எழுத மறந்த கவிதை

அம்மி மிதித்து அருந்ததி பார்த்து
மஞ்சள் தாலி சுமந்த நாள் முதலாய்.....

பட்டாம்பூச்சி வாழ்க்கையிங்கு
பணிதேனி வாழ்வானது

பொறுப்பின்றி கழிந்த நாட்களது
கடமைகளை சுமந்து எதிர் நாட்கள்

அலுவலகத்தை அரை நாள் சுமக்க
அடுக்களையை கால் நாள் சுமக்க
அன்பானவனை மீதி நாள் சுமக்க
சுமைதாங்கியாய் ஒரு நாள் மட்டும் அல்ல
ஒவ்வொருநாளும்......

கவிதையே உலகமென
கழிந்த நாட்கள் அன்று
கவிதை என்ற வார்த்தையே
மறந்து போகுதே இன்று...

மின்னலென வந்து போகும்
கவிதை வரிகள்....

சன்னலோர பேருந்து பயணங்களில்
உச்சி வெயிலில் ஒற்றை மரத்தடியில்
பசியில் உறங்கிகொண்டிருக்கும்
தேகம் மெலிந்த மூதாட்டியை காண்கையில்...

கருவை சுமந்து
கையில் ஒரு குழந்தையும் சுமந்து
அக்கா அக்கா என பேருந்து நிலையத்தில்
பிச்சை எடுக்கும் அப்பெண்ணை பார்க்கையில்...

மல்லாட்டை... மல்லாட்டை ...
என கூவி கூவி விற்கும்
கிழிந்த உடையணிந்த
முதியவரை காண்கையில்...

மளிகை கடையில் செத்துகிடந்த
பெருச்சாளியை நடுரோட்டில்
தூக்கி வீசும் நபரை காண்கையில்....

பரிதாபத்தில் வெறுப்பில் கோபத்தில்
மின்னல் போல வந்து செல்லும் வார்த்தைகள்....
நின்று நிதானித்து சிந்தித்து எழுத கூட
நேரம் ஒதுக்க இயலாது
ஓடுகிறேன்... ஓடுகிறேன்... ஓடுகிறேன்...
மனைவி எனும் பொறுப்போடும்
அரசாங்க ஊழியர் என்ற பதவியோடும்......

-PRIYA

எழுதியவர் : PRIYA (19-Oct-14, 10:37 pm)
பார்வை : 168

மேலே