்தும் கூட ஆசிட்வீச்சுக்கு பயந்துதான் செல்கிறேன் அவர்கள் இருக்கும் வீதிகளில்..!”

தனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக் கூடாது..என்றே பல இளைஞர்கள்,தன்னைக் காதலிக்காத பெண்களை,திராவகம் வீசி சிதைப்பது என்பது நாம் நேற்று வரை பார்த்த நிகழ்வு.
படித்த,படிக்காத இளைஞர்கள் ஏன் இவ்வாறான மனநிலைக்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள்..? சமூகத்தின் எதிர்காலம் என்று நம்பப் படுகிற இவர்கள் குணாம்ச ரீதியாக எப்படி இவ்வாறான மனநிலை மாற்றத்தைப் பெற்றனர்..? காரணமும்,நிரந்தரத் தீர்வும் என்ன என்பது சமூக ஆய்வாளர்கள் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய ஆய்வு.

இன்றைக்கு நிலவி வரும் சிக்கலைக் குறித்துப் பேசும் இக்கவிதை,தனது அடுத்தடுத்த வரிகளில்,ஒரு பெண் என்ற முறையில் தான் இயல்பாக இருக்கமுடியாத சிக்கலை விவரித்துக் கொண்டே போவது,-பெண்ணுரிமையைப் பிச்சையாகப் போடும் சில வள்ளல்களுக்கு..., நல்ல சாட்டையடி.

பார்வையாலேயே மேயும் பல எச்சில் நாக்குகள்,
உரசி,இடித்து கிள்ளி..வேசியாய் பாவித்து தனது வக்கிரங்களைத் தீர்த்துக் கொள்ளும் கயவர்களைக் கண்டு தனது நிழல்கூட ஓடி ஒளிகிறது..என தனது இயலாமையையும்,வருத்தத்தையும் பகிரும்போது,மனம் கசிகிறது.

பெண் எனப்படுபவள் தாய்மையின் அவதாரம்,சக்தியின் சொரூபம் என்ற அனுசரிப்புகள் எல்லாம் கல்லாய்ப் போன மனிதனின் மனங்களிலிருந்து மண்ணாய் உதிர்கின்ற காலமும் வந்ததே என்ற வருத்தத்தை விதைத்துப் போகிறது. கையறு நிலையை நோக்கிச் சென்று கொண்டேயிருக்கும் நிலையில்,தங்களுக்கான எதிர்காலம் எப்படியிருக்கும்..? பெண்மனம் அச்சப்படுகிறது,விரக்தியுறுகிறது.தடுமாறுகிறது.தவிக்கிறது.

இதன் விளைவு..? ஆணாதிக்க அரியணைகளிலிருந்து தம்மை இம்சிப்பவர்களை ஒன்றும் செய்யமுடியாத நிலையில்,வேறென்ன செய்ய முடியும்..சாபங்கள் விடுவதைத் தவிர..?

பெட்டைக்கோழி கூவி விடியா உலகமது,இரவின்றி போகட்டும்..,

கருவறையற்றுப் போனால்,கல்லறையும் ஒரு தலைமுறைக்கே என்பதை உணரட்டும்..

பெண்களற்ற உலகாய் மாறட்டும்..!

--என இக் கவிதை முடியும்போது,இதனை வெறும் கவிதையாக மட்டுமே பார்க்கமுடியவில்லை.பெண்குலத்தின் ஒட்டுமொத்த அவலக்குரலை நமக்குள் பதிவுசெய்துவிட்டு கடக்கும் இக்கவிதை,மனதிலிருந்து கசியும் அழுத்தமான சிவப்பு இரத்தத்தை, வெண்நிறமாக மாற்றி,நிறைகின்ற கண்கள் வழியாக வெளியே சிதறடிக்கிறது.., தனது சுயஅடையாளம் பறிக்கப்பட்ட பெண்ணைப் போலவே..!

கவிதை விதைத்த சிந்தனைகள் தலைக்குள் கனக்க,கனக்க..,நான் வெட்கத்திலும் அவமானத்திலும் தலைகுனிகிறேன்..,

ஏன்..?

முன்பின் தெரியாத எந்தவொரு பெண்ணின் மனதிலும் வெறும் ஒரு ஆண் என்று மட்டுமே எனக்கும் அளிக்கப்பட்டுள்ள அடையாளத்தை எண்ணி...,

எழுதியவர் : பொள்ளாச்சி அபி B +ve (22-Sep-14, 11:42 pm)
பார்வை : 240

மேலே