ஆசை

ஆசை...
ஒரு குழந்தைக்கு
மிட்டாய் மீது பிறக்கும்
கிறக்கம் போல்
கொண்டேன் சில ஆசைகள்
நானும் எனக்காக...

தாயின் முத்த மழைதூவல்
தேக்கி வைக்கும் குழந்தையின்
கன்னக்குழியாய் பிறக்க ஆசை...

பிறந்தநாள் பிள்ளையின்
முகமிளிரலில்
இனிப்புகேக் மீதமர்ந்து
இருள் தின்னும் மெழுகு திரியாய்
மாறிப் போக ஆசை...

கிரிக்கெட் மகன்களின்
பந்துவீச்சில்
மண்னோடு மடிசாயும்
மர 'Stump' ஆக
மாறிப் போக ஆசை...

குழந்தையின்
பிஞ்சு நா வருடலில்
குச்சி ஐஸ் வடிக்கும்
ஆனந்த கலர் கண்ணீராய்
மாறிவிழ ஆசை...

கணவன் மனைவியின்
சண்டை சத்தத்தின்
ஊடல் அலைவரிசையாய்
உயிர்த்தெழ ஆசை...

காதலனின் உதட்டு நடத்தின்
சிரிப்புக்கு சலங்கை கட்டும்
காதலியின் திருப்பெயராய்
திளைத்துப் போக ஆசை...

தாயின் மார் சுரக்கும்
தாய்பாலின் வெண்மையாய்
வண்ணமுற ஆசை...

மாலை நேர மழைத்தூரலில்
குளிருக்கு இதமாய்
கொதிக்கும் எண்ணெயில்
குச்சிப்புடி யாடும்
குறுமிளகா பஜ்ஜியாய்
குளியலிட ஆசை...

பனிப்போர்வை
போர்த்தித் தூங்கும்
இலைதேவதையின்
குழல் சூட்டும்
மலர் மொட்டுகளாய்
மையல் கொள்ள ஆசை...

நியூட்டனின் தலை தொட்ட
முழு ஆப்பிளாய் மாற ஆசை..

குழந்தையின் கைபிடித்துக்
கூட்டிப்போகும் தந்தைக்கு
தார்சாலையாய் தவழ ஆசை...

எதுகை மோனை
சந்தம் வெண்பா
வென கூட்டுக்குடும்பமாய்
எழுத்துகள் வாழும்
தமிழ் மொழியாய்
திமிற ஆசை...

மணப்பெண்ணின்
மெட்டி தாங்கும்
மணிவிரலாய் மடிய ஆசை...

நீர்துளியின் தவப்பயனால்
நிறப்பிரிகையின் வரமாய்வந்த
வானவில்ளை வளையலாய் பூட்டிக் கொள்ளும்
வானமங்கையாய் வாழ ஆசை...

எல்லையில்லா திரைக்கடலை
தரையின்மேல்
இழுக்கப் பார்க்கும்
நுரையலையின்
வெள்ளைமனமாய் மாற ஆசை...

தாலிசுமக்கும்
பெண் தேவதைகளுக்கு
திலகமாய் திகழந்துவிட ஆசை...

பருந்திடம் இரவல் வாங்கி
வண்டிநூடே இறக்கை பூட்டி
வழி நெடுகே கூச்சல் போட்டு
'சொய்ங்ங்ங்....' யென
'Sportsbike' ல் பறக்கும்
வாலிபர் முகம் மோதும்
வாடைக் காற்றாய் மாற ஆசை..

இதமான இருள்நேரம்
இளையராஜா இசைச்சமையல்
செவிருசிக்கு சொர்க்கம் காட்டும்
பண்பலையின் இசையாய் அசைய ஆசை...

"ஆசைக் கடவுளே! கேட்டுக்கொள்.
எழுது நீ எனக்காக
'இவை கிட்டும்' என்று
உன் உயில் ஒன்றில்
ஆசையுடன்" -JK

எழுதியவர் : (24-Oct-14, 8:12 am)
Tanglish : aasai
பார்வை : 91

மேலே