துகிலாத நினைவுகள் -குமார் பாலகிருஷ்ணன்
நேற்றும் அதற்கு முன்தினமும்
ஒரு பெருமழையின்
நீரலைகளை அனுப்பினார்கள்,
என் நினைவுகள்
சொட்ட சொட்ட நனைந்தபடி
நீச்சல் கற்றுக் கொண்டது
முன்னொரு நாள்
ஒற்றைக் காலை தூக்கி
ருத்ர தாண்டவமாடிய
கற்றைக் காற்றை சிருஷ்டித்தார்கள்,
என் நினைவுகள்
வளிமன்டல வான்வீதியில் காற்றுக்கு
பறத்தல் வகுப்பெடுத்தது
இன்னொரு நாள்
பருந்தென அரிதாரம் தரித்தவர்களால்
அலகுகளாலும் நகங்களாலும்
நினைவுகளை ரணமாக்கவும்
எச்சமிடவும் மட்டுமே முடிந்தது.
நிஜங்களையும் நிழல்களையும்
கவரமுடியாதவர்கள்
என் நினைவுலகில் யாருமற்று
மௌனம் வியாபித்திருந்த தருணமொன்றில்
நகல்களை திருடி திருப்தியடைத்துவிட்டனர்.
முப்படகக் கண்ணாடியின்
உள் நுழைந்த ஒளியென
நினைவுகளில் சில எதிரொளிக்கின்றன
சில விலகலடைகின்றன
சில ஊடுருவுகின்றன
ஒருபோதும் எதுவும் அழிவதில்லை
பா.குமரேசன்
இயந்திர மின்னணுவியல்
மூன்றாம் ஆண்டு
கொங்கு பொறியியல் கல்லூரி
பெருந்துறை