ஓர் எழுத்தாளனின் கதை -தொடர்ச்சி 06 - சந்தோஷ்

ஓர் எழுத்தாளனின் கதை
தொடர்ச்சி : 06

இதற்கு முந்தைய பாகத்தின் சுருக்கம் :
-----மீனவர்களுக்கு ஆதரவான போராட்டத்தில் ஈடுப்பட்ட தினகரன் -காவியா ஆகியோரை போலீசார் பலமாக தாக்கியதில் படுகாயம் அடைந்து கோவை அரசுமருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்திய தேசம் மற்றும் பிரதமருக்கு எதிராக போராட்டத்தில் கவிதை மற்றும் பேச்சுக்கள் இந்திய இறையாண்மை சட்டத்தை இவர்கள் மீது பாயவைத்தது. விரைவில் சுயநினைவு அடைந்த தினகரன் முதலிலும் அடுத்து பெரும் போராட்டத்திற்கு பிறகு உயிர் பிழைத்த காவியாவும் கைது செய்யப்பட்டனர். காவியா நீதிமன்றத்தில் தன் நண்பன் தினகரனின் நிலையை அறிய தான் சந்திக்க வேண்டும் என்று நீதிபதியிடம் மன்றாடி வேண்டியதால் சிறையிலிருந்து தினகரன் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டான். அப்போது இருவரும் மிகவும் உணர்ச்சிவயப்பட்டு முத்தங்கள் பரிமாறி தங்களின் காதலை பொது இடத்தில் வெளிப்படுத்த. இதை இவர்களின் பெற்றோர் கண்டிக்கும் தருணத்தில் ஒரு செய்தி நீதிமன்ற வளாகத்தில் பரவியது.

===ஓர் அரசியல்வாதியை ஊழல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு சொல்லியது சிறப்பு நீதிமன்றம். தீர்ப்பினால் ஆத்திரமடைந்த கட்சி தொண்டர்கள் தருமபுரி அருகே ...கோவை தனியார் கல்லூரி மாணவர்களுடன் சுற்றுலா சென்ற பேருந்தை எரித்தனர் மூன்று மாணவிகள் உயிர் எரிக்கப்பட்டதாக அஞ்சப்படுகிறது=========

தினகரன் காவியா பொங்கி எழுந்தனர். காரணம் அந்த தனியார் கல்லூரி என்பதே இவர்கள் படிக்கும் கல்லூரிதான்.

இனி :
--------

” தருமபுரி கிட்ட மூணு பொண்ணுங்கல பஸ்ல வச்சி உயிரோடு கொளுத்திட்டானுங்களாம் பாவிங்க. அந்த பொண்ணுங்க லாம் பி.எஸ்.ஜி ல படிக்கிற பொண்ணுங்கன்னு சொல்றாங்க. சூரியன் டிவில அடிக்கடி போட்டு போட்டு காமிக்கிறான்.. ” நீதிமன்றத்தில் வேலை செய்யும் துப்புரவு ப்ணியாளர் ஒருவர்.

“காவி.. நம்ம பாட்டினி(botany) டிபார்ட்மெண்ட் ப்ரெண்ட்ஸ்தானே தருமபுரிக்கு அக்ரி சம்மந்தப்பட்ட டூர்க்கு போனாங்க. அச்சோ.. யாரு செத்தாங்கன்னு தெரியலையே.. "
"ஆமா டா தினா..! கொலைக்காரனுங்க. அவனுங்க தலைவர் செஞ்ச தப்புக்கு இவங்க என்ன பண்ணுவாங்க. ஒன்னும் புரியல தினா.. “ காவியா

“ தினா, காவி ரெண்டு பேரும் இப்போ கைது செய்யப்பட்டிருக்கீங்க ,முதல்ல உங்கள காப்பாத்திக்க பாருங்க. அப்புறம் இதப்பத்தி கவலைபடலாம்” அருகிலிருந்த காவலர்.

“என்ன சார் நீங்க சொல்றீங்க. கூட படிக்கிற பசங்க செத்துபோயிட்டாங்கன்னு நியூஸ் கிடைச்சிருக்கு. பதட்டப்படாம என்ன பண்ணுவாங்க “என்ற தினாவின் தந்தை தினாவை பார்த்து .. “ தினா.. டென்ஷன் ஆகாதே. அரசியல் பொறுக்கிங்களுக்கு எதாவது காரணம் வேணும். மூணு பொண்ணுங்களையும் நாசம் பண்ணிட்டாங்க , இப்போ நீங்க ரெண்டு பேரும் குற்றவாளியா இருக்கீங்க, இப்போ நீங்க எதுவும் பண்ணமுடியாது. அமைதியா இருப்பா. “

“அங்கிள். எப்படி அங்கிள் அமைதியா இருக்கமுடியும்.? எங்களால என்ன பண்ணமுடியாதுன்னு சொல்லாதீங்க. இதைலாம் அப்போ அப்போ தட்டி கேட்கணும்.இவனுங்க தலைவி ஜெயிலுக்கு போனா இவனுங்க தலையிலதீ வச்சி சாகவேண்டியதுதானே. அப்பாவிங்கள் ஏன் கொல்றானுங்க? ஏன் இவனுங்க வீட்டு புள்ளைங்கள கொல்லவேண்டியதுதானே..!
தினா..! செத்தது நம்ம ப்ரெண்ட்ஸ்.. நம்ம காலேஜ் ஸ்டூடண்ட்ஸ், நாம இதுக்கு எதாவது பண்ணியே ஆகணும்டா.” வழக்கதிற்கு மாறாக காவியா அதிக ஆக்ரோஷப்படுகிறாள்.

“ யெஸ் யெஸ் யார் தட்டிகேட்பாங்கன்னு நாம காத்திருக்க கூடாது. இந்த மாதிரி ரவுடிகளை தட்டிகேட்கவும், வெட்டி சாய்க்கவும் முதல் ஆளா நாமதான் நிக்கனும். எத்தனை நாளைக்குதான் வேடிக்கை பார்க்கமுடியும்.?

காவி...! ஒன்னு செய்யலாம்.. இந்த மாதிரி வன்முறை கொலைகள் இதுவே கடைசியா இருக்கனும். என் கையை இறுக்கமா பிடி. இங்க.. இந்த இடத்திலேயே அப்படியே உக்காருவோம். இதுக்கு கவர்மெண்ட், போலீஸ், சட்டம் ஒரு முடிவு சொல்லியே ஆகணும் ” இருவரும் நீதிமன்றத்தின் பார்வையாளர்கள் அறையின் வாசலில் அமர்ந்துவிட்டனர். அவர்களுடன் இணைந்து அவர்களின் நண்பர்களும் அறப்போராட்டத்தில் அமர, சூழ்நிலை வானில் பதற்ற மேகம் பரவ ஆரம்பித்தது.

இவர்கள் தீடிரென்று போராட்ட செய்ய ஆரம்பத்ததை அறிந்த காவல்துறை ஆணையாளர் ஜெய்ப்பிரகாஷ், மிகுந்த ஆக்ரோஷத்துடன் அங்கு வந்து..

“லுக் நீங்க ரெண்டு பேருமே அக்யூஸ்ட் கேஸ்ல உள்ள இருக்கீங்க. கோர்ட்ல வந்து இப்படி பண்ணுவது சரியில்ல. உங்கமேல இருக்கிற கேஸ்ல இருந்து நீங்க ரிலீவ் ஆவது இதுனால பாதிக்கும். ஒழங்கா எழுந்திருக்கனும். இல்லைன்னா வலுக்கட்டாயமா தூக்கிட்டு போக வேண்டியதா இருக்கும். ஆல்ரெடி செமத்தியா வாங்கி இருக்கீங்கல . திரும்பவும் சொல்றேன் நீங்க ரெண்டு பேரும் சாதாரண கேஸ்ல மாட்டிக்கல. பொடா............... “

“ சரிதான் மூடிட்டு போடா. ” அதிரடியாக தினரகரன் மிகுந்த ஆவேசத்துடன் வார்த்தையை கொட்டிவிட. அடிப்பட்ட தேளாக அதிகாரத்தின் கொக்கால் கொத்திவிட கொதியாய் கொதித்த எஸ்.பி ஜெயப்பிரகாஷ்

“ டேய்........... கே***.ப்**** என்ன திமிரா.? பொளந்து கட்டிடுவேன் “ என்று கண்கள் சிவந்த எஸ்.பி காவலர்களை பார்த்து ,,,” ம்ம்ம்ம் கிளியர் தம் . ஹரி ஹரி பாஸ்ட்ட்ட் “
ஆணையிட்ட எஸ்.பியை கண்டித்து அங்கிருந்த சில மாணவர்கள் கூச்சலிட, அதற்குள் நீதிமன்றத்திற்கு வெகு அருகிலுள்ள அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் அங்கு அந்த போராட்டத்திற்கு ஆதரவாக கூட ஆரம்பிக்க, இதைக்கண்ட கருப்பு சட்டைக்கார சட்டக்காரர்கள் பார்வையாளராக நிற்க , இத்தனையும் சமாளிக்க காக்கி சட்டைக்காரர்கள் எச்சரிக்கையாக மிரட்ட ... நீதிமன்ற வளாகம் போராட்ட களமாக. போர்களமாக மாற ஆயுத்தமானது.

“ சார் சார் பொறுங்க நான் என் பையன்கிட்ட பேசுறேன். ஆல்ரெடி உடம்பும் மனசும் உடைஞ்சு ரணத்தில இருக்கான். மேலமேல காயப்படுத்தாதீங்க. பொறுப்பு இருக்கிற நீங்க பொறுமை இழக்காதீங்க. சின்னபையன் ஆத்திரப்படுறான்னா.. பெரிய அதிகாரி நீங்க சட்டத்தை தூக்காதீங்க. கோவபுத்தியை காட்டாதீங்க. இருங்க் ப்ளீஸ்.. “ தினாவின் தந்தை சற்று கெஞ்சலாகவும் சற்று மிரட்சியாகவும், சற்று கோவத்துடனும் எஸ்.பியிடம் மன்றாடியவரை ஆவேசமாக ... எஸ்.பி.

“ ஓ அந்த தறுதலை நாயோட அப்பனா நீ ? நீ யாருய்யா எனக்கு அறிவுரை சொல்ல. சின்னப்பயலுக்கு இவ்வளவு திமிரா பேசும்போது நான் எருமைமாதிரி போகசொல்றீயோ.. தள்ளு தள்ளு “ என்றவாறே அவரின் தோளை அழுத்தித்தள்ள... அழுத்திய அந்த கையை பிடித்துக்கொண்டு..தினாவின் தந்தை
“ அடச்சீ.. நாய்... அது இதுன்னு பேசுறவேலை வச்சிகாதே. பெரிய பதவியில இருக்கிற பெரிய மனுஷன் மாதிரியா பேசுற. ? உனக்கு எல்லாம் டீசண்டா பேச தெரியாம எப்படிய்யா இந்த போஸ்டிங்க்கு வந்த?. ” தன் மகனை தறுதலை நாய் என்று சொல்லியதை தாங்கமுடியாத ஆத்திரத்தில் எஸ்.பியின் தோளை தன்னையும் மறந்து உலுக்கிவிட.

“ ராஸ்கல். என் மேலயே கைய வைப்பீயா ? “ எஸ். பி ஜெயப்பிரகாஷ் தன் இரும்புக்கரத்தால் தினா தந்தையின் தலையை பிடித்து தள்ளிவிட. நிலைத்தடுமாறி அங்கிருந்த ஒரு இரும்புவேலி மீது விழுந்து அவர் நெற்றியில் குத்தி குருதிவரும் காட்சியை கண்ட தினகரனுக்கு.

ஆத்திரம் .. கோபம், வெறி,ஆவேசம் என பல உச்சநிலை உணர்வுகள் மேலோங்கி இதயத்தின் துடிப்பு இடியாய் இடிக்க. மூளை எரிமலையாய் ரசாயன மாற்றத்தில் பொங்க, கண்களில் உருகிக்கொண்டிருக்கும் இரும்பின் நிறத்தோடு அவன் மூச்சில் சூறாவளி அனல் காற்று வெளியேற... தசையாட, நரம்பு புடைக்க , சதை வெடடெக்க, இரத்தம் கொதிக்க....அருகிலிருந்த ஒரு காவலரின் தடியை நொடி நேரத்தில் பிடுங்கிவிடும் தருணத்தில்

காவியா “ தினா..தினா.. வே வேண்டாம்” என்று தடுத்திட முயன்றும் அடக்கிவைக்கப்பட்டிருந்த மிருககுணத்தை கட்டுப்படுத்த முடியாதவனாய்...

நூறு கிலோமிட்டர் வேகத்தில் விரையும் ஒரு புரவியின் வேகத்தில் ஓடிவந்து, சச்சின் டெண்டுல்கர் சிக்சர் விளாசும் வலுவான மட்டையின் வேகத்தில் எஸ்.பியின் மண்டையில் தான் வைத்திருக்கும் தடியால் போட்டான் ஒரு போடு....

அதிகார திமிரில் ஆணவத்தில் ஆட்டமாடிய சட்டத்தை காக்கும் காவல்துறை ஆணையாளரின் மண்டையிலிருந்து பொதுஜனத்தின் சாபமாய் வெளியேறியது இரத்தம். வெறியேறியது மற்ற காவலர்களின் துறைரீதியான ஆதரவு இரத்தம்.

அதிரடி தாக்குதலில் நிலைகுலைந்து தரையில் வீழந்த எஸ்.பியின் நெஞ்சில் கால் வைத்து ஒரு யானையின் பலத்தோடு மிதித்தான் தினகரன். ஆனாலும் அடங்கவில்லை அவனின் ஆத்திரம் அடித்துகொன்றுவிடும் நோக்கத்தில் தடியை மீண்டும் ஓங்க, அதனை தடுத்தது மற்ற காவலர்களின் கொடூர கைகள். அத்தனை கைகளையும் முரண்டுப்பிடித்து தடுத்துவிட்டு, கீழே குனிந்து எஸ்.பி யின் இடுப்பிலிருந்த துப்பாக்கியை கையில் எடுத்து...

“ எவனாவது என்னை தொட்டீங்க.. சுட்டு பொசுக்கிடுவேன். கலெக்டர், ஜட்ஜ் எல்லாரும் இப்போ இப்போ என் முன்னாடி இன்னும் இன்னும் 15 நிமிஷத்தில வந்து நின்னே ஆகணும். இல்ல. இந்த ஆளோட உயிருக்கு நான் பொறுப்பு இல்ல “ தினகரன் எஸ்.பியின் நெற்றியில் துப்பாக்கியின் முனையை வைத்து மிரட்ட ஆரம்பித்தான்.

“ தினா .. என்னடா இது ? இது சரியில்ல “ என்று சொன்ன காவியாவின் விழிகளில் பயத்தின் கண்ணீரை வடிப்பதை பார்த்து.

“ மஹும் ம்ம்ம்ம்ம் ” கண்களால் காவியாயை அமைதிப்படுத்துகிறான்..

“ டேய் .. டேய் ..என்னடா. எனக்கு ஒன்னும் இல்ல. இப்படி பண்ணாதே பா.. உன் லைப் வீணாயிடும்.” தினாவின் தந்தை உருகி வேண்டுவதை கூட பொருட்படுத்தாமல்

“ உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்.. . ம்ம்ம்ம்ம்ம் “

**** தீவிரவாதி, போராளி என்று கையில் ஆயுதம் ஏந்துபவனாக யாரும் தானாக உருவாவது இல்லை. உருவாக்கப்படுகிறார்கள் அட்டுழியங்களிலும், அடிமைப்படுவதிலும், கொடுமைப்படுவதிலும்..! ****




(தொ..ட..ரு..ம்)




-இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (9-Oct-14, 11:13 am)
பார்வை : 255

மேலே