இறுதிப் பயணம்

மனிதன் இருக்கும் வரைதான் வாழ்வில் பிரச்னைகளை சந்திக்கிறான். அவன் இறந்தபிறகும் பிரச்சனைகள் தொடரும் என்றால் நிலை பரிதாபம்தான்.
சிவகங்கை ராணியூர் கிராம மக்களின் நிலை அதுதான். மயானத்திற்கு செல்லும் பாதை இல்லாததால் இறந்தவர்களின் உடலை வயல்வெளிகளின் வழியாக கொண்டு செல்ல வேண்டிய அவலத்தை சந்தித்து வருகிறார்கள் ராணியூர் கிராம மக்கள்.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமம் ராணியூர். இங்கு எழுநூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களுக்கான மயானம் என்பது அங்கிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஆனால் இந்த மயானத்திற்கு செல்ல பாதை வசதி இல்லை.
இதனால் கிராமத்தில் மரணம் நிகழும்போது இறந்தவர் உடலை வயல்வெளி வழியாகவோ அல்லது, கண்மாய் வழியாகவோதான் கொண்டு செல்கின்றனர். மழை காலங்களில் நிலைமை இன்னும் மோசம். கண்மாய் மற்றும வயல்வெளியில நீர் நிற்பதால் இவர்கள் தண்ணீரில் இறங்கிதான் பிரேதத்தை கொண்டு செல்ல முடியும். கடந்த ஐம்பது ஆண்டுகளாக இந்த நிலை நிலவிவரும் நிலையில் தங்களுக்கு உரிய பாதை வேண்டும் அல்லது மயானத்துக்கு வேறு இடத்தினை ஒதக்கித் தரவேண்டும் என்று கடந்த பலவருடங்களாக இப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால் அதிகாரிகள் தரப்பில் எந்த பதிலும் இல்லை.
இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன் இந்த கிராமத்தை சேர்ந்த நாகராஜ் என்பவர் இறந்து விட்டார். வயல்வெளியில் சாகுபடி நடந்து நெற்பயிர்கள் வளர துவங்கிய நேரம் என்பதால் அவரது உடலை மயானத்திற்கு கொண்டு செல்ல முடியவி்லலை. அதேசமயம் கண்மாயில் நீர் நிரம்பியதால் அந்த வழியையும் பயன்படுத்த முடியாமல் திணறினர். இதனால் ஆத்திரம் அடைந்த கிராமமக்கள் பிணத்தோடு சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
அவர்களுடன் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செய்லாளர் கந்தசாமி, இந்திய வாலிபர் சங்கத்தை சேர்ந்த சுரேஷ் உள்ளிட்டவர்களும் பிணத்தோடு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த மண்டல தாசில்தார் மனோகரன், கிராமநிர்வாக அலுவலர் விஜயன் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதே கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை மயானத்திற்கு ஒதுக்கக் கேட்டுகொண்டனர். ஆய்வு நடத்தி விரைவில் மயானத்திற்கு மாற்று இடம் ஓதுக்கப்படுவதாக அதிகாரிகள் உறுதியளித்ததன் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
கிராமத்தை சேரந்த தங்கராஜ் என்பவர், “எங்களுக்கு ஒதுக்கபட்ட மயானம் ரொம்ப தூரம் அதுக்கு பாதையே இல்லாம பண்ணிட்டாங்க. ஊர்ல சாவு விழுந்தா பிரிவினால வர்ற வருத்ததை விட உடலை எப்படி கொண்டு போறதுனுதான் வருத்தம் அதிகமாக இருக்கு. நாங்க வேற இடத்துக்கு சுடுகாட்டை மாத்தி கேட்டோம். இதுவரை தரல. இப்பதான் அதிகாரிங்க வந்து பாத்துட்டு வேற இடத்துல தர நடவடிக்கை எடுக்குறோம்னு சொல்லியிருக்காங்க. பெத்த பிள்ளை மாதிரிங்க இந்த நெற்பயிறு. அதுல நடந்து இந்த சவத்தை கொண்டு போறப்ப மனசே கஷ்டமா இருக்கு” என்று புலம்பினார்.
இனியாவது அதிகாரிகள் தாங்கள் அளித்த உறுதிமொழியை காப்பாற்ற வேண்டும்!
-விகடன் -