அவிழ்கை
" ரெடியா....? நா இன்னும் பத்து நிமிஷத்துல அங்க வந்துருவேன்..."தொலைபேசில் தருண்யா.அவள் குரலில் ஒரு தீர்க்கம், ஒரு தெளிவு இருந்தது.
" கடிகாரம் 8.55 காட்டியதை பார்த்து விட்டு பதில் சொன்னான் ,ம்ம்... நானும் ரெடி.வீட்ல இருந்து கிளம்ப போறேன்..." ஆரவ் குரலில் ஒரு ஈடுபாடு இல்லாத, ஒரு ஏற்புத்தன்மை இல்லாமல் இருந்தது.
" பைக்ல வேணாம், பஸ்ல போலாம்"...ஒரு நொடியில் இருவரின் குரலில் ஒரே வார்த்தையில் முற்றி கொண்டனர்.இது அவர்களுக்கு ஆச்சர்யம் இல்லை.இது போன்று முற்றல் பழக்கப்பட்டு இருந்ததுதான்.தொலைபேசியும் துண்டிக்கப்பட்டது
"சரி இவர்கள் சந்திப்பதற்குள், இவர்களை பற்றி ஒரு சிறு முன்னோட்டம்.இவர்கள் யார்?இன்றைய நாள் இவர்களுக்கு எவ்வளவு முக்கியமான நாள் என்பதை பார்ப்போம்."
" முதலில் தருண்யா, நல்ல உயரம்,பெரிய விழி ஆளை விழுங்கும் அளவுக்கு ,சராசரி பெண்ணை விட சற்று உயரம்.தமிழ்நாட்டின் பெண்ணின் வர்ணம்,வீட்டிற்கு இரண்டாவது மகள், அம்மா மட்டும்,அக்கா பிரசவத்திற்காக வீட்டில் உள்ளாள்.ஓரளவுக்கு புத்தக பூச்சி,பிடித்தது எஸ்.ராமகிருஷ்ணன்,நாசர், இயக்குனர் மகேந்திரன்,தாமரையின் கவிதைகளையும்,பாடல்களையும் வாய் நுனியில் வைத்து இருப்பாள், ஆலியா பாட், இவர்களை தவிர தன்னை அப்டேட் செய்வதில் முன் நிற்ப்பாள்.முக்கியமானது தைரியமானவள்,அவள் அம்மாவை போல்.அந்த தைரியம் வீட்டு வாசற்படிக்கு வெளியே மட்டும்.உள்ளே அம்மாவின் ஆசைக்கும், அன்பிற்கும் கட்டுப்பட்டவள், தன் அம்மாவின் கஷ்டத்தை அருகில் இருந்து பார்த்ததால், அவளை ஒரு விநாடியில் கூட கஷ்டபடுத்த விரும்பமாட்டாள்,சுருக்கமாக சொன்னால் இரட்டை தருண்யா.ஒன்று வீட்டிற்கு வெளியே,மற்றொன்று வீட்டிற்கு உள்ளே. முடிவெடுப்பதில் இரண்டு நிமிடம்,அதற்கு மேல் வாய்ப்பே இல்லை.அந்த முடிவு தவறு என்றால், தன்னை தவிர மற்றவரை பொறுப்பேற்க விடமாட்டாள்.இது தருண்யா "
" இப்பொழுது ஆரவ், தருண்யாவை விட உயரம் குறைவு.பெண்களை கவனிக்க வைக்கும் வர்ணம்,வீட்டிற்கு ஒரே மகன்,செல்லமும்,கண்டிப்பும் சரியான விகிதத்தில் இருந்ததால்,அவர்களின் மேல் பயம் வரவில்லை,மரியாதை மட்டும் அதிகரித்தது,காரணம் பெரிது ஒன்றும் இல்லை,அவர்கள் சண்டையிட்டு இவன் பார்த்ததேயில்லை.நல்ல வேளை,ஆனால் அவனுக்கு பிடிக்காத ஒன்று.புத்தகம் நண்பர்கள் பரிந்துரைத்தால் வாங்கி படிப்பான்,நண்பர்கள் அதிகம்,தனக்கு எது சரியென்று இவனுக்கு ஒரு துளியும் தெரியாது.இது ஆரவ்"
" இவர்கள் எதோ ஒரு சந்தர்பத்தில் சந்தித்து,அதிகம் பேசி ,பழகி, பின் குறைவாக பேசி ,புரிந்து, ஒரு கட்டத்தில் தங்களுடைய அன்பை பரிமாறிகொண்டார்கள்.ஆனால் இவர்களும்,இந்தநாளும் சந்தித்து கொள்ளும் இறுதி நாள்.இதை இவர்கள் ஏற்கனவே முடிவு எடுத்ததால் ,இப்படியும் நடக்கலாம், இப்படி நடந்தால்,அதை ஏற்றுக்கொள்ளும் மனதினை அனுமதிக்க வேண்டும் என்றே....அதனால் தருண்யா அந்த மனப்பக்குவத்தின் உச்சியில் இருந்தாள்,ஆரவ்விற்கு இதில் இன்னும் போராடலாம் என்ற எண்ணமும் ஒரு துளி இருந்தது,ஆனால் அது நடக்க வாய்ப்பு இல்லை என்றும் தெரியும் ."
"தருண்யாவும், ஆரவ்வும் இந்த நாள் வரை தன் இயல்பு நிலை மாறாமல் மற்றும் அவரவர் சுதந்திரத்தின் எல்லையை மீறாமல் வந்தனர், அதனால் மற்றவர்களை விட இவர்கள் சற்று வித்தியசப்பட்டே இருந்தனர், இதை மற்றவர்களுக்கு புரியவைக்கவும் விரும்பவில்லை"
"தருண்யாவும், ஆரவ்வும் சரியான நேரத்தில் எதிர் எதிர் வந்து கொண்டு இருந்தனர், அன்று தருண்யாவிடம் எந்த மாற்றமும் இல்லாத பார்வை, ஆனால் ஆரவ் ஒரு தயக்குத்துடனே இருந்தான்.அன்று அவள் ,அவளுக்கு பிடித்த சுடிதாரை அணிந்து இருந்தாள்,ஆனால் ஆரவ் தருண்யாவிற்கு பிடித்த கருப்பு சட்டை அணிந்து இருந்தான்."
அருகில் வந்து நின்றனர்,மூன்று நொடி மௌனம்,,இருவரும் பேசவே இல்லை,
"எங்க போலாம்" தருண்யா
"நீயே சொல்லு"
"தன் கண்ணை மேல் உயர்த்தி, உதட்டை ஓரத்தில் சுளித்து,சரி T .நகர் போலாம்."
" ம்ம் சரி போலாம்"
நேரம் :9.34 AM
இருவரும் பேருந்தில் ஏறிக்கொண்டார்கள், T .நகர் நோக்கி பயணப்பட்டார்கள், ஆரவ் சன்னல் ஓரம் அமர்ந்து இருந்தான், பயணசீட்டை ஆரவ் எடுக்க,பணப்பையில் இருந்து,பணத்தை எடுப்பதற்குள்,தருண்யா பயணசீட்டை வாங்கிகொண்டாள்.
"இன்னைக்கு, இந்த நாள் என்ன பண்ணா அப்டியே இருக்கும்" ஆரவ்
"தருண்யாவிடம் ஒரு சிரிப்பு முளைத்தது இதழின் ஓரத்தில் ..." ம்ம் ஒரு ஐடியா இருக்கு, நா சாய்ந்தரம் 4 மணிக்கு சொல்லட்டா"
" ஆரவ் தலையாட்டி கொண்டான்"
"அவர்கள் முதல் முதலாக வெளியே வந்த இடம், இது எப்பொழுதும் புதியது போன்றுதான் இருந்தது அவர்களுக்கு, ஆனால் இங்கு இவர்கள் வாங்குவதற்காக வருவதே இல்லை, அதற்கு காரணம் ஒரு முறை ஆரவ் கேட்டான்"
"நீ ஏன் அடிக்கடி இங்கயே போகலாம்னு சொல்ற, அப்டி போனாலும் ஏதும் வாங்கறதும் இல்லை."
" நீ முதல் தடவ என்ட்ட கேட்ட எங்கயாவுது வெளிய போகலாம்னு, ஞியாபகம் இருக்கா ?"
"ஆமா "
"நாம போன முதல் இடம் இதுதான்,அதுக்காக மட்டுமில்ல நா யோசிச்சுதான் சொன்னேன் இந்த இடத்த"
"அப்டி என்ன இருக்கு இங்க? யோசிச்சு சொல்ல?"
" ஏன்னா...இங்க ஒரு கூட்டம் இருக்கு, நீயும் நானும் போறப்ப ,இந்த கூட்டம் நம்மள நெருக்கும், நீ என்ன தொலைச்சுர கூடாதுன்னு நீ என் கையை கெட்டியா பிடிப்ப,அது எனக்கு ரொம்ப பிடிக்கும்,அது மட்டும் இல்லாம எனக்கு சொந்தம்லாம் அதிகம் இல்லை, இந்த கூட்டத்துக்கு நடுவுல போறப்ப ஒரு சந்தோசம்,இந்த உலகத்துல நாம்ம தனியா இல்ல, நம்மள சுத்தி இவ்ளோ பேர் இருக்காங்கனு ஒரு நிம்மதி இருக்கு.அதான், என்ன சின்ன புள்ளதனமா இருக்கா?" என்று தன் கண்ணை, ஆரவ் கண்ணில் கூரிய பார்வையை செலுத்தி கேட்டாள்"
" நா இந்த மாதிரி செஞ்சு சந்தோசபட்டதேல்லாம் இல்ல. எனக்கு புதுசா இருக்கு, நீ சொன்னதுல உண்மையும் இருக்கு" ஆரவ்விற்கு ஒரு வித சந்தோசம்,
"ஆரவ் இங்கே செல்வதற்கான காரணத்தை நினைத்து பார்த்துக்கொண்டு இருக்கையில் "ஆரவ் வந்துருச்சு", தன்னை பெருமூச்சிட வைத்தாள் தருண்யா
"பேருந்திலிருந்து விடுதலை பெற்று, அந்த பெரிய கடைவீதியை நோக்கி நின்றனர்"
" இன்னைக்கு அவ்ளோ கூட்டம் இல்லைல"
"ம்ம் ஆமா,..... சரி ஒரு நிமிஷம் என்கூட வா"என்று தருண்யாவை அழைத்துசென்றான்
" எங்க போறோம்"
"சீக்கிரம் வா" ஆரவ்விற்கு நேரத்தை வீணடிப்பதில் ஆர்வம் இல்லாமல் இருந்தது.
"அவர்கள் ஒரு கடிகார கடையின் முன் நின்றனர், தருண்யா ஏதும் பேசவில்லை,ஆனால் "இங்க எதுக்கு"
என்ற தொனியில் பார்வையாலேயே கேட்டாள்.
" நா இது வரைக்கும் ஏதும் குடுத்தது இல்ல,நாளைக்கு குடுக்க போறதும் இல்ல, அதனால இன்னைக்கு இத வாங்கனும்னு கட்டாயபடுத்தல,...என்று சொல்லிமுடிப்பதற்குள்,தருண்யா கடைக்குள் சென்று தனக்கு பிடித்ததை தேட ஆரம்பித்தாள்..""
"நல்லா இருக்குமா இது?
"கட்டிப்பாரு"என்றான்
"அதயே எடுத்துக்கொண்டாள்..."
"கொஞ்சம் அத குடு" என்று வாங்கி கொண்டான்."நீ சாய்ந்தரம் 4 மணிக்கு சொல்லவேணாம்"
கடிகாரத்தின் முள் ஓட்டத்தை நிறுத்தினான். இத நீ கட்டணும்னு அவசியம் இல்ல, இப்டியே வைச்சுக்கோ"என்று கொடுத்துவிட்டான்
நேரம்:11.22 AM
"தன் கைககளில் கட்டிக்கொண்டு, தன் பெரிய விழிகளால் வாரிக்கொண்டாள்,"
"போலாம்... இந்த தடவ நீ சொல்லு எங்க போகலாம்னு"என்றாள்
"பஸ் ஸ்டாண்ட் போயிட்டு சொல்றேன்"
"இருவரின் அந்த பெரிய சந்தினை விட்டு வெளியே வந்து கொண்டு இருந்தனர், இவர்களின் முதுகுக்கு பின்னால், பழைய நிகழ்வுகள் காற்றில் கரைவது அவர்களுக்கு தெரிய வாய்ப்பே இல்லை.இறுதி வரை அவர்கள் திரும்பி பார்க்கவே இல்லை"
"சொல்லு...எங்க "என்றாள்
"ரயில்வே ஸ்டேஷன் போலாம்" என்றான்
"தருன்யாவிற்கு ஆச்சர்யம் இல்லை,ஏனென்றால் அவளும் அதைதான் நினைத்து இருந்தாள்"
"சரி போலாம்",என்றாள் சிரித்துக்கொண்டே
"இந்த முறையும் சன்னல் ஓரத்தில் ஆரவ், பயணசீட்டும் தருண்யா வாங்கிகொண்டாள்"
" ஆரவ்விற்கு பயணம் என்றால் உயிர்,ஒரு நல்ல உணவை ரசித்து சாப்பிடுவதை போல், பயணத்தை ரசிப்பான்,எப்பொழுதும் சன்னல் ஓரம் தான், சிறு வயதிலிருந்தே அவனுக்கு ரயிலில் பயணிப்பது பிடிக்கும் என்பதால், ரயில்வே நிலையம் ஒரு பொழுது போக்கு இடமாக இருந்தது.அது மட்டுமில்லாமல் பயணத்திற்கு வரும் மனிதர்களின் முகத்தில் தெரியும் சந்தோசத்தையும், உற்சாகத்தை கவனிப்பதும் அவனுக்கு பிடித்தே இருந்தது,அவனுக்கு எதாவுது மனவருத்தம் என்றால், தருண்யாவிடம் சொல்லிவிட்டு இங்கு வருவான்.தருண்யாவும் வருவாள், அருகில் அமர்வாள்,காரணம் கேட்ப்பாள்,பதில்
அளிப்பாள். " அதனால் இன்றும் ரயில் நிலையம், உடன் தருண்யா."
"நிக்கறயா நா பிளாட்பார்ம் டிக்கெட் வாங்கிட்டு வர்றேன்"என்றான்
"ம்ம் சரி"
"இருவரும் 2ஆம் நடை மேடைக்கு சென்றனர், வெகு தூரம் நடந்தும், இடம் கிடைக்கவில்லை,கடைசியாக ஒரு இடம் இருந்தது,அதை பற்றிகொண்டனர்.இருவரும் ஒரு பக்கமாக அமர்ந்து கொண்டனர், மூன்று நிமிடத்திற்கு மேல் மௌனமாகவே இருந்தனர். ஆரவ் ஒரு நிகழ்வை கூர்ந்து கவனித்து கொண்டு இருந்தான், ஆனால் நேரம் நேரம் கழிய கழிய தருண்யாவின் கண்ணில் ஒரு சிறு பதட்டம் தெரிய ஆரம்பித்ததை ஆரவ் உணர்ந்தான்."
" இந்த முடிவு உனக்கு சந்தோசத்த தருமானு தெரில,ஆனா கேக்கறேன்,சந்தோசமா" தன் தலையை அவன் முகம் பார்த்தவாறு கேட்டாள். அவள் வார்த்தையில் கோர்வை இல்லை.ஆனால் அவள் சொல்லவருவதை ஆரவ் உணர்ந்தான்.
" தெரில, இன்னும் இந்த நாள் முடியல, ஆனா சந்தோசமாத்தான் இருப்பேன்.அதுல எந்த சந்தேகமும் இல்ல"ஆரவ் பேச்சில் ஒரு உறுதித்தன்மை இருந்தது.
"எப்டி" என்ற கேள்வியை மீண்டும் தன் பெரிய விழியாலே கேட்டாள்
"உனக்கு புரியும் நினைக்கறேன்,அங்க பாரு",தான் பார்த்த கோணத்தை காட்டினான்."
"அங்கு ஒரு 5 வயதுள்ள சிறு பெண் குழந்தை , பார்வை இல்லாதவரிடம் அமர்ந்து இருந்தது,அவர் ரயில், நடக்கும் மனிதர்கள் திசையை நோக்கி சரியான ராகத்தில் பாடிக்கொண்டு இருந்தார்,ரயில் மட்டும் நின்று நின்று கவனித்து சென்றது,மற்றவர்கள் ரயிலை விட வேகமாக ஓடிக்கொண்டு இருந்தனர்.ஒரு சிலர் மட்டும் சில்லறையை சிதறிவிட்டு சென்றனர். ஆனால் சில மணி நேரம் சில்லறையை யாரும் போடவில்லை, ஆனால் அவருக்கு மட்டும் சில்லறை விழும் சப்தம் கேட்டுக்கொண்டு இருந்தது.காரணம் அந்த குழந்தை , அவர் விரித்திருந்த துணியில் இருந்த ஒரு காசை எடுத்து மீண்டும் அவர் விரித்திருந்த துணியில் வீசியது,சில்லறையின் மேல் விழுந்த காசும் ஒலியை எழுப்பியது.. சில்லறை விழும் சப்தம் அவரை சந்தோசமடையவும் செய்தது , இரண்டு, மூன்று முறை செய்தது அதற்கு மேல் அதை செய்யவில்லை அந்த குழந்தை
"ம்ம்" ,அங்கு நடந்தை இவர்கள் மட்டும் கவனித்து இருந்தார்கள் "
"நீ பக்கத்துல இருந்தாதான் நா , சந்தோசமா இருப்பேன்லாம் இல்லை, பக்கத்துல இல்லாமலேயே, நீ என்ன சந்தோசமா வைச்சுப்ப, அந்த குழந்தய மாதிரி" ஆரவ்
"தருண்யா அந்த நொடியில் தன் முடிவில், சிறிது தளர்ந்து தான் போனாள், அதற்குள் "போலாம் "
என்று எழுந்து நடக்க ஆரம்பித்தாள் ,ஆரவ் சிறிது தூரம் விலகி நடந்து வந்தான்.ஸ்டேஷன் முன்பகுதியில் வந்து நின்றாள்,இயல்பு நிலைக்கு திரும்பி இருந்தாள்."
"ஆரவ்வும் வந்து சேர்ந்தான்,"மெரினா போலாம்"என்றாள்
"ஆரவ்விற்கு ஆச்சர்யம்"
"நான்தான் சொல்றேன் மெரினா போலாம்"
"அவர்கள் இருவரும் திருமணதிற்கு முன் கடற்கரைக்கு செல்லகூடாது என்று இருந்தனர்.இதை சொன்னதும் ஆரவ்விற்கு அதான் ஆச்சர்யம்"
நேரம்:2.47 PM
இருவரும் மெரினாவை அடைந்தனர், கடற்கரைக்கு இருவரும் சேர்ந்து வந்த முதல் நாள் சில மணிநேரத்திற்கு பின் இது இறுதி நாள் கூட, அன்று கடற்கரையில் வெயில் அதிகமாக இல்லை, காற்று மட்டும் பலம், கூட்டமும் அதிகம் இல்லை, இருவரும் மெது,மெதுவாக முன்னோக்கி சென்றனர்.கண்ணுக்குள் அடங்காத அந்த நீல கடல் அழகை இருவரும் ரசித்தனர்.கடற்கரை மேட்டின் மேல் அமர்ந்து கொண்டனர்.தூரத்தில் தெரிந்த அந்த கடலோடியின் துடுப்பு போடும் அழகை விவரித்தாள் தருண்யா.காதில் வாங்கிகொண்டு ரசித்து கொண்டு இருந்தான்"
"உன்ட்ட ஒன்னு...இல்ல ரெண்டு கேள்வி" என்றான்
"கேளு, ஆனா ரெண்டாவுது கேள்விய முதல்ல கேளு"
" நா எதாவுது மாத்திக்க ஏதும் இருக்கா, உனக்கு தெரிஞ்சத சொல்லு?"
" இருக்கு, நீ என்ட்ட கேக்கற சரி, இதையே மத்தவங்க கிட்ட கேக்கரத விட்டரு. மத்தவங்க உன்ன பத்தி என்ன நினைக்கறாங்களோ அதுதான் நீ, அவங்க நல்லவன்னு நினைச்சா நீ நல்லவன், மோசமானவன்னு நினச்சா நீ மோசமானவன், இதெல்லாம் அவங்களுக்கு, உனக்கு இல்ல.நீ உன்னோட எல்லைக்குள்ளவே இரு, அதுக்குள்ளே யாரையும் வர விடாத,நீயும் அத தாண்டி வராத.இப்டி இருந்தா போதும்,யாருக்கும் எந்த பிரச்னை இல்ல"
"சரி முதல் கேள்விய கேளு "என்றாள்
"அதுக்கும் பதில் சொல்லிட்ட"என்றான்
"நா கேக்கறேன் ஒரு கேள்வி, அப்டியே, மறைக்காம சொல்லணும்,என்ன ?" என்றாள்
"மறைக்க மாட்டேன், கேளு" என்று தன இரு உள்ளங்கையில் இருந்த மணலை தட்டிவிட்டு ஆர்வமானான்
"நா உனக்கு எப்பவாவுது கஷ்டமா தெரிஞ்சு இருக்கேனா? மத்த பொண்ணுங்க மாதிரி இல்லாம, ரொம்ப இயல்பா...?இப்டி இருக்கறதனால , உனக்கு என்ட்ட ஒரு வெறுப்பு வந்து இருக்கா? கோவிச்சக்கலாம் மாட்டேன், உண்மையா சொல்லு" தருண்யா
"ஆரவ் சிரித்தான்"
"ஏன் சிரிக்கற"
" நா கேட்ட கேள்விய, நீ வேற மாதிரி கேக்கற,?ஆனா பதில் சொல்றேன், நீ இப்டி இருக்கறது தான் எனக்கு பிடிச்சு இருந்துச்சு, ஒன்னே ஒன்னு தான் நா மிஸ் பண்ணேன்."
"என்ன ?"
"நீ என்ட்ட இந்தநாள் வரைக்கும், எதாவுது பைத்தியகாரதனமா செஞ்சு பார்த்ததே இல்ல,ஆனா எனக்கு புரியும், நீ இருந்த சூழ்நிலை அப்டி இருக்கலாம், இல்ல நீ படிச்சா புஸ்தகங்கள் உன்ன அப்டி விடாம தடுத்து இருக்கலாம், இது உன்னோட தப்பு இல்ல....ஆனா வாழ்க்கைல சில நேரத்துல, ஒருத்தருக்காக முட்டாள்தனமா இருக்கறதுனால சந்தோசம்தான்"என்றான்
"சரிதான், நா இதுவரைக்கும் அப்டி இருந்ததே இல்ல.."தருண்யா தன் தவறை உணர்ந்தாள்.
" இப்போ ஒரு முட்டாள்தனமா ஒரு கடைசி கேள்வி கேக்கறேன்"என்றாள்
"நீ என்ன மறக்க என்னவெல்லாம் பண்ணுவ? யோசிச்சு சொல்லு?"
"ஆரவ் சிரித்துகொண்டே ஐந்து நிமிடம் கடல் அலையை கவனித்தவாறு யோசித்தான்."
"கண்டிப்பா பதில் சொல்லனுமா"ஆரவ்
"கண்டிப்பா இல்ல, ஆனா பதில தெரிஞ்சுக்க ஆசைபடறேன்"தருண்யா
" சரியா இந்த அஞ்சு நிமிசித்துல, கடல் அலை 292 தடவ நம்மள பார்த்துட்டு போச்சு, அப்போ யாரா பத்தியும் நா நினைக்கல" என்றான்
"போலாம்" தருண்யா புரிந்து கொண்டாள்.
நேரம்:3.46 PM
"இருவரும் கடற்கரையை விட்டு விலகி நடந்து வந்தனர் சாலைக்கு.
"கடைசி இடம்... எங்க போகலாம்?" என்றாள்
"நாம முதல் தடவ பார்த்த இடம், அந்த மின் மயானத்துக்கு போலாமா" என்றான்
"தருண்யாவிற்கும் அதுதான் சரி என்றும் பட்டது, "போலாம்" என்றாள்
"அவர்கள் வீட்டிலிருந்து சிறு தொலைவில் உள்ளது, அந்த இடம்.இருவரும் தன் கடைசி பயணத்தை தொடங்கினர், இந்த முறை சன்னல் ஓரத்தை தருண்யாவிற்கு விட்டு கொடுத்தான், பயணசீட்டும் இந்தமுறை அவன் தான்,போகும் வழியில் இருவரும் பேசவேயில்லை, அவர்கள் முகம் முழுவதும் பிரிவின் ரேகைகளால் நிரம்பி இருந்தது."
நேரம் :4.28 PM
"இவர்கள் நேரம், எந்த இடத்திலும் அவ்வளவாக கூட்டம் இல்லாமல் இருந்தது. அந்த இடத்திலும் அப்டியே"
"அவர்கள் முதல் முதலில் பேசிய இடத்திற்கே சென்று அமர்ந்தனர்.இருவரும் பேசவே இல்லை, ஆனால் நடந்த சம்பவங்கள் மட்டும் இவர்கள் கண் முன்னே கடந்து சென்று கொண்டு இருந்தது"
"அன்று"
நேரம்:4.27 PM
"ஆரவ் ஒரு ஓரத்தில் அமர்ந்து இருந்தான், இறந்தவர் இவர் வீட்டு பக்கத்தில் வசித்தவர். ஆரவ்வின் பெற்றோர்கள் வர இயலாத காரணத்தினால் இவன் வந்து இருந்தான்"
"அப்பா வரலயாப்ப" இவர் இன்னொரு பக்கத்து வீட்டார்
"இல்லங்க, அவங்க வரல" என்று பதில் சொல்லி கடிகாரம் பார்த்தான், கடிகார முள் 4.32யை காட்டியது,
மஞ்சள் வெயில் அவன் கன்னத்தை பதம் பார்த்துகொண்டு இருந்தது.ஆனால் அவனுக்கு சுடவில்லை,சில வினாடிகளுக்கு பின் அவன் கன்னத்தில் அந்த வெயில் படவேயில்லை. அந்த திசையில் திரும்பி பார்க்கும்பொழுது, ஒரு குரல்,
"தருண்யா...தருண்யா..ஹே தருண்யா" அவன் இடது கன்னத்து திசையில் இருந்து ஒரு பெண் குரல் வந்து கொண்டு இருந்தது. ஆரவ் குரல் வந்த திசையில் திரும்பி பார்த்தான்."
"ஏன்ப்பா அந்த பொண்ண கூப்டு" என்றாள் அந்த பெண்
"அவள் முதுகுதான் இவனுக்கு தெரிந்தது,அதனால் கவனிக்காமல் இருந்திருப்பாள் போல், அதுமட்டுமில்லாமல் அவள் மற்றொருவரிடம் பேசி கொண்டுஇருந்தாள்,அவள் தன்னுடைய துப்பட்டாவை சரி செய்ய தோளின் மேல் வைக்கும் இரண்டு விரல்களின் அசைவை கவனித்தான்,ரசிக்கவும் செய்தான், அருகிலும் சென்றான். அவள் முன் சென்று நின்றான்"
"தருண்யா உங்கள அங்க கூப்டறாங்க" என்று சொல்லிவிட்டு மீண்டும் தன் இடத்திற்கு திரும்பினான்
"தருண்யா திரும்பி பார்த்தாள், தொலைவில் தன் கை சைகையில் அங்கு வர சொன்னாள் அந்த பெண்"
"தருண்யா அவனை கடந்து செல்லும்போது ஒரு ஆச்சரியமாக பார்த்து சென்றாள்,ஆரவ் தலையை குனிந்து கொண்டான்"
"4 நிமிடத்திற்கு பின் மீண்டும் ஆரவ்வை கடந்து சென்று மீண்டும் அருகில் வந்தாள்"
"என் பேரு எப்டி தெரியும்?, என்ன தெரியுமா உங்களுக்கு?"
"உங்க பேரு அவங்க சொல்லி தெரியும்"என்று அந்த பெண் இருக்கும் திசையை நோக்கி கை காட்டினான்.
"அப்றம் ஏற்கனவே உங்கள எனக்கு தெரியாது,இப்ப பக்கத்துல நிக்கறீங்க, அதனால இப்ப தெரியுது" என்று இரண்டு கேள்விக்கும் சரியான பதில் தந்தோம் என்று நினைத்துக்கொண்டான்"
"ம்ம் சரி" ஒரு மாதிரி பார்த்து சென்றாள்,அதை அவன் கவனிக்கவில்லை, ஏனென்றால் மறுபடியும் தலையை குனிந்து கொண்டான்"
ஒரு ஐந்து நிமிட இடைவெளிக்கு பின் மீண்டும் வந்தாள் ஆரவ் அருகே "இங்க எனக்கு உட்கார இடம் இல்ல, தோ அங்க உட்காரலாமா"
"ஆரவ்விற்கு ஆச்சர்யம் இல்லை, ஆனால் யோசித்தான் " ம்ம் சரி "
"இருவரும் அங்கு அமர்ந்து கொண்டனர்,"இவங்க உங்க சொந்தமா" என்றாள்
"இல்ல பக்கத்து வீடு, அப்பாவால வர முடியல, அதான்.... நீங்க?
"ஓ, அதான் யாருகூடவும் பேசாம இருந்தீங்களா"
"நா பேசாம இல்ல, அவங்கதான் யாரும் பேசல, சரி நீங்க?" முதல் கேள்வியை கேட்டான்
" நாங்க தூரத்து சொந்தம், அம்மாவால வர முடியல, அதான்..."
" ஓ அதான் உங்க சொந்தத்த விட்டு தூரமா உட்க்காந்து இருக்கீங்களா..."
"தருண்யா சிரிக்கவில்லை ," சரி உங்க பேரு என்ன ?"
"ஆரவ்" என்றான்
"அவர்கள் பேச்சு எங்கெங்கயோ சென்று ஒரு இடத்தில் சினிமா பக்கம் வந்தது.அவர்கள் தொடர்ந்து பேச அது காரணமாக இருந்தது.
"சரி நா ஒரு கேள்வி கேக்கறேன், ரெண்டு பேரும் ஒரே நேரத்துல பதில் சொல்லலாம், நம்மளோட திங்கிங் எப்டி இருக்கும்னு பாக்கலாம், சரியா ?என்றாள்
"சரி கேளுங்க " ஆரவ் ஆர்வமாகினான்
"உனக்கும் எனக்கும் பிடிச்ச ஹீரோ என்ன ...? 3 செகண்ட் கழிச்சு சொல்லலாம் " என்றாள்
"மூன்று வினாடிகளுக்கு பின்"
" நாசர் "இருவரும் ஒரே பதிலை சொன்னதில் ஆச்சர்யபட்டார்கள்....அன்று முதல் அவர்கள் அதை பற்றி விவாதிக்க ஆரம்பித்தார்கள்,பல நேரத்தில் ஒரே நேர்கோட்டில் பயணித்தார்கள், அதை வாழ்க்கை முழுவதும் தொடரவும் நினைத்தார்கள், அன்பையும் பரிமாறிக்கொண்டார்கள், அன்றும் முடிவெடுத்தார்கள், பெற்றோரின் அனுமதியோடு திருமணம் செய்ய வேண்டும் என்றும், இல்லையென்றால் மறுபடியும் ,மறுபடியும் பேசி அனுமதி வாங்கிவிடலாம் என்றும், ஒருவேளை அனுமதி இல்லையென்றால் பிரிவதை ஏற்றுகொள்ளும் பக்குவத்தினை இருவருக்குள்ளும் இருந்திட வேண்டும் என்று....ஆனால் அவர்கள் அப்படி நடக்காது என்றே இருந்தார்கள், ஆனால் இன்று அப்படி இல்லை "
"ஆரவ் எழுந்து நின்றான்..."நீ கிளம்பு, இன்னும் கொஞ்சம் நேரம் இங்க இருந்த நீ அழுதுடுவ, நீ கிளம்பிரு"
என்றான், அவள் முகத்தை பார்க்காமலே. அவள் அழுவதை பார்த்து இருந்தால் இவன் தன் முடிவில் விலகி இருப்பான், என்பதை தருண்யாவிற்கும் தெரியும்"
"அவளால் ஏதும் பேச முடியவில்லை, பேசினால் என்ன நடக்கும் என்று இருவருக்கும் தெரியும், அதனால் இந்த நொடியை கடப்பதற்கு இருவரும் முயற்சி செய்தனர், அதில் தருண்யா முந்திக்கொண்டாள்"
"போறேன்" என்று சொல்லிவிட்டு கிளம்பி சென்றாள்... அவன் திரும்பி அவள் முகத்தை பார்க்கவே இல்லை.மூன்று நொடிகளுக்கு பின் திரும்பி பார்த்தான், மீண்டும் அதே முதுகு, தன் கைகளால் துப்பட்டாவை சரி செய்யும் விரல் அசைவை ரசித்தான், இவர்கள் இரண்டு முனை மின்கம்பம் போல பிரிந்து சென்றார்கள், சில நிமிடங்களுக்கு பிறகு அவர்கள் பாதை தெரியாமல் முற்றிலும் பிரிந்தனர்.
"ஒருவர் மீது ஒருவருக்கு அன்பு தோன்ற எந்தக்காரணமும் தேவை இல்லை, ஆனால் பிரிவதற்கு "பெற்றோர்களுக்காக" என்ற காரணம் போதுமானதாக இருந்தது."