உதிர்வதறியா ஆன்மா

இணையைத் தேடி
அந்தரத்தில்
பதை பதைக்கும்
தேன்சிட்டின்
சிறகுகளில்
ஏதோதோ எழுதுகிறாய் !

சாரை சாரையாக
ஊறுகிற சிற்றெறும்புக்
கூட்டத்தின் மீது
விழுந்த சிறு தூரலால்
கலைந்த கூட்டமென
சிதறிச் சிதைகின்றன
எழுத்துக்கள் !

சொற்கள்
சொட்டுச் சொட்டாக
வடிய
பூக்களின் இதழ்கள்
முறிந்த துக்கத்தின்
அழுகையை -
தூங்க வைக்க
அதற்கொரு
துயிலிடைக் கூரையென
இதயத்தை விரித்தேன்
இயலாமையால்
விழிகளை மூட
மூடிய இமைகளுக்குள்
நுழைந்து
சிறகடிக்கிறது
தேன்சிட்டு !

காலத்தின் மடியில்
புதையுரும் வாழ்வில்
நேரத்தின் வேர்கள்
இதயத்திற்குள்
அம்புகளை எறிகின்றன
ஒவ்வொரு அம்பிலும்
ஒவ்வொரு வலி -
வலியென்றால் ஏற்றுக்கொள்ளலாம்
எய்தது அன்பெனில் ?

நடுராத்திரிகள்
அனைத்திலும் இமைகள்
தூங்கா நெய் விளக்குச் சுடராகிறது -
கண்களின் புலம்பல் கேட்டு
கனவுகள் பதை பதைக்கிறது
படுக்கையறை திரைகள்
சாம்பலாய் உதிர்கின்றன
மென் சங்கடத்தோடு
இறக்கை இழந்த பூவாகி
பறக்கத் துன்புறுகிறது
உதிர்வதறி யாதவொரு
தேன்சிட்டின் ஆன்மா .

எழுதியவர் : பாலா (3-Oct-14, 12:01 pm)
பார்வை : 111

மேலே