வானம் உன் கைகளுக்குள்
வானம் உன் கைகளுக்குள்
பாவலர் கருமலைத்தமிழாழன்
பூந்தென்றல் வீதியுலா
புறப்பட்டு வருவதற்கே
ஏந்திவரும் பல்லக்கை
எதிர்பார்த்தா காத்துளது ?
காரிருளை மாய்ப்பதற்குக்
கதிரவன்தான் காலைவர
தேரினையா எதிர்பார்த்துத்
தெருமுனையில் காத்துளது ?
கண்களினைப் பறிக்கின்ற
கார்மேக மின்னல்தான்
மின்சாரம் எதிர்பார்த்தா
மின்னுதற்குக் காத்துளது ?
தானிறங்கி வருவதற்குத்
தரையிருந்து குழாய்இணைப்பு
வானிற்கு வருமென்றா
வளமழையும் காத்துளது ?
சாதனைகள் புரிவதற்குச்
சந்தர்ப்பம் வாய்க்குமென்று
சோதனைகள் செய்யாமல்
சோம்பலுடன் இருப்பதுவோ ?
வாய்ப்புகளோ உனைத்தேடி
வரவேற்பு கொடுக்காது
வாய்ப்புகளை உருவாக்கு
வானம்உன் கைகளுக்குள் !