அம்மாவுக்கு சமர்ப்பணம்

அன்புத்தாயே
அழகாக எனைத்தூக்கி
அம்சமாக அலங்கரித்து
அம்புலியை காட்டி சோறூட்டுவாய்....!

ஆருயிரால் இணைந்த நீ
ஆவலுடன் எனையிழுத்து
ஆசை முகத்தில் முத்தமிட்டு
ஆராரிரோ பாடி உறங்க வைப்பாய்......!

இனிய குரலால் நீ பாடும்
இனிய தாலாட்டிலும்- உன்
இரு கைகளும் என் முதுகைத்தட்ட
இமை மூடி எனை மறந்தேனம்மா......!

ஈன்றவள் நீ
ஈருயிரால் இணைந்தவள் நீ
ஈசன் வந்துனை கேட்டால் கூட
ஈயேனம்மா.....!

உன்
உதிரத்தை எனக்கூட்டி
உயிர் தந்த உன்னை -என்
உயிர் பிரிந்தாலும் மறவேனம்மா.....!

ஊட்டி வளர்த்தாய் நீ
ஊர் பேச வைத்தாய் நீ
ஊசி முனை என் மேல் பட்டாலும்
ஊதுலை கனலாவாயம்மா ....!

என்றும்
என் மனம் விரும்புகிறது
என்னுடன் நீயிருக்க
என்னுயிர் மடியும் வரை...!

உன் முந்தானைக்குள்
ஒளிந்து நான் செய்த
குறும்புகள் இன்னும்
நிழலாய் தொடருதம்மா....!

வேலை விட்டு வந்ததும்
வாசல் முற்றத்தில்
எனை உன் மடியில் சாய்த்து
தலைப்பார்க்கும் அழகை
என்னவென்று சொல்ல...?

தேயிலை கறைப்படிந்து
அதில் ஆயிரம் காயங்கள்
இருந்தாலும் நீ என்னை தடவும் போது
உன் கையிலிருக்கும் சொரசொரப்பும்
சுகமேயம்மா...!

இரு வளையலை கையில் போட்டு
அடுப்படியில் நீ சமைக்கும் வாசம்
முற்றத்தில் விளையாடும் என்
மூக்கைத்தூண்டி
வாயூறச்செய்யுமம்மா.....!

பசிக்கிறது என்றால்
பட்டினி கிடந்து என்
பசியாற்றுவாயம்மா -உன்
அருகிலமர்ந்து ஒருபிடி
சாப்பிட்டாலும் அது
அமிர்தமாகுமம்மா....!

குற்றம் செய்யும் போது
தண்டித்து பின் என்னை
அள்ளியணைத்து முத்தமிட்டு அழும்
உன் பிஞ்சு மனம் கண்டு
மேனி சிலிர்க்குதம்மா...!

அட்டைக்கடியாலும்
வெய்யில் மழையானாலும் கஷ்டப்பட்டு
களைத்து நீ வரும் வேளை
அம்மா என்றழைத்ததும்
உன் முகத்தில் வரும் சந்தோசம்
புதிதாக பூத்த பூவைப்போல
மலருதம்மா....!

இடியினோசை கேட்டும்
பதறாத உன் நெஞ்சம்
என் அழுகுரல் கேட்டதும்
பதறிப்போகுமம்மா...!

விளையாட்டுத்தனமாக
ஒளிந்துக்கொண்டப்பின்
தேடிப்பார்த்து காணாதவிடத்து
இதயம் படபடக்க
முகம் வியர்த்து வடிய
தடுமாறி ,செய்வதறியாது
மூளையிலமர்ந்து அழுவாயம்மா.....!

மெதுவாக எழுந்து வந்து
நான் உன் கண்ணை
என் பிஞ்சுக்கையால் மறைத்ததும்
அழுகையோடு உன் இதழோரம் வரும்
ஒரு மௌனச்சிரிப்பு
ஆயிரம் கதைகள் சொல்லுமம்மா..

உன் கை பிடித்துக்கொண்டு
கடைவீதியில் நடந்து சென்று
கண்டதெல்லாம் நான் கேட்ட போது
முகம் சுழிக்காத என் தாயே..........!

கொட்டும் மழையில்
நீ நனைந்து என்னை
உன் புடவை முந்தானையில் மறைத்து
வீடு வரையில் தூக்கி வருவாய்...!

வீடு வந்தததும்
தலையைத்துவட்டி
அடுப்பில் உன் கை காசி
என் முகத்தில் ஒத்தடம் வைப்பாய்

இலேசாக
காய்ச்சல் வந்தாலும்
பதறிப்போய் உனக்கு
தெரிந்த வைத்தியத்தை
செய்து குணப்படுதுவாய்...!

உன் அன்பில்
கட்டுண்ட என்னை
ஏக்கங்கள் கூட
ஏறெடுத்து பார்க்காதம்மா......

காத்திருந்தாலும்
தவமிருந்தாலும்
உன் தலையணை மடி தரும்
சுகம் பெறுவேனோ அம்மா..........

நான் பிறந்ததும் சந்தோஷப்பட்டாய்
முதற்பல் முளைத்ததும் சந்தோஷப்பட்டாய்
அம்மா என்றதும் சந்தோஷப்பட்டாய்
முதலடி எடுத்து வைத்ததும் சந்தோஷப்பட்டாய்
நானும் இன்று சந்தோஷப்படுகிறேன்......

காரணம் , உன்
கருவறையில் இந்த
கலையை சுமந்து
களங்கமில்லாமல்
கலையாய் வாழ
கற்றுத்தந்ததற்கு..........

எழுதியவர் : கலையரசி (2-Nov-14, 1:23 pm)
பார்வை : 181

மேலே