கண்ணுள் விரதம்
கண்ணுள் விரதம்.
புண்ணியம் என்றே எண்ணுக நன்றே
பெண்ணினம் ஒன்றே மண்ணதில் கொண்டே.
தன்னுயிர் தந்தே உன்னுயிர் ஈந்தே
தன்னலம் கண்டாள் உன்னலம் வென்றே!
அன்னையர் இனமோ! பெண்ணுயர் கணமோ!
நன்னய தனமோ! பொன்னயர் குணமோ!
கண்ணது நலமோ! பெண்ணவள் வளமோ!
இன்னது உலகோ!முன்னவள் களமோ!
மாதென்ன ஏனமோ சூதினில் போனதாம்.
ஏதினி மானம் இழந்தது பாரதம்.
உருவிய துயிலுக்குள் ஒளிந்துள்ள மானம்
உயிரா மயிரா தொலைத்திட வேறெதும்!
உணர்வைத் தந்தவள் பெண்ணென மறந்தே
கனவைச் சிதைத்துக் காந்தாரி பறித்தே
கட்டாயப் படுத்தி கபோதிக்கு முடித்தே
கெட்டான் பிதாமன் சகுனியை இழுத்தே!
தன்னுள் உணர்வு பெண்ணவள் கனவு
பெண்ணுள் உரிமை எண்ணவும் நினைவு.
கண்களைக் கட்டிய காந்தாரி சபதம்
பெண்ணை ஏற்றவே கண்ணுள் விரதம்.
கண்ணே பெண்ணே தன்னே கலங்கிட
என்னே பின்னே நன்னே விளங்குமோ!
பெண்ணே என்னே தன்னே துலங்கிட
திண்ணே இன்னே முன்னே முழங்குதோ!
பாஞ்சாலிப் பெண்ணின்றும் சபதம் எடுத்தாள்.
காந்தாரிக் கண்ணவிழ்த்தும் விரதம் விடுத்தாள்.
பெண்ணைப் போற்றா எண்ணவர் எல்லாம்.
தன்னைக் காக்க முன்னிலை துறப்பார்.
கொ.பெ.பி.அய்யா.