என் காதல்-வித்யா-போட்டிக் கவிதை

என் காதல்....!!-வித்யா-போட்டிக் கவிதை

கானகத்தில் சிலையாக
நான் காத்திருந்தேன்
கற்பனையில் கலையாக
காதல் வடித்திருந்தேன்

கெஞ்சியோர் விழிநோக்காது
எஞ்சிய மதிக்கொண்டே
வளர்ந்திருந்தேன்

எந்தையும்தாயும்
வரன் தேடட்டுமென
எதிர்பார்த்திருந்தேன்

பிறவிப்பயனெய்த
எனைத்தேடி என் வாசல்வந்தாய்
புரிந்துக் கொள்ளா உறவுகளின்
புறக்கணிப்பின் விளிம்பில் நின்றாய்

பொன் பொருள் கொடுத்து
எனைஅடகுவைக்கும் நாடகமொன்றில்
மோதிரம் தாங்கி நானழுதேன்

அரிதாரம் கலைந்த
முகங்களிலதனை வீசி எறிந்தேன்

நீயே என் பிரபுவென
நெஞ்சம் சொல்லியும்
கண்டநாள் முதலாய்
காதல் பெருகவில்லை
காதல் பெருகியதாலே
நின்னைக் கண்டேன்

பின் பூசலார் போல
நானுமோர் இருதயக்கோவில்
கட்ட விழைந்தேன்
அதன் கருவறையில்
நம் காதல் வைத்தேன்

அன்பில் கோபுரம்
நம்பிக்கையில் விமானம்
நேசத்தில் பிரகாரமுமென
ஆகமவிதிப்படி அமைத்து
வெறுப்பைப் பலிபீடத்தில்
வைத்தேன்

நம் காதல்ஆலயத்தின்
திருக்குடமுழுக்கு நன்னாளை
எண்ணியே நகர்கிறேன்
சுற்றமும் நட்பும் புடைசூழ்ந்து
நமை ரட்சித்தருளவே
காத்துக்கிடக்கின்றேன்....!!

-இது என் காதலே......!!

-vidhya
first year ME (applied electronics)

எழுதியவர் : வித்யா (20-Oct-14, 5:57 pm)
பார்வை : 173

மேலே