புத்தரும் சிறுவனும்

புத்தரும் சிறுவனும்
பாவலர் கருமலைத்தமிழாழன்

ஒருசமயம் புத்தரவர் மரத்தின் கீழே
ஒருமனமாய்த் தியானத்தில் அமர்ந்தி ருந்தார்
தருநிழல்தான் என்றாலும் கோடைக் காலம்
தந்தவெப்பம் தாளாமல் உயிரி னங்கள்
பெருந்தணலில் இருப்பதுபோல் தவித்த போது
பெருந்தவத்து ஞானியுமே தாங்கி டாமல்
திருவுடல்தான் சோர்வடைய வியர்வை கொட்ட
திறந்தவெளி மண்மீது மயங்கி வீழ்ந்தார்

ஆடுமேய்க்கும் சிறுவனவன் அந்தப் பக்கம்
ஆடுகளை மேய்த்தபடி வந்த போது
நாடுபோற்றும் புத்தரவர் மயங்கி ருந்த
நலிந்தகாட்சி கண்டருகில் சென்று பார்த்தான்
காடுவாழும் கீழ்ச்சாதிக் காரன் நானோ
கண்ணியவான் உடல்தொட்டுப் பார்த்தல் தீட்டு
ஈடுயிணை அற்றவரின் தூய்மை கெட்டே
இங்குள்ளோர் ஏசுவரென் றஞ்சி நின்றான்

மயங்கிருக்கும் அவரைவிட்டுப் போவ தற்கும்
மனமின்றி ஏதுசெய்தால் தெளிவா ரென்றே
அயல்நின்று சிந்தித்து நீர்தெ ளித்தால்
அவர்மயக்கம் தெளியுமென்றே முடிவு செய்து
இயல்பான தாழ்ந்தமனப் பான்மை யாலே
இனியஉடல் தொட்டிடாமல் செய்ய எண்ணி
முயன்றாட்டை இழுத்துவந்து முகத்தின் நேரே
முன்நிறுத்திக் காம்பில்பால் கறந்து விட்டான்




புத்தர்தாம் கண்விழிக்கக் கரங்கள் கட்டிப்
புறமொதுங்கி அச்சிறுவன் எதிரே நின்றான்
சத்தியத்துப் புத்தரவர் எழுந்த மர்ந்து
சாந்தமாகத் தாகத்தைத் தணிப்ப தற்கே
உத்தமனாம் சிறுவன்நீ பால்க றந்தே
உன்கரத்தால் எனக்களிப்பாய் என்று கேட்க
இத்தரையில் கீழ்ச்சாதிச் சிறுவன் நானோ
இனியபாலைத் தருவதுதீட் டென்று ரைத்தான்

உயர்சாதிக் காரரான உங்க ளுக்கே
ஊரில்கீழ்ச் சாதியென்றன் கையால் தந்தால்
உயர்ந்தவுங்கள் தூய்மைக்கே களங்கம் சேர்க்கும்
உலுத்தனென்ற பாவமுமே சேரும் என்றே
அயல்நின்று சிறுவனவன் சொன்ன சொல்லை
அமைதியாகக் கேட்டபுத்தர் சிரித்த வாறு
மயல்நெஞ்சில் கொண்டுள்ளாய் அறியா மையால்
மதியற்றார் உரைத்தசொற்கள் இவைக ளென்றார்

கீழ்ச்சாதி மேல்சாதி என்ப தெல்லாம்
கீழோர்கள் கட்டிவைத்த பொய்யின் மூட்டை
ஊழ்வினையால் வந்ததன்று அறிவி ருந்தும்
உய்த்துணரா அறிவிலிகள் உதிர்த்த சொற்கள்
ஆழ்ந்திங்கே சிந்தித்தால் அனைவ ருக்கும்
அவர்தம்மின் உடல்ரத்தம் சிவப்பு ஒன்றே
வாழ்கின்ற வாழ்க்கைதான் உயர்வு தாழ்வை
வழங்குகின்ற உண்மையினை அறிவாய் என்றார்







அறநெறியை நீதியினைப் கடைப்பி டித்தே
அதன்வழியில் நடப்பவனே உயர்ந்த சாதி
மறநெறியை விட்டன்பும் கருணை யோடும்
மற்றவரை அணைப்பவனே உயர்ந்த சாதி
பிறப்புதனில் உயர்வென்றும் தாழ்வு என்றும்
பிரிவொன்றும் இல்லையிதை உணர்தல் வேண்டும்
புறத்தினிலே நாம்சூட்டி வைத்தி ருக்கும்
புரையிதனை அறுத்தெறிய வேண்டு மென்றார்

உணர்விழந்த போதெனக்கே கருணை யோடே
உதவியநீ உண்மையிலே உயர்ந்த சாதி
உணவுதனை நீதந்தால் அமுத மாகும்
உன்கரத்தால் பால்கறந்து தருவாய் என்றார்
மனவிருள்தான் அகன்றிடவே மகிழ்ச்சி யோடு
மறுப்பின்றிப் பால்கறந்து சிறுவன் தந்தான்
தனதுதாகம் தீரப்பால் குடித்த புத்தர்
தலைதடவிச் சிறுவனையே வாழ்த்திச் சென்றார்


*************

எழுதியவர் : பாவலர் கருமலைத்தமிழாழன் (25-Oct-14, 5:01 am)
பார்வை : 2867

மேலே