பொருள்பொதிந்த சொல்லே நாடு

பொருள்பொதிந்த சொல்லே நாடு
பாவலர் கருமலைத்தமிழாழன்
வளைந்தகோடால் வரைந்துவைத்த படமா நாடு
வாழ்க்கையையே தியாகத்தின் வேள்வி யாக்கி
வளையாத முன்னோர்கள் தீப்பி ழம்பால்
வார்த்துவைத்த வார்ப்படந்தான் இந்த நாடு !
முளைவிட்டுத் தானாக முளைத்தெ ழுந்த
முட்செடியா இந்தநாடு? மானத் தாலே
தலையுடலை விதைகளாக்கிக் குருதி நீரால்
தளிர்க்கவைத்த பன்னீர்ப்பூ இந்த நாடு !

காற்றினிலே மிதந்துவந்து மூக்கிற் குள்ளே
கலக்கின்ற நறுமணமா இந்த நாடு ?
நேற்றுகளின் பண்பாட்டைச் சுவடாய்த் தாங்கி
நிலைக்கவைக்கும் சுவாசந்தான் இந்த நாடு !
வேற்றுமையை எழிலான நிறத்தில் காட்டி
வேலிக்குள் பூத்தமலர்த் தொகுப்பா நாடு ?
போற்றுகின்ற சாதிமத எண்ண மொன்றிப்
பொலிகின்ற மனத்தொகுப்பே இந்த நாடு !

வெற்றெழுத்தால் உருவான சொல்லா நாடு
வெடிக்கை ஒலிக்குறிப்பின் சேர்ப்பா நாடு?
குற்றெழுத்தும் நெட்டெழுத்தும் ஒற்றெ ழுத்தில்
குலவிப்பொருள் தரும்சொல்லே இந்த நாடு !
வற்றாத நதிகளாக அன்பு பாய்ச்சி
வயல்விளைத்துக் காக்கின்ற தாயே நாடு !
வெற்றுச்சொல் பேச்சின்றி உயிராய்ப் பேணி
வியர்வையிலே உயர்த்துவதே சேயின் மூச்சு !

எழுதியவர் : பாவலர் கருமலைத்தமிழாழன் (5-Oct-14, 12:39 pm)
பார்வை : 314

மேலே