ஏன் என்றால் நான் மனிதன்

என் கருவறை நாட்கள் கண்டதில்லை இதனை
பிறந்த போதே பரிசாய் கிடைத்தது
என் விருப்பங்கள் கேட்கும் விதிகளும் இல்லை
தந்தை மதத்தின் தொடர் சங்கிலி ஆனேன்

என் மதம் இதுவென பெருமிதம் கொண்டேன்
மற்ற மதத்தோரை மாற்றானாய் கண்டேன்
வெறியாய் ஒரு உணர்ச்சியில் ஆட்பட்டு கிடந்தேன்

மதத்தை காட்ட பல குறிகளை அணிந்தேன்
'ஒழுக்கத்தின் பெயர்' இவன் என உலகம் சொன்னது
ஒவ்வொரு செயலிலும் இருப்பவன் அவனே என்றேன்
மரியாதை ஒன்று என் மதத்தால் கிடைத்தது
மதக் கூட்டம் எனக்கொரு ஆங்கீகாரம் தந்தது

சடங்கு,சம்பிரதாயம் நழுவவும் இல்லை
அர்த்தங்கள் கேட்கும் அவசியம் இல்லை
இது 'ஆண்டவன் கட்டளை' என்றேன்

மூதாதையர் வழியில் முட்டி மோதினேன்
தேடி கிடைக்கா பொருள் என தெரிந்தும்
தேடலின் ஆவல் குறையவே இல்லை

நினைத்தது வேண்டும் வெறிகொண்டு திரிந்தேன்
உயிரை மாய்க்கா பரிகாரம் செய்தேன்

பணத்தை இறைத்தேன்
மண்சோறு தின்றேன்
மொட்டை அடித்தேன்
மலை ஏறினேன்

இறைவனுக்காக மாண்டவன் இல்லை
உயிரை கொடுக்க மானுடம் முயன்றதும் இல்லை

தெய்வம்,மனிதன் பந்தம் என்ன ?விளங்கவும் இல்லை
ஒரு நொடி கூட சிந்திக்க தயாராக இல்லை

பாவம் செய்தேன் ,மன்னிப்பு கேட்டேன்
கிடைத்ததோ ,இல்லையோ உலகம் நம்பியது

அறிவை தள்ளி,ஆன்மா என்றேன்
நானும் ஏமாந்து சமூகத்தையும் ஏமாற்றினேன்
என தலைமுறை மதம் இதுவென திணித்தேன்
'யாரின் கட்டளை 'இதுவென அறியேன் .........


எழுப்பிய சுவர்கள் இதம் தான் எனக்கு
'வீண்பழி 'சுமக்க ஒரு கற்சிலை இருக்கு
சுயநல சமூக ஏற்பாட்டில் சங்கடம் இல்லை அதற்கு



ஏனென்றால்
"நான் ஒரு மனிதன்"

எழுதியவர் : கௌதமி தமிழரசன் (24-Sep-14, 11:59 am)
பார்வை : 121

மேலே