தெளிவு பெற்றான்

தெளிவு பெற்றான்
பாவலர் கருமலைத்தமிழாழன்

முதியவர்தாம் உடல்தளர்ந்து கைந டுங்கும்
முதுமையிலும் சாலையோரம் மரத்தின் கன்றைப்
பதியவைக்கக் குழியொன்றைத் தோண்டும் போது
பார்த்தபடி வந்தவொரு இளைஞன் கேட்டான்
முதியவரே நடுகின்ற செடிவ ளர்ந்து
முழுமரமாய்க் கனிகொடுக்கும் காலந் தன்னில்
விதிமுடிய அனுபவிக்க இருக்க மாட்டீர்
வீணாய்ஏன் உடல்வருத்தி உழைக்கின் றீர்கள் !

பழங்களுடன் எதிர்நிற்கும் மரத்தைக் காட்டிப்
பாரதனைச் சிறுவனாய்நா னிருந்த போது
கிழவனாக இருந்தவர்தாம் நட்டு வைத்தார்
கிடைத்திட்ட பலனையவர் சுவைக்க வில்லை
பழங்களினை நான்உண்ட நன்றி காட்ட
பயன்பெறுவர் சந்ததியர் நாளை யென்றே
பழமரத்தை நடுகின்றேன் ! சுழற்சி யின்றேல்
பாழ்பட்டுப் போகுமிந்த இயற்கை யென்றார் !

வாழ்வதற்கு நாமிந்த சமுதா யத்தின்
வளங்களினை நாள்தோறும் சுரண்டு கின்றோம்
வாழ்வளிக்கும் சமூகத்தை வாழ வைக்க
வாய்த்திட்ட வாய்ப்பாக இந்த வாழ்வில்
வீழ்மரத்தைத் தாங்குகின்ற விழுதைப் போல
விளைகின்ற நன்மைகளைச் செய்யும் போதே
வாழ்வளிக்கும் சமுதாயம் உயரு மென்றார்
வளரிளைஞன் தெளிவுபெற்றே துணையாய் நின்றான் !

எழுதியவர் : பாவலர் கருமலைத்தமிழாழன் (28-Oct-14, 4:24 am)
பார்வை : 185

மேலே