மரணம் மறந்த மனிதா

அண்டம் கடந்து
பிண்டம் புகுந்து
நீரில் தவழ்ந்து
காற்றை குடித்து
நெருப்பில் எரிந்து
மண்ணாய் போகும்
மனிதா ?

கனவில் எழுந்து
கருவில் புகுந்து
இதயம் துடித்து
இருளில் விழித்து
இரத்தம் குடித்து
தொப்புள் துறந்த
துணிவா ?

சலனமடைந்து
சகலம் உடைந்து
சிறப்பை இழந்து
சிதிலமடைந்த
சிலையைப்போல
சிறகு ஒடிந்த
பின்னே ?

பெருமை கொண்டு
சிறுமை பூண்டு
பித்தம் கூடி
சித்தம் தேடி
இரத்தம் சுண்டி
இற்றுப்போகும்
உடலே ?

நித்தம் இங்கு
இரத்தம் கண்டு
உயிரைகொன்று
உணர்வை தின்று
நிலைப்பேன் என்று
நினைத்துக்கொண்டு
பிறவிமறந்த
பிணமே ?

உறவை இழந்து
உயிரை அறிந்து
பித்தம் தெளிந்து
சித்தம் உணர்ந்து
செத்த பின்னே
சிவனை தேடும்
சவமே ?

செல்கள் செத்து
குழந்தை செத்து
இளமை செத்து
முதுமை நோக்கி
வருடம் ஏழில்
நீயே புதுமை
தானே ?

புல்லாய் பிறந்து
புழுவாய் ஆகி
மாறி..மாறி
எல்லாப்பிறப்பும்
பிறந்து இறந்து
மனிதன் ஆவாய்
தினமே ?

மறைந்து தோன்றும்
தோன்றி மறையும்
பிறந்து இறக்கும்
இறந்து பிறக்கும்
இதுதான் இயக்கம்
நான் என்றால்
நீ வெறும்
உடலே ?

மயக்கம் நாடி
மதிப்பு தேடி
மமதை கூடி
மனிதம் ஓடி
மதமும் பாடி
மரணம் மறந்த
மனிதா ?

நெருப்பை எரித்து
நீரை கடந்து
காற்றை கிழித்து
பிண்டம் பிளந்து
அண்டம் நோக்கி
அதி வேகம் கொள்ளும்
ஆன்மா ?

உடலை களைந்து
எங்கு செல்வாய்
உயிரை கொண்டு
உதவி செய்வாய் ...

உன்னுள் உண்டு
சிவனுமென்றால்
சக மனிதனுள்ளும்
கடவுள் உண்டு

கருத்தில் கொண்டு
கடமை செய்வாய்
கனவில்கூட
நன்மை செய்வாய் ..

மண்ணில் போகும்
மனிதஉடலே
"மரணம் ஒன்றே
மரணம் இன்றி "
வாழும் இங்கு
நீ ஏன் வாடிநின்று ?

மாற்றம் ஒன்றே
உலகின் நியதி
மரித்துப்போதல்
இறைவன் நீதி ..

புரிதல் கொண்டு
புதுமை கண்டு
புவியின்மீது
பதித்துச்செல்-உன்
"பாதம் ரெண்டு "
------------------------------------------------------------
மறுபதிவு -- குமரேசன் கிருஷ்ணன்

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (31-Oct-14, 8:45 pm)
பார்வை : 277

மேலே