விதி மாற்றியது
அந்த ஏஸி ஹால்நிரம்பி வழிந்தது .லயன்ஸ் க்ளப்பின் ஆண்டு விழா ! சீஃப் கெஸ்டின் வருகைக்காக வாசலில் ஐந்தாறு பேர் மலர்க்கொத்துடன் காத்திருந்தனர் .
முதல் வரிசையில் அமர்ந்திருந்த லயன்ஸ் கிளப் செகரட்டரி ராமமூர்த்தி எந்த ஒரு சலனமுமின்றி அமைதியே உருவாய் இருந்தார் . அவர் கையில் இருந்த புத்தகத்தை ஒவ்வொரு பக்கமாய் புரட்ட புரட்ட அவருடைய நினைவுகளும் பின்னோக்கிச் சென்றது .
ஒயிட் அண்ட் ஒயிட்டில் எப்பவுமே பளிச்சென்றிருப்பார் ராமமூர்த்தி. வேலையிலும் ரொம்ப பெர்பெக்ட் . மனைவி வசுமதி ,மகள் சுஜிதாவுடன் சந்தோஷமான ,சொகுசான ,மனநிறைவான வாழ்க்கை .எதையும் யாருக்கும் விட்டுக் கொடுக்காத குணம் .
அன்று வீட்டிற்கு ஊரிலிருந்து அவருடைய அண்ணன் விஸ்வநாதன் மனைவியுடன் வந்திருந்தார் .விஸ்வநாதனுக்கு மூன்று பெண்கள் ....திருமண வயதில் ! விவசாயத்தில் போதிய வருமானம் இல்லை . மதியம் சாப்பிட்டு முடிந்ததும், “ ராமு ! என் பொண்ணுகளுக்கு கல்யாணம் பண்ணனும்ப்பா.... கையில பணம் இல்ல . என் பங்கு நிலத்தையும் வித்துட்டேன் ...என்ன பண்றதுன்னே தெரியல .வர்ற வரனெல்லாம் பணத்தாலயே தட்டிப் போகுது. ஊர்ல உன் பங்கு நிலத்த பெரிய மனசு பண்ணி கொடுத்து உதவினா என் மூணு பொண்ணுங்களையும் கரை சேத்திடுவேன் .... !! “
“பூர்வீக சொத்துன்னு எனக்கெதுவும் வேணாமா ? “
“ தம்பி ! ஆண்டவன் புண்ணியத்தில நீ சென்னையில செட்டில் ஆயிட்ட ....ஒரு வீட்டுக்கு ரெண்டுமூனு வீடு இருக்கு ... நான் எல்லாத்தையும் இழந்துட்டேன்ப்பா ... வேற யார்கிட்ட போயி கேப்பேன் .....எனக்கு இருக்கிறது நீ ஒரே தம்பிதானே ...!
“ அண்ணே ! நீங்க ஊதாரித்தனமா அழிச்சிட்டு வந்து நின்னா அதுக்கு நானா பொறுப்பு ? என்னாலல்லாம் எதுவும் கொடுக்க முடியாது .கல்யாணம்னா சபைக்கு என்ன செய்யணுமோ அத செய்வேன் ...!! “
உள்ளிருந்து வசுமதி ஜாடைக் காட்டவே எழுந்து உள்ளே போனார் . ‘ “என்னங்க ! நமக்கு போதுமான அளவு வசதி இருக்கு ....அவங்க கஷ்டப் படறாங்க ...! உங்க பூர்வீக சொத்த அவங்களுக்கு எழுதி கொடுத்திடுங்க !” “ உன் வாய மூடிக்கிட்டு போயி வேலையப் பாரு ....இது என் ப்ரெஸ்டிஜ் விஷயம் ! சொந்த ஊர்ல இருபது ஏக்கர் நிலம் இருக்குனு சொல்லிக்கறதுக்கே எவ்வளவு பெருமையா இருக்கு தெரியுமா ? நான் குடுக்க மாட்டேன் ...அது என் பங்கு ...அவரு கேக்கறதுக்கு ரைட்ஸ் கிடையாது ....!! “
“ அண்ணன் தம்பிக்குள்ள என்னங்க சட்டம் பேசிகிட்டு ....நமக்கு சுஜி ஒரே பொண்ணு ...அவ கல்யாணத்துக்கு தேவையானது எல்லாமே ரெடியா இருக்கு ...ஆனா உங்க அண்ணன் கஷ்டப் படறாங்க ...ஊர்ல நாம போயி தங்கவா போறோம் ....? அந்த சொத்த அவங்களுக்கு கொடுத்தாதான் என்ன ?
“எனக்கு என்ன செய்யணும்னு தெரியும் ...நீ போ ...!”
இதைக் கேட்டுக் கொண்டிருந்த விஸ்வநாதன் மனம் நொந்து மேற்கொண்டு வேறெதுவும் கேட்கவில்லை .
“ தம்பி ! நாங்க கிளம்பறோம்ப்பா ...என் பொண்ணுக்கு கல்யாணம் முடிவானா சொல்றேன் ... குடும்பத்தோட வந்துடுங்க ....!!” சொல்லிவிட்டு கிளம்பினார் .
“ஏங்க நீங்க பண்றது உங்களுக்கே நல்லா இருக்கா ? நமக்கு என்ன குறை? நம்ம பொண்ணும் படிச்சி முடிச்சிட்டா ...வசதிக்கு ஒண்ணும் கொறைச்சல் இல்ல ...உங்க அண்ணன் பிள்ளைகளும் நம்ம பிள்ளைங்க தானே ....!”
“ வசு ! என் கோபத்த கிளறாத... அவங்களே சைலண்ட்டா போயிட்டாங்க ...நீ என்ன இன்னும் வக்காலத்து வாங்கிட்டு ...!”
“வருத்தத்த வெளிய காட்டாம போறாங்க ...உள்ளுக்குள்ள மனசு என்ன பாடுபட்டிருக்கும்... எவ்வளோ நம்பிக்கையோட வந்திருப்பாங்க ...! இப்படி
வெறுங்கையோட அனுப்பிட்டீங்களே ....நம்ம பொண்ணும் நல்லா இருக்கணுமே ....தானம் ,தர்மம்னு செஞ்சாதானே ...பெருமைக்கு லயன்ஸ் கிளப்ல .......!”
“நிறுத்துடி ! சும்மா கடுப்பேத்தாதே ...!”
“சார் ஜூஸ் சாப்பிடுங்க ஸார்....!” – குரல்கேட்டு நினைவிலிருந்து விடுபட்டார். சார் ! “சீஃப் கெஸ்ட் டிராஃபிக்ல மாட்டிருக்கங்களாம்...இன்னும் வார அரைமணி நேரமாகுமாம் ! இந்த ஜூஸ் எடுத்துக்குங்க ....”
எனக்கு வேண்டாம்ப்பா என்று கண்ணை மெல்ல மூடியவர் மனதிற்குள் மீண்டும் எண்ண அலைகள் சுற்றி சுற்றி நினைவுகளை வடம் கட்டி இழுத்து வந்தது .
“ வசு !சுஜிக்குப் பிடிச்ச ஃப்ரைட் ரைஸ் ,கோபி மஞ்சூரியன் ...அப்படியே மஷ்ரூம் ஃப்ரை பண்ணி வச்சிடு ...அவ ரொம்ப ஹாப்பியா இருக்கா ...நான் ஸ்டேசன்ல போய் கூட்டிட்டு வந்திடறேன் ....ஏங்க புதுசாவா வர்றா ? நாலு வருஷம் பெங்களூருல தான படிச்சா ? ஆட்டோ புடிச்சி வந்திடுவா ...நீங்க எதுக்கு அலையறீங்க ? ஏய் ! என் பிள்ள இன்டர்வியூல செலக்ட் ஆயிட்டேன்னு எவ்வளவு சந்தோஷமா சொன்னா ? அவளோட ட்ரீம் ஜாப் அது !பெங்களூருல ஒரு பிளாட் வாங்கிக் கொடுத்திடலாம் ...! அவ சம்பாதிச்சிதான் ஆகணும்னு இல்ல ....இருந்தாலும் அவ அம்பிஷனுக்கு நாம தடையா இருக்கக் கூடாதுல்ல....?”
கிளம்பி விட்டார் ஸ்டேஷனுக்கு ....சென்ட்ரல் ஸ்டேஷன் எப்போதும்போல் பரபரப்பாய் இருந்தது . சதாப்தி எக்ஸ்பிரஸ் வர இன்னும் அரை மணிநேரம் இருந்தது . மகளுக்கு பிடித்த சாக்லேட் வாங்கி பாக்கெட்டில் வைத்துக் கொண்டார். செல் போனில் மகளுக்கு கால் பண்ணினார் .
“ சுஜி ! எங்கம்மா இருக்க ?”
“ அரக்கோணம் தாண்டிட்டோம் டாடி ! ... இன்னும் ஹாஃப் அன் ஹவர்ல வந்துடுவேன் டாடி !
“வாம்மா ! நான் சென்ட்ரல்ல உனக்காக வெயிட் பண்றேன்மா !
“ ஸோ ஸ்வீட் ஆஃப் யூ டாடி .... வந்திடுறேன் .....ஐ லவ் யூ டாட் !” “டாடி உனக்குப் பிடிச்ச கிண்டர்ஜாய் வாங்கி வச்சிருக்கேன்மா ...!” “போங்க டாடி நீங்க இன்னும் என்னை கொழந்தையாவே பாக்குறீங்க ...!” ஆமாம்மா ....என்னைக்கும் நீ எனக்கு கொழந்ததான் ...!” “ஓ.கே டாட் ! நேர்ல பேசுவோம் ....சி யூ ....! “ வைத்து விட்டாள். அரைமணிநேரம் ஆகியும் ட்ரெயின் வராததால் மீண்டும் மகளுக்கு கால் பண்ணினார் .
“ டாடி ! இன்னும் டென் மினிட்ஸ்ல வந்திடலாம் ....ஆனா சிக்னலுக்காக ட்ரெயின் இங்க நிக்குது ....இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்னு தெரியல .... எனக்கு உடனே உங்களப் பாக்கணும் போல இருக்கு டாட் .....”
பேசிக்கொண்டிருக்கும் போதே ‘டமால் டமால்’ என்று அடுத்தடுத்து சத்தம் காதைக் கிழித்தது .மொபைல் கனெக்க்ஷன் கட்டாகிவிட்டது .ராமமூர்த்திக்கு கைகாலெல்லாம் வெலவெலத்துப் போய்விட்டது . மீண்டும் மீண்டும் பண்ணிப் பார்க்க செல் டெட்டாயிருந்தது .ஒன்றுமே ஓடவில்லை .குப்பென்று வியர்த்துக் கொட்டியது .குல தெய்வத்தை மனம் துணைக்கு அழைத்தது .படபடவென்று வர அங்கிருந்த பென்ச்சில் அமர்ந்தார் . சில நிமிடங்களுக்குள் சென்ட்ரல் ஸ்டேஷனே பரபரப்பானது . ரயில்வே ஊழியர்கள் ,ஆபிஸர்கள் ஓடுவதும் ,பேசுவதுமாய் இருந்தனர் . அவர்கள் பேசியதில் சிக்னலுக்கு நின்று கொண்டிருந்த ட்ரெயினில் குண்டு வெடித்தது என்று கேள்விப் பட்டதும் துடிதுடித்துப் போனார் . இதயம் திக் திக்கென அடித்துக் கொண்டது . போலீஸ் பூத்துக்கு ஓடினார் .அவர்களும் குண்டு வெடித்ததை உறுதி செய்தனர் . செல் ஒலித்தது . மகளோ என்று ஆவலுடன் பார்த்தார் . மனைவியிடமிருந்து போன் .
“ என்னங்க ....சுஜி வந்துட்டாளா ...?”
“இல்லம்மா .....இன்னும் அஞ்சு நிமிஷத்துல வந்துடுவா ...வந்ததும் கூப்பிடறேன் “ –போனைக் கட் பண்ணி விட்டார் .செய்வதறியாது அங்குமிங்கும் ஓடினார் . குண்டு வெடித்த இடத்திற்கே போய் மகளைக் கூட்டிக் கொண்டு வரலாம் என்று கிளம்பியபோது மீண்டும் போன் . “ என்னங்க நம்ம சுஜி வர்ற ட்ரெயின்ல குண்டு வெடிச்சிருச்சாம் ...
டி.வி ல ஃபிளாஷ் நியூஸ் வந்தது.என்னாச்சுங்க ? “ பதட்டத்துடன் கேட்க , “ஒண்ணுமில்லம்மா .... நான் போய் பத்திரமா சுஜிய கூட்டிட்டு வந்துடறேன் .நீ கவலைப்படாதே ! “
டிரெய்ன் நின்று கொண்டிருக்கும் போதே இரண்டு சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்திருக்கிறது. உடனே ராமமூர்த்தி கிளம்பி அங்கு சென்றார் . எங்கும் ஒரே பரபரப்பு ....அழுகுரல் ....அலறல் .... என்னவென்று முன்னேறிப் பார்த்தார் . செகண்ட் ஏசி் கோச் –ல குண்டு வெடிச்சிருச்சாம் என்று ஒருவர் சொன்னதைக் கேட்டவுடன் ....”சுஜீ .....”ன்னு அவரை அறியாமல் கத்தினார் .அங்கிருந்த ஒருவர் அவரைக் கைத்தாங்கலாக அழைத்துச் சென்றார் . அந்தக் கோச்சை அவர்கள் நெருங்கவும் அதிலிருந்து ஒரு டெட்பாடியை இரத்த வெள்ளத்தில் வெளியே கொண்டு வரவும் சரியாக இருந்தது . “பாவம் ....அறியாப் பொண்ணு ....செத்திடுச்சி .... “ யாரோ கூறக் கேட்டு இடிந்து போனார் . கூட்டத்தை விலக்கி பக்கத்தில் சென்று பார்த்தார் . அவரது செல்ல மகள் சுஜி ! தலை சுற்ற மயங்கி விழுந்து விட்டார் . சிலர் அவரது முகத்தில் தண்ணீர் தெளிக்க எழுந்து கதறியவரைப் பார்த்து அங்கிருந்த அத்தனை பேரும் கலங்கி அழுதனர் .
“ அம்மா ....சுஜி ! உன்ன இப்படி பாக்கவா ஓடி வந்தேன் ? நான் போயிருக்கலாமே ....!” முகத்தில் அடித்து கதறியவரை தேற்ற முடியாமல் தவித்துப் போனார் .
வீட்டில் டிவி பார்த்துக்கொண்டிருந்த வசுமதி எல்லா சானல்களிலும் மாற்றி மாற்றி இதே நியூஸ் வருவதை கலக்கமுடன் கவனித்துக் கொண்டிருந்தாள் . ஒரு கட்டத்தில் குண்டு வெடிப்பில் சென்னையைச் சேர்ந்த சுஜிதா பலி ....என்ற செய்தியைக் கேட்டதும் கத்திக் கதறினாள் .சில நிமிடங்களில் சுஜிதா உடலை பெட்டியிலிருந்து இறக்கும் காட்சியைக் கண்டவுடன் மயங்கி மூர்ச்சையானாள் .
ராமமூர்த்தி மனைவிக்கு போன் பண்ண ரிங் போய்க்கொண்டே இருந்தது. சுஜிதாவின் பாடி போஸ்ட்மார்ட்டத்துக்கு அனுப்பப்பட்டது. அங்கிருந்தவர்கள் ராமமூர்த்தியை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர் . மகள் இல்லாமல் எப்படி மனைவி முகத்தில் முழிப்பேன் என்று அழுதபடி வந்தார் .
வீட்டில் லேசாக கதவு திறந்திருந்தது ....படபடக்கும் இதயத்தோடு உள்ளே நுழைந்தார் . ஹாலில் டிவி ஓடிக்கொண்டிருந்தது . முன்னால் வசுமதி குப்புற விழுந்துக் கிடந்தாள் . ஓடிப்போய் மெல்ல முகத்தை திருப்பினார். வசுமதி இறந்திருப்பது கண்டு முட்டி மோதி அழுதவருக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் எல்லோரும் அழுதது நெஞ்சை உலுக்கியது .
மறு நாள் .ஊரும் உறவும் கூடியது . போஸ்ட்மார்ட்டம் முடிந்து வந்த சுஜியின் உடல் அவள் அம்மாவின் உடலருகே வைக்கப்பட்டது . ராமமூர்த்தியின் அண்ணன் , அண்ணி ,பிள்ளைகள் வந்து கதறியது இதயத்தைப் பிசைந்தது . ஒருவராலும் யாரையும் தேற்ற முடியவில்லை . எல்லா ஏற்பாடுகளும் முடிந்து தகனம் செய்து வந்ததும் வீட்டில் மயான அமைதி . அம்மாவின் கழுத்தைக் கட்டியபடி சிரித்துக் கொண்டிருக்கும் மகளின் போட்டோவை வெறித்துப் பார்த்தபடி சாய்ந்திருந்தார் ராமமூர்த்தி. மற்றவர்கள் தள்ளி அமர்ந்திருந்தனர் .மெல்ல எழுந்தவர் விஸ்வநாதன் கால்களில் விழுந்து ,” அண்ணா ! என்னை மன்னிச்சிடுங்கண்ணா ...! கொஞ்சங்கூட மனிதாபிமானம் இல்லாம உங்களுக்கு உதவி செய்ய மறுத்துட்டேன்.... இப்ப பாருங்க கடவுள் எனக்கு உதவி செய்யலண்ணா ....நம்ம குலசாமியெல்லாம் வேண்டினேனே ..... அண்ணா ! நான் தனிக்கட்டையாயிட்டேண்ணா.... எனக்குன்னு யாருமில்ல.... எனக்கு எதுவும் வேண்டாம்ணா .... எல்லாத்தையும் உனக்கே கொடுத்திடறேண்ணா....!” கதறிய தம்பியின் தலைவருடி ஆறுதல் கூறினார் ,
“தம்பி ! எங்களுக்கு நீ இருந்தா போதும்ப்பா ... உன் சொத்து எதுவும் வேண்டாம் ....இந்த சூழல்ல ஒருநயா பைசா கூட வேண்டவே வேண்டாம்ப்பா!” அவரும் கட்டிக்கொண்டு கதறினார் .
“ என் பொண்டாட்டி, பிள்ளை இல்லாத வீட்ல நாம் மட்டும் எப்படி இருப்பேன் ?” தலையை சுவற்றில் முட்டி அழுதார்.
“ சார் ....சார் .... ராமமூர்த்தி சார் ! கெஸ்ட் வந்தாச்சு .... ஸ்டேஜுக்கு வாங்க சார் !” குரல் கேட்டு திடுக்கிட்டு விழித்தவர் நினைவலையில் இருந்து விடுபட்டு விழியோரம் கசிந்த கண்ணீரை கர்சீப்பால் ஒற்றிக் கொண்டார் .
விழா ஆரம்பித்தது .ஆண்டு மலர் வெளியிடப் பட்டதும் ,அடுத்த நிகழ்ச்சியாக “சுஜிதா அறக்கட்டளை “ துவக்கப்பட்டு அதற்கான டாக்குமெண்ட்ஸ் எல்லாவற்றையும் லயன்ஸ் கிளப் பிரசிடென்ட்டிடம் ராமமூர்த்தி வழங்கினார் .ராமமூர்த்தியை ஒருசில வார்த்தைகள் பேசும்படி பிரசிடெண்ட் கேட்டுக்கொண்டார். மைக் முன் சற்று அமைதி காத்த ராமமூர்த்தி மெதுவாக பேச ஆரம்பித்தார் .
“ டியர் ஃபிரண்ட்ஸ் ! இன்னைக்கி நான் என் மனைவி,மகளை இழந்து தனிமரமா நிக்கிறேன் .தென்றல் தவழும் சோலையா இருந்த என் வாழ்வு புழுதி பறக்கிற பாலையாயிடுச்சி ....பணம்தான் பிரதானம்னு நெனச்சிட்டிருந்தேன் .... ஆனா பணத்தால எதையும் விலைக்கு வாங்க முடியாதுங்கறத புரிஞ்சுக்கிட்டேன் ...என் கூட பிறந்த அண்ணன் உதவிகேட்டு வந்தப்போ உதாசீனப் படுத்தி அனுப்பினேன் ...இப்ப நான் அள்ளிக் கொடுக்க தயாரா இருக்கேன் ....ஆனா என்கிட்ட வாங்கிக்க யாரும் தயாரா இல்ல ....இதுக்கு மேல தண்டனை எனக்கு யாராலும் கொடுக்க முடியாது . என் எல்லா சொத்து ,நகைநட்டு எல்லாத்தையும் என் மகள் சுஜிதா பேர்ல என்டௌமெண்ட் ஆரம்பிச்சி நம்ம பிரசிடெண்ட் கிட்ட ஒப்படைச்சுட்டேன் .
எல்லாருக்கும் ஒரு வேண்டுகோள் ! உங்களால முடிஞ்சத தேவைபடறவங்களுக்கு தர்மம் பண்ணுங்க ..... நாம போகும் போது எதுவும் கூட வரப்போறதில்ல ....என் மகள அவ்வளவு அழகு படுத்திப் பார்ப்பேன் ....ஆனா குண்டு வெடிச்சதில அவ செதைஞ்சுப் போயிட்டா ... நம்ம செய்யிற தர்மம் தக்க சமயத்தில நமக்குத் துணையா இருக்கும் ..... சந்தோஷங்கிறது ...நமக்கு நாமே அனுபவிக்கிறதில்ல....மத்தவங்கள சந்தோஷப்படுத்தி அவங்க மகிழ்ச்சியில நாம பங்கெடுத்துகிறதுதான் உண்மையான சந்தோஷம்னு புரிஞ்சுக்கிட்டேன் .....உதவி தேவைப்படறவங்களுக்கு இந்த அறக்கட்டளை எல்லா உதவியும் பண்ணும் ...!” கையெடுத்துக் கும்பிட்டார் . எல்லார் விழிகளும் கசிந்தது . கடைசியா ஒண்ணு ! தீவிரவாதம் ஒழியணும்....நம்ம தேசத்த விட்டே விரட்டணும். அன்பு நிறைஞ்ச உள்ளத்துல துவேஷம் இருக்காது .... முதல்ல வீட்டிலருந்து ஆரம்பிப்போம் .... அப்புறம் நாட்டை திருத்துவோம் ... தீவிரவாதத்துக்கு பலியான கடைசி உயிர் என் பொண்ணா இருக்கட்டும்.!!” வழிந்தோடும் கண்ணீரை துடைக்க மறந்தவராய் அமர்ந்தார் .