காளையார்கோயில்

சிவகங்கைச் சீமையிலேயே உயரமான கோபுரமாயிருக்க வேண்டும் என்று பார்த்து பார்த்து கட்டினார்களாம் காளையார்கோயில் கோபுரத்தை. மருதிருவரும் சீமை முழுதும் சென்று மண்ணெடுத்து சுட்டுப் பார்த்து கடைசியில் மானாமதுரையில் சுட்ட செங்கல்தான் உறுதியாய் இருக்கிறது என்று மானாமதுரையை அடுத்த கருமலையில் இருந்து கல் அறுத்து கொண்டு வந்து அந்த கோபுரம் எழுப்பப்பட்டதாம்.

சீமையின் மன்னர் முத்துவடுக நாதரும், அவரது இரண்டாவது மனைவி கெளரி நாச்சியாரும் காளையார்கோயிலில் வழிபாடு செய்து கொண்டிருந்த போது குள்ளநரித்தனமாக கோயிலை சுற்றி வளைத்ததாம் வெள்ளையர் படை, அப்போது பான்சோர் என்னும் பரங்கியரின் தளபதி தனது கைத்துப்பாக்கியால் மன்னரையும் ராணியையும் சுட்டுக் கொன்றானாம். முத்து வடுகநாத சேதுபதியின் இரத்தம் பட்டு இன்னும் சிவந்து போனதாம் காளையார் கோயிலின் செம்மண். மருதிருவரும் வெள்ளையரின் சூழ்ச்சியில் சிக்குண்டு தலைமறைவாயிருந்த போது தலைமறைவை விட்டு வெளியே வந்து அவர்கள் சரணடையா விட்டால் காளையார்கோயில் கோபுரத்தை தகர்த்தெறிவோம் என்று ஆங்கிலேய ஏகாதிபத்தியம் மிரட்டல் அறிவிப்பு செய்ய....

நாங்கள் வீழ்ந்தாலும் வீழ்வோம் நாங்கள் சார்ந்திருக்கும் சைவத்தை வீழச் செய்ய மாட்டோம் என்று சைவ சமயத்தின் அடையாளமாய் இன்றும் விண்ணுயர்ந்து நிற்கும் காளையார்கோயிலை காக்க மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் வெள்ளையரிடம் சரணடைந்தனராம். 1801ஆம் ஆண்டு இதே அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி மருதிருவரையும் தூக்கிலிட்டு அவர்களது தலையை காளையார் கோயில் சின்ன கோபுரத்திற்கு நேர் எதிரேயும் உடலை திருப்பத்தூரில் புதைத்தனராம் வெள்ளையர்கள்.

காளையார்கோயில் வெறுமனே ஒரு வழிபாடு செய்யும் மதம் சார்ந்த கோயில் மட்டும் அல்ல அதற்குப் பின்னால் வீரம் செறிந்த தமிழ் இனத்தின் மிகப்பெரிய போரட்ட வரலாறும் இருக்கிறது. " வரி என்று வாய் திறந்தால் அது கிழிக்கப்படும்..." என்று வெள்ளையரின் ஏகாதிபத்தியத்தியத்தை எதிர்த்து முதல் கலகக்குரல் எழுப்பியவர் மன்னர் முத்துவடுகநாத சேதுபதி, அதே போல சுதந்திர இந்தியாவில் வெள்ளையரை எதிர்த்து களமிறங்கிய முதல் வீரப் பெண்மணி அவரது மனைவி ராணி வீரமங்கை வேலு நாச்சியார்.

பண்டைய வீர வரலாற்றை நமக்காக விட்டு வைத்து சென்ற வீர மறவர்களைப் போல இல்லாமல் தற்போதைய தமிழ் சமூகம் சுருங்கிப் போய் டாஸ்மாக் தமிழர்களாக உருமாறி அரசியல் கட்சிகளுக்குள் தஞ்சம் புகுந்து கொண்டு வாழ்கவுக்கும் ஒழிகவுக்கும் இடையே அவலமாய் வாழ்ந்து கொண்டிருப்பதோடு ஒரு மிகப்பெரிய வெற்றிடத்தை நமது அடுத்த தலைமுறையினருக்கு உருவாக்கியும் வைத்திருக்கிறது. வரலாற்றுச் சின்னங்களின் புனிதமறியாவிட்டாலும் அவற்றைப் போற்றி புகழ் பாடாவிட்டாலும் கூட பரவாயில்லை அதை பாதுகாத்து வைத்துக் கொள்ளக் கூடத் தெரியாத தற்கால சமூகச் சூழலில் தமிழர்கள் என்று அறிவித்துக் கொள்பவர்கள் கூட நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோமே என்பதுதான் என் போன்றோர்களுக்கு வெட்கமாயிருக்கிறது இப்போது....!

-தேவா சுப்பையா...

எழுதியவர் : Dheva S (8-Oct-14, 8:56 pm)
பார்வை : 125

சிறந்த கட்டுரைகள்

மேலே