கட்டாயம் என்னுயிரில் கொள்ளியிடு

என்னுயிரில் கலந்தவளே எனக்காகப் பிறந்தவளே
------எனைப்பார்த்து ஒருமுறைநீ சிரித்துவிடு
பொன்வீட்டு மகளேஉன் புன்சிரிப்பு இல்லையெனில்
------புதைகுழியில் எனைவைத்து எரித்துவிடு

என்னெஞ்சக் குளத்தினிலே எதிர்நீச்சல் போட்டவளே
------ஏனின்று எனைப்பார்க்க மறுக்கின்றாய்
உன்நெஞ்ச ஆலயத்தில் உயிர்விளக்காய் எரியும்நான்
------உனைப்பார்த்து வருவதைஏன் வெறுக்கின்றாய்

பரிவோடு இழுத்தணைத்து பார்த்தஇடம் எல்லாமே
------பங்கிட்டு நீகொடுத்த முத்தங்கள்
பிரிவோடு வாழும்நான் பாதியிலே இறந்துவிட
------பேய்த்தனமாய் செய்கிறது யுத்தங்கள்

மணல்வீடு கட்டிவைத்து மணிக்கணக்காய் நாம்பேசி
------மகிழ்ந்திருந்து ஆடிவந்தோம் ஒருகாலம்
மணல்வீட்டை அலைவந்து மூழ்கடித்து போனதனால்
------மாரடைப்பாய் துடிக்கிறதென் வருங்காலம்

பகலிரவாய் உன்னழகு பளிங்குமுகம் நான்பார்த்துப்
------புன்னகையால் தரிசித்த காலங்கள்
அகல்விளகுத் தீவந்து ஆகாயம் சுட்டதனால்
------அணைக்கிறது கண்ணீரின் கோலங்கள்

அசைந்துவரும் பேரழகே அச்சடித்த ஓவியமே
------ஆருயிரே உனைஎனக்குப் புரியவில்லை
வசந்தத்தின் வீட்டுக்கு வாஎன்று அழைத்துவிட்டு
------வெளிநடப்பு செய்வதுஏன் தெரியவில்லை

சரிபாதி என்னுடலில் சங்கமித்துப் போனவளே
------சாய்ந்தபடி நீயணைத்தாய் கைக்கோர்த்து
பிரிவாகி எனக்குள்ளே பூகம்பம் ஏற்பட்டு
------புலம்புகிறேன் தினமும்நான் மனம்வேர்த்து

எத்தனையோ இரவுகளை உனக்காக செலவிட்டு
------எழுதிவைத்தேன் கவிதைமலர் ஒருகோடி
இத்தனையும் உன்னடியில் சருகாகிப் போவதனால்
------எரிமலையாய் துடிக்கிறதென் உயிர்நாடி

விழுதாகி எனைக்காக்க வந்திடுவாய் என்பதனால்
------விடியும்வரை காத்திருந்தேன் மலர்தூவி
பழுதாகி நின்றும்நீ பார்க்காமல் போனதனால்
------பிரிகிறது துளித்துளியாய் என்ஆவி

பச்சைமுகில் பனிரதமே பார்க்குமிடம் எல்லாமே
------பிம்பகளாய் உன்முகமே விழுகிறது
எச்சில்நான் விழுங்கியதும் இடியிறங்கி வெடிப்பதுபோல்
------எனக்குள்ளே அடிமனசு அழுகிறது

பாதத்தின் சுவடுகளை பார்க்காமல் எங்கெங்கோ
------பைத்தியமாய் நானலைந்து போகின்றேன்
காதலெனும் சுகம்தேடும் கண்கட்டு வித்தையிலே
------கடைசியிலே கைதாகிச் சாகின்றேன்

வசந்தத்தை என்வாழ்வில் வரவைத்துக் கொடுத்தவளே
------வாய்திறந்து ஒருவார்த்தை சொல்லிவிடு
கசந்துவிட்ட காதலைஉன் காலடியில் தேய்க்கும்முன்
------கட்டாயம் என்னுயிரில் கொள்ளியிடு

[பின் குறிப்பு: சில தள தோழமைகள் கேட்டுகொண்டதற்கிணங்க மறு பதிவாக பதிகிறேன்..]

எழுதியவர் : ஜின்னா (7-Oct-14, 9:16 am)
பார்வை : 202

மேலே