வண்ணக் கனவுகள்

எப்போதெல்லாம் உடம்பு கொஞ்சம் எடை கூடுகிறதோ அப்போதெல்லாம் உடனே உணவுப்பழக்கத்தை மாற்றிக் கொள்வேன். தினசரி ஓடுவது வழக்கம்தான் என்றாலும் டேஸ்ட் டங்க் எனப்படும் சுவைக்கு உண்ணும் பழக்கம் மட்டும் என்னை விட்டு போவேனா என்கிறது. ஒரு டின் முறுக்கை என் முன்னால் வைத்தாலும் பேசிக் கொண்டே எல்லாவற்றையும் முடித்து விடுவேன். முறுக்கு என்று சொன்ன உடனேயே தீபாவளி நினைவுக்கு வருகிறது எனக்கு. தீபாவளிக்கு இரண்டு வாரத்துக்கு முன்பாகவே முறுக்கு சுடுவதற்கான எல்லா வேலைகளும் வீட்டில் ஆரம்பித்திருக்கும். மாவு அரைத்து வருவது, எண்ணெய் வாங்கி வைப்பது என்று அம்மா பம்பரமாய் இயங்க ஆரம்பித்திருப்பாள். அம்மாவுக்குத் தெரியும் எனக்கும் என் தம்பிகளுக்கும் சும்மா ஐம்பது முறுக்கோ அல்லது நூறு முறுக்கோ சுட்டால் பத்தாது என்று....!

மளிகைக்கடையில் இருந்து பிரிட்டானியா பிஸ்கெட் காலி டின் ஆறு ஏழு வாங்கி வந்து உள்ளே பேப்பர் போட்டு சுட்ட முறுக்கை எல்லாம் அதில் ஸ்டோர் செய்து வைத்து விடுவோம். முறுக்கு, சீடை, லட்டு, சமோசோ, ரவா உருண்டை, அதிரசம் எல்லாம் தீபாவளி முடிந்தும் பல மாதங்கள் வீட்டில் இருக்கும். டிவி பார்க்கும் போதும், புத்தகம் படிக்கும் போதும் கையில் முறுக்கோ, அதிரசமோ, அல்லது வாயில் போட்டு அதக்கிக் கொண்ட சீடையோ இல்லாமல் செய்வது கிடையாது. தீபாவளி முடிந்தவுடன் தொடங்கும் அடை மழைக்காலத்தில் வீட்டு ஜன்னலோரம் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு போர்வையைப் போர்த்தியபடி ஏதோ ஒரு நாவலுக்குள் மூழ்கிக் கிடக்கும் சுவாரஸ்யத்தில் எத்தனை முறுக்கு சாப்பிட்டேன், எத்தனி சீடை உருண்டை உள்ளே உருண்டு போனது என்பதற்கெல்லாம் கணக்கு வழக்கு கிடையாது.

மழையைப் பொறுத்தவரைக்கும் எனக்கு பிடித்த ஒரு விசயம் என்னவென்றால் மழை பரபரப்பாய் ஓடிக் கொண்டிருக்கும் மனிதர்களை வலுக்கட்டாயமாக ஓரங்கட்டி உட்கார வைத்துவிடும். எப்போதும் இயந்திரத்தனமாய் இயங்கும் ம்னிதர்களை இழுத்துப் பிடித்து உட்கார வைப்பதற்காகவே மழைக்கு ஒரு சபாஷ் போடலாம். ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் மிரட்டும் புயல் எச்சரிக்கையை டிவி இல்லாத காலங்களில் ஆல் இந்திய ரேடியோவில் இருள் சூழ்ந்த உச்சிப் பகலில் பயம் கடந்த ஒரு த்ரில்லோடு கேட்டுக் கொண்டிருப்பது எவ்வளவு சுவாரஸ்யமானது தெரியுமா? விவிதபாரதியில் சில நேரம் சட் சட்டென்று வானொலி நிகழ்ச்சியை எல்லாம் நிறுத்தி விட்டு கந்தர் சஷ்டி கவசம் போடக் கூட ஆரம்பித்து விடுவான். எல்லா மதப்பாடல்களையும் போட்டு வானொலி நிலையமே பயத்தில் அலறிக் கொண்டிருக்கும் இடை இடையே மூன்றாம் எண் எச்சரிக்கை கொடி கடலில் ஏற்றப்பட்டிருக்கிறது ஆதலால் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ள்ப்படுகிறார்கள் என்று சொல்வதோடு கடலோர மாவட்டங்களில் வெள்ள எச்சரிக்கை அபாயம் ஏற்பட்டிருக்கிறது என்று சொல்லும் போது மதுக்கூரிலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் அதிராம்பட்டினம் கடல் என் வீட்டு வாசலில் வந்து ஆர்ப்பரிப்ப்து போல இருக்கும் எனக்கு...

உணவைப் பற்றி சொல்ல வந்த போது நொறுக்குத் தீனிக்குள் நுழைந்து நொறுக்குத் தீனி முறுக்கை நினைவுபடுத்தி, முறுக்கு தீபாவளிக்குள் சென்று தீபாவளி காலமான மழைக்காலத்துக்குள் நுழைந்து இப்போது கட்டுரையில் புயல் வீசிக் கொண்டிருந்தாலும் கூடப் பரவாயில்லை....நாம் மீண்டும் ரிவர்ஸ் கியர் போட்டு நொறுக்குத் தீனிக்குப் போய் உடல் எடைக்குள் நுழைவோம்..

நான் கல்லூரியில் படித்த 1996 களில் எப்படியாவது குண்டாகி விட வேண்டும் என்பதே என்னுடைய மிகப்பெரிய லட்சியமாய் இருந்தது. கொஞ்சம் பூசினால் போல இருந்தால்தானே நன்றாக இருக்கும் என்று போவோரும் வருவோம் சொல்ல அதற்கும் மேல் ஏதாவது ஒரு கல்யாணம் காட்சி என்று அப்பா அம்மாவோடு போய் உட்கார்ந்திருந்தால் வந்து போகும் அத்தனை உறவினர்களும் வேறு வேலையே இல்லாமல் ஏண்டா சாப்டுறியா இல்லையா...? ஏன் இப்டி மூத்திரம் குடிச்ச கண்ணுகுட்டி மாதிரி இருக்க என்று தோளில் தட்டி கேட்கும் போது எனக்கு அவமானம் பிடுங்கித் தின்னும். பத்தாதக் குறைக்கு அப்பா வேறு ஏண்டா நல்லாதான் சாப்டுத் தொலைச்சா என்னடா எங்க போனாலும் எல்லாரும் ஏன் இப்டி ஒல்லியா இருக்கேன்னு கேக்கும் போது எனக்கு அவமானமா இருக்கு...என்று அம்மாவை ஓரக்கண்ணால் பார்க்க.... அம்மாவோ ஆனி போய் ஆடி வந்தா அவன் டாப்புல வந்துடுவான்னு பாலத்தளி சோசியர் சொன்னாரு என்பது போல எதையோ சொல்லி வைக்க...

என்னோடு படித்த நண்பர்கள் எல்லாம் காற்றடித்துப் பலூன் போல உப்பிக் கொண்டிருக்க நான் மட்டும் ஏன் இப்டி ஒல்லியா இருக்கேன்...என்ற பெருங்கவலை என்னை உலுக்கி எடுத்த போதுதான் மணிமேகலைப் பிரசுரத்தின் அந்த விளம்பரத்தைப்பார்த்தேன்...." ஒல்லியாக இருப்பவர்கள் குண்டாவது எப்படி..." என்று ஒரு பிரசுரமும் அதற்குக் கீழேயே 'முகப்பருவைப் போக்க முப்பது வழிகள் என்று இன்னொன்றும், இரண்டையும் பார்த்த உடனேயே எம்.என்.நம்பியார் கையில கதாநாயகி சிக்கின உடனே கையக் கசக்கிக்கிட்டு சிரிப்பாரே அதே மாதிரி நானும் சிரித்தேன். அடிச்சுப் பிடிச்சு இரண்டு புத்தகமும் வேணும்னு மணிமேகலைப் பிரசுரத்துக்கு மணி ஆர்டர் பண்ணவும் டாண்ணு எண்ணி ஏழாவது நாள் என் கையில....

ஒல்லியாக இருக்கும் நீங்கள் குண்டாவது எப்படி...?
முகப்பருவைப் போக்க முப்பது வழிகள்....

இரண்டு புத்தகமும் வந்து கிடைச்சுடுச்சு. புத்தகத்தைப் படிக்கிறதுக்கு முன்னாடியே முகப்பருவை போக்க நான் ஆயிரம் வழிகளைக் கடைபிடிச்சு சோர்வடைஞ்சு போய் இருந்த நானே அந்தப் புத்தகத்தை விட பெட்டரோ ஒரு புத்தகம் எழுதி இருந்து இருக்கலாம். க்ளியர்சில், அல்ட்ரா க்ளியர்சில், விக்கோடர்மரிக், பேரண்ட் லவ்லி, ஜாதிக்காய், சந்தனம், மஞ்சள் மண்ணாங்கட்டின்னு எல்லாத்தையும் போட்டுப் பார்த்து இருந்த எனக்கு அந்த புத்தகம் என்னம்மோ புத்தமதத்தை இயற்றியவர் யார்...? புத்தர் என்ற ரேஞ்ச்ல கொடுத்த ஐடியாக்களால ஒரு பிரயோசனமும் ஏற்படாம போனது என்பதெல்லாம் தனிக்கதை....

குண்டாகியே காட்டுறேன்னு எனக்கு நானே சபதம் போட்டுக்கிட்டு அடுத்த புத்தகத்தை திறந்து படிக்க ஆரம்பித்த எனக்கு தலை சுற்றாததுதான் குறை. ஏற்கெனவே கணக்குப் பாடத்துல நான் ரொம்ப சூப்பர், இந்த லட்சணத்துல இத்தனை அவுன்ஸ் இதைச் சாப்பிடுங்க, அத்தனை அவுன்ஸ் இதைச் சாப்பிடுங்க, சாக்லேட், ஐஸ்க்ரீம், பாதாம் பிஸ்தான்னு அவுங்க கொடுத்திருந்த மெனுவை எல்லாம் மெனக்கெட்டு ராத்திரியும் பகலும் படிச்சு படிச்சு இன்னும் டென்சனாகி சாப்பாட நினைச்சாலே எனக்கு குமட்டிக்கிட்டு வர ஆரம்பிச்சதோட விளைவு....குண்டாக ஆசைப்பட்ட நான் அந்தக் கவலையிலேயே இன்னும் ஒல்லியாகா ஆரம்பிச்சுட்டேன்...! ஏட்டுச் சுரைக்காய் என்னைக்குடா கறிக்கு ஆகி இருக்கு அதனால தட்டுல இருக்க சுரைக்கயாயை ஒழுங்க சாப்பிடுன்னு அப்பா போட்ட கூச்சலில் அந்த மணிமேகலைப் பிரசுரம் புத்தகத்தை எல்லாம் எங்கே தூக்கிப் போட்டேன்னு எனக்கு நினைவிலேயே இல்லை.

காலச்சுக்கரம் வேகமா சுத்த சுத்த கல்லூரி முடிச்சு வேலைக்கு சேர்ந்த பின்னாடி எப்பவும் கொக்க கோலாவும், அப்பப்போ பெப்ஸியும் பேசி வச்சிக்கிட்டு செஞ்ச சதியோட சென்னையில தெருத்தெருவா சுத்தி நல்ல நல்ல ஹோட்டலா கண்டுபிடிச்சு சாப்ட சாப்பாடும் ஒண்ணா சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமா உடம்பு தேற ஆரம்பித்தது. ஒரு குறிப்பிட்ட காலம் வரை உடம்பு குண்டாகணும்னு ஆசைப்படுறதும் அப்புறம் உடம்பு இளைக்கணும்னு ஆசைப்படுறதும் பெரும்பாலன மனிதர்களுக்கு ஏற்படும் ஒரு எதேச்சையான உணர்வுதான்னு இன்னைக்கு எனக்குப் புரிஞ்சாலும் அந்த அந்த காலக்கட்டத்துல அது எல்லாம் ஏதோ உண்மயாத்தான் நமக்குத் தெரியவும் செய்யுது.

உடம்பு குண்டாகணும்னு அன்னிக்கு ரொம்பவே வருத்தப்பட்டு அதற்கான பகீரத முயற்சிகளை எல்லாம் செஞ்ச நான் தான் இந்த 38 வயசுல உடம்பு ஃபிட்டா இருக்கணும்னு தினமும் ஜாகிங் போறேன். இன்னும் கொஞ்சம் இளைச்சா தேவலாமே என்று அளவுக்கு அதிகமா சாப்பிடுறத குறைச்சுக்குறேன், ஒருவேளை வயிறு புடைக்க சாப்ட்டா அடுத்த வேளை சாப்பாட்டை குறைச்சுக்குறேன்....என்னதான் வேண்டும் மனிதா உனக்குன்னு என்னை பார்த்தே எப்போதும் கேட்கும் ஒரு ஆதரக்கேள்வியை அடிக்கடி கேட்டுக்கவும் செய்கிறேன். வாழ்க்கை ஒரு செடி வளர்வது போலத்தான், ஒரு மழை பெய்வது போலத்தான், பருவகாலங்களின் சுழற்சியைப் போலத்தான்... ஏதோ ஒன்று நடக்கிறது, அது மாறுகிறது பின்பு வேறு ஏதோ ஒன்று நடக்கிறது....

எதுவுமே இங்கே முக்கியமில்லை, எதுவுமே இங்கே நிதர்சனமில்லை என்ற புரிதலோடு .. எதுதான் நிதர்சனம்..? எதுதான் முக்கியம் என்ற கேள்வியும் கூடவே என்னோடு பயணித்துக் கொண்டுதானிருக்கிறது இப்போது. எதையாவது கற்பனைகள் செய்து கொள்வது நன்றாகத்தானிருக்கிறது என்றாலும் அதற்குள்ளேயே மூழ்கி இதுதான், இப்படித்தான் என்று எந்த ஒரு பொய்யான முடிவிற்குள்ளும் போய் விழுந்து விடவும்ஆசையில்லை.

காற்றில் மிதக்கும் இறகு போல... இருக்கிறது இந்த வாழ்க்கை....
எந்த திசையென்றறியாது...
இடமாய், வலமாய், மேலாய், கீழாய்....பறந்து பறந்து...
எங்கேதான் சென்று கொண்டிருக்கிறேன் நான்...?
உறக்கம் கலைந்து எழுவது போல..
ஏதேனும் ஒரு புது உலகத்துக்குள்...எழுப்பி விடுமோ
இந்த வாழ்க்கையின் முடிவு.. என்னை...?

எழுதியவர் : Dheva S (15-Oct-14, 8:10 pm)
Tanglish : vannak kanavugal
பார்வை : 445

மேலே