நீயின்றி நிசமேது
நீ நடக்கும் நீளமெங்கும் முட்கள் யாவும்
நீங்கிடத்தான் நீதியிடம் விண்ணப் பிப்பேன் !
நீ பதிக்கத் தீகொழுந்தும் நேசம் கொண்டு
நீலவிதழ் செம்மடலாய்ப் பூக்கக் கேட்பேன் !
நீ கடக்கும் நீர்ப்பளிங்குக் கட்டிப் பாதை
நீக்கமறப் பூவனமாய் மாற்றச் சொல்லி
நீதிமான் பூமியிடம் வாதம் செய்வேன்
நீயுமாய் நீயுறங்கும் நாட்கள் கேட்பேன் !
தாயிருக்கும் வீடெனக்கும் சோலை என்றால்
தானிருக்கும் நாடெனக்கும் கோயில் என்பேன் !
தாவரங்கள் மாந்தரென யாவும் போற்றும்
தானெனக்கும் தாயுமான சாமி என்பேன் !
எண்ணிபலக் காலமிங்கும் வாழ்ந்தும் என்ன,
எத்தனையோ நோன்பிருந்தேன் ஓய்ந்தேன் நன்றே,
அத்தனையும் நான் எனக்காய் என்னும் போழ்து
ஆகிவிட்டேன் ஒர்துளியாய் உந்தன் முன்னே !

