34 வயது

என் கனவுகளுக்கான
புகை மூட்டத்தை
உன் புன்னகையே
தருகிறது.......

என் திடுக்கிடல்கள்
பெரும்பாலும்
உன் கொலுசொலிகள்
ஞாபகமே.....

எல்லாவற்றிக்கும்
நிறைந்திருக்கும்
சூட்சுமங்களாய்
உன் பனி மொழிகள்......

காடு கொண்ட
மிரட்டலின் தீவிரத்தை
உன்
கைக்குட்டையின்
தொலைதல்
சொல்லி விடுகிறது.......

சொல்லுதலும்
எளியதல்ல என்ற
சொல்லில் வளர்ந்து
ஊர்கிறது என்
நினைவுக் கதம்பம்.....

நீர் படும்
சூரியனாய் சுருக்கென்று
உள்ளிழுக்கும் பெருங் காதலின்
சிறு ஊர்தல்
எனது பாலைவன பால்யம்.....

நீ மட்டும்
தேவதையாகவே
இருக்கிறாய் ....
தேரடியில் தேன்மிட்டாய்
தின்றபடியே....

தேடிப் பிடித்து காலம் கடந்து
உன்னருகே வந்து,
அன்று போலவே இன்றும் நிற்கும்
எனக்கு மட்டும்
34 வயது.......

கவிஜி

எழுதியவர் : கவிஜி (19-Oct-14, 10:09 pm)
பார்வை : 130

மேலே