இது பிரீசர் அது பிரிட்ஜ்
புதன்கிழமை முதல் இணையத் தொடர்பு இல்லாமல் இருந்தது. தொலைபேசித் துறைக்கு கூப்பிட்டுச் சொன்னபோது இரண்டு நாட்கள் ஆகும் என்றார்கள். எங்கள் தளத்தில் ஆறு அறைகள் இருக்கின்றன. எல்லாருமே இணையம் இல்லை என்றதும் மிகவும் வருந்தினார்கள். வேலை முடிந்து வந்ததும் ஊருக்குப் பேசலாம் என்று நினைத்தால் இணையம் வேலை செய்யவில்லை... என்ன செய்வது என்ற யோசனையோடு நீண்ட நாட்களாக பதிவிறக்கம் செய்து வைத்து பார்க்காமலே இருந்த மம்முட்டியின் முன்னறியிப்பு பார்த்தபடி போனில் ஊருக்கு ஒன்றிரண்டு வார்த்தை பேசினேன். ஊரில் என்றால் இணையப் பக்கமே செல்ல மாட்டோம். இங்கு என்னடா என்றால் இணையம் இல்லை என்றதும் என்னவோ ஒரு கையை இழந்தது போலாகிவிட்டது. வெளிநாட்டு வாழ்க்கையில் இணையத்தின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்பது அப்போதுதான் தெரிந்தது. ஊருக்குப் பேச முடியாமல் எதையும் பார்க்க முடியாமல் எதோ ஒரு வனாந்திரத்துக்குள் இருப்பது போல இருந்தது. இரண்டு நாள் என்றால் வெள்ளிக்கிழமை விடுமுறையில் என்ன செய்வது என பக்கத்து அறை நண்பர் புலம்பினார். நல்லவேளை நேற்று மாலை அலுவலகம் விட்டு வந்தபோது இணையம் சிரித்தது. ஊருக்குப் போன் பண்ணி காய்ச்சலில் இருக்கும் விஷாலுடன் இரண்டு வார்த்தைகள் பேசியதும்தான் நிம்மதி வந்தது. இரண்டு ஊசி போட்டதால் வலிக்கிறது நாளையும் பள்ளிக்கு மட்டம்தான் என்று எப்பவும் போல் அவன் ஜாலியாகப் பேசியதும்தான் 102 டிகிரி காய்ச்சல், சாப்பிட்டதெல்லாம் வாந்தி என்று மனைவி அடிக்கடி போனில் சொல்லக் கேட்டதெல்லாம் மறந்து மனசுக்கு சந்தோஷமாக இருந்தது.
புதன்கிழமை மதியம் அறைக்கு வந்த பிறகு ஒரு புதிய நம்பரில் இருந்து அழைப்பு வந்தது. பெரும்பாலும் புதிய நம்பர் என்றாலே யோசித்துத்தான் எடுப்பேன். காரணம் எதாவது வங்கிக்காரர்கள் போன் பண்ணி கிரிடிட்கார்டு பற்றி கதை அளப்பார்கள். எனவே முதல் முறை எடுக்கவில்லை. அடுத்தும் அடித்ததும் அது அபுதாபி நம்பர் என்றதால் சரி எடுக்கலாம் எனத் தைரியமாக எடுத்தேன். ஏன்னா வங்கிக்காரன் என்றால் பெரும்பாலும் துபாய் நம்பரில்தான் அழைப்பார்கள். அலோ என்றதும் குமாருங்களா... நான் கில்லர்ஜி பேசுறேன் என கம்பீரமாய் எங்கள் தேவகோட்டைக்குரல் கேட்டது. கொஞ்ச நேரம் பேசினாலும் நிறைவாய்... அன்பாய் பேசினார். அபுதாபிக்குள்தான் இருக்கிறோம்... ஒருவரை ஒருவர் பார்த்ததில்லை.... விரைவில் அந்த மீசைக்கார அண்ணனை சந்திக்க இருக்கிறேன்... ரொம்ப சந்தோஷமா இருக்கு... அப்புறம் கவிஞர் மகேந்திரன் அவர்கள் இங்குதான் இருக்கிறார். ஊருக்குப் போயிருந்தவர் வந்து விட்டாரா என அழைத்துப் பார்த்தால் வந்தாச்சு குமார்... நேத்துதான் வந்தேன்... மழை பெஞ்சதுல ஜலதோசம் பிடிச்சிருக்கு... நைட் வேலை பாக்குறேன்... அப்புறம் கூப்பிடுறேன் என்றார். இவர் தொலைவில் இருக்கிறார்... இன்னும் நேரில் பார்க்கவில்லை.... விரைவில் சந்திக்க வேண்டும்.
எங்களது புராஜெக்ட் ஒரு வழியாக சென்ற வாரம் முடிவுக்கு வந்தது. அடுத்த கவர்மெண்ட் அலுவலக புராஜெக்டில் எல்லோரையும் விட்டாச்சு... இங்கு கொஞ்சம் முடிக்க வேண்டிய பணிகள் இருக்கின்றன என்பதால் என்னை மட்டும் விட்டுட்டானுங்க... அலுவலகத்தில் இருப்பதற்கு இங்கு பிரச்சினை இல்லைதான் என்றாலும் நான்கு பேர் இருந்த அறையில் நான் ஒருவன் மட்டுமே இருக்க, கடுப்பாக இருந்தது. அடுத்தநாள் வேறோரு கம்பெனி ஆட்களை இடம் மாற்றி நாங்கள் இருந்த அறைக்குக் கொண்டு வந்து வைப்பதற்காக என்னை எப்போது போவீர்கள் என்று கேட்டார்கள். இன்னும் பத்து நாளாகும் என்று சொல்லி வைக்க, அதுவரைக்கும் கொஞ்சம் இடநெருக்கடி இருக்கும் இவர் பொயிட்டா சரியாயிடும் என்று சொல்லி ஒரு அரபிப்பெண், ஒரு ஆங்கிலேயன், ஒரு பிலிப்பைனி ஒரு பங்களாதேஷ்காரன் என நால்வரையும் அந்த சிறிய அறைக்குள் அடுக்கிச் சென்றார்கள். எனது மேஜை பெரிதாக இருக்கும் பங்களாதேஷ்காரனுக்கோ சிறிய மேஜை, அது மாதிரி இருந்தா நல்லாயிருக்கும் இதுல எப்படி வேலை செய்யிறது என என்னைப் பார்த்தான். நான் ஒன்றும் சொல்லவில்லை... பின்னர் மேஜை எல்லாம் கொண்டு வந்து கொடுத்தவர்களிடம் சண்டைக்குப் போனான்... அவர்களோ எங்க முதிர் (மேனேஜர் / பெரிய ஆள்) என்ன சொன்னாரோ அதைத்தான் நாங்க செய்தோம். எதாயிருந்தாலும் அங்க கேட்டுக்கங்க என்று சொல்லிச் செல்ல புலம்பிக்கிட்டே திரிந்தான். அப்பவே நெனச்சேன் தம்பி ஒவரா சீனைப் போடும் போல என... அன்னைக்குப் பூராம் வேலை செய்யாமல் கத்திக்கிட்டே இருந்தான். காய்ந்த ஓலையில் சிறுநீர் கழிச்ச மாதிரி சொடசொட லொடலொடன்னு பேசினான் பத்தாததுக்கு அரபிக்காரியும் சேந்து கத்துனா... அன்றைய பொழுது அவர்களின் கத்தலில் கழிந்தது.
தொடர்ந்து வாசிக்க.... மனசுக்கு வாங்க...