ஆட்டுக்காரி

அடியே...!!
அலமேலு...!!
எங்கடி போன....?
ஏண்டியம்மா
தங்கம்
இப்படி
அங்கம் பதற கத்துற?
ஆறு மணி
ஆகிப்போச்சி
வெளக்கு வைக்க
நேரமாச்சி...
ஆடு மேய்க்க
போன புள்ள
வீடு வந்து
சேரவில்ல.....
மச்சா இப்ப
வருவாக...
மதி கலங்கி
நிப்பாக...
புள்ள வளக்க
தெரியலன்னு
பொடனியில
மிதிப்பாக...
மாமனுக்கு
மடி கொடுத்து
மாசமா நிக்கயில
எத்தனையோ
நெனச்சி வச்சே....
பொட்டப்புள்ள பொறக்குமின்னு
பூத்த நாளு தெரியலையே...
ஒத்தை புள்ள கண்ணுமேல..
ஊருகண்ணு தாங்கலையே...
கிழிஞ்ச துணி
நா தச்சி
மானத்த மறைக்கயில
பாவிமக
குத்த வச்சி
தொலச்சிப்புட்டா...
வாய கட்டி
வயித்த கட்டி
பந்தகால
நா போட
மாமே மொறச்சாக
மத்தவக சிரிச்சாக....
அஞ்சி மணி
ஆச்சுதுன்னா
வீடு வந்து
சேராம
சிரிக்கி மவ
இளிச்சிக்கிட்டு
எங்க போயி
நிக்கிறாளோ...?
முச்சந்தி
முனியாண்டி...
மூணு கண்ணு
முண்டக்கன்னி...
எம் புள்ள அலமேலு
முழுசா வந்து
சேரவேணு......!
போடியக்கா....
பொன்னாத்தா....
காத்து கருப்பு
வருமுன்னே
நா போயி
கூட்டியாறே
மாமே வந்தா
சொல்லி புடு......!!!