ஒவ்வாத காதலுக்கு ஒப்பாரி ராகம் ஒரு கேடு---அஹமது அலி----
காதல்
மனமகிழ் உணர்வா?
மனநோயாளியாக்கும் உணர்வா?
சொல்லுங்கள் காதலர்களே!
நம்மை பெற்றது
நல்ல காதல் எனில்
நாம் கொள்வதும்
நல்ல காதலே!
ஆதமின் தனிமைக்கு
இனிமை சேர்க்கவே
ஏவாளின் உறவு!-அது
காதலின் வரவு!
ஆதமின் காதலை
ஏற்றுக் கொண்டாள் ஏவாள்
மானுடம் தழைத்தது!
ஏவாள்கள் ஏற்க மறுத்தும்
மண்டியிட்டுக் கெஞ்சும் காதலில்-இன்று
ஆண்களின் மானம் இளைத்தது!
நீ விரும்பாத ஒருத்தியை
உன்னால் ஏற்க ஆகாதெனில்
உன்னை விரும்பாத ஒருத்தி
உன்னை ஏற்க ஆகிடுமோ?
ஓரிரு நாட்களில்
ஒரு சில பார்வைகள்
ஒரு சில வார்த்தைகள்
ஒரு சில நட்பின் அக்கறைகள்
கருணைக் கனிவுகள்
காதல் என்றாகிடுமோ?
ஒவ்வாத காதலை வளர்த்து
ஒய்யாரமிடும் ஒட்டாரிகளே
ஒருதலைக் காதலில்
ஒற்றையாய் பேதலிக்கும் பேதைகளே!
ஒப்புமை இல்லாக் காதலுக்கு
ஒப்புரவு ஒழுகுங்கள்
ஒப்புதல் பெற வேண்டிடும்
ஒப்பாரி ராகம் நிறுத்துங்கள்!
குரலோ?கூந்தலோ?
குணமோ?மனமோ?
எதுவுன்னைக் கவர்ந்து இருந்தாலும்
உன்னால் அவளைக் கவர முடியாத வரை
அவளை நிந்தனை செய்யாதே!
கன்னிகளை காதலித்த காலம் போய்
பாட்டிகளையும் காதலிக்கும் காலமடா
வேட்டிகளின் மானம்
ராக்கெட்டில் பறக்குது!
ஏற்கும் காதலுக்காய்
எதையும் இழ!
ஏற்காத காதலுக்கு
தரும் இடர்கள் பிழை!
ஒப்பாத காதலுக்கு
தப்பான தாளங்கள் வேறு -அதற்கு
ஒப்பாரி ராகம் ஒரு கேடு!