கடவுள் கண்டுகொண்டிருக்கும் கனவு

பெரிய மனுஷியைப் போல
நடந்து கொள்ளும்
ஒரு சிறுமியும்,
சிறுமியைப் போல
நடந்து கொள்ளும்
ஒரு பெரியமனுஷியும்,
ஒருவிதத்தில்
இன்னும் அழகானவர்கள் !
=========================
இருட்டையும்
சிந்திக் கொண்டுதானிருக்கிறான்
சூரியன்
பூமியெங்கும்
நிழல்களாக !
=========================
பணியிடம்
திரும்புவதற்கான
புகைவண்டிப் பயணத்துக்கு
உணவு கட்டிக்கொடுக்கும்
போது மட்டும்
பழைய களை
வந்துவிடுகிறது
அம்மாவுக்கு !
=========================
ஒருவார
தாடியோடு
ஊருக்கு வந்தால்
இப்போதும்
திட்டுகிறார்
அப்பா !
அப்பா,
இப்போதும்
திட்டுவதற்காகவே
ஒருவார தாடியுடனே
ஊருக்கு வருகிறேன்
நான் !
=========================
கடவுள்
கண்டு கொண்டிருக்கும்
கனவாகவும்
இந்த உலகம்
இருக்கலாம் !
=========================
நீண்ட நேரம்
காத்திருந்தும்
பாடுபொருள்
கிடைக்காமல்
கவிதையைக்
கைவிட்டபடி
எழுந்து செல்கிறேன் !
ஏமாற்றத்துடன்
திரும்புகிறது
அதுவரை
என் ஜன்னலுக்குள்
தலை நீட்டிக்கொண்டிருந்த
வெயில் !
=========================
வானத்து
நட்சத்திரப் புள்ளிகள்
இணைத்து
தேவதை வரையும்
கலையை
எப்படியோ
கற்றுக்கொண்டுவிடுகின்றன
குட்டிப்பாப்பாக்களின்
கண்கள் !
=========================
- குருச்சந்திரன்