விறகென எரியும் நிழல்

புல்வெளி படர்ந்து
முகமுலர்த்தி நகரும் காற்றில்
என் வாசக் கைக்குட்டைகளை
கொடுத்தனுப்பினேன்
உன் வியர்வையில் நறுமணம் விசிற

அருங்கோடையில் இளைப்பாறி
மடியே தஞ்சமென துயின்றும் இருக்கிறாய்
நிழல் பருகி நீ நெகிழ்ந்த காலங்கள் அது


வவ்வால்களின் இராப் போசனங்களில்
தீர்ந்துவிடக் கூடாதென்ற கூர்மையில்
இலைமறைத்து பழுக்க வைத்திருந்தேன்
உனக்கென கனிகளை தூவ
நீ தேடித்,தேடி பழங்கள் புறக்கிய பருவங்கள்
சொர்க்கமாய் இருந்திருக்கும் என் காலடி


பின் வந்த நாட்களில்......,
நெருக்கடிகளின் பேரிரைச்சல்
உன் ஆன்மாவை கொலை செய்யும் அளவு வர
இருப்பை சோதிக்க வந்து விட்டாய்


தவம் என்றதும்,வரம் என்றதும்
உன் பாசாங்குகளின் மாயை ஆயிற்று
அர்த்தமற்ற ஒரு முற்றத்தில்
இருப்பை தக்கவைப்பது
என்றைக்கும் சாத்தியமில்லை என
உணர்கையில் வலி அடர்ந்து
வேர்வரை விகாசிக்கின்றன

என்னை தேடியலைந்து தோற்றுத் திரும்பும்
பறவைகளிடம் சொல்லிவை
வாழ்வின் சூனியங்கள் கொடுமையானதென்று


உன் மார்பில் எறியமர்ந்ததாகவே
எண்ணிப் புகையும் உன் மனதிலிருந்து
சாம்பலென கூட்டித் தள்வதில்தான்
சந்தோஷம் எனில் கொழுத்திவிடு
வீழ்த்திய உன் முன்னால் விறகென எரிகிறேன்.



ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.

எழுதியவர் : ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை. (22-Sep-14, 11:49 pm)
பார்வை : 119

மேலே