எறும்பு தேசத்தின் கொண்டை ஊசி வளைவுகள் -கடைசி பாகம்ஐந்து -கவிஜி

அதிகாலை 6 மணி.....
வழக்கம் போல் உள்ளங்கையில் கண் விழித்த ஜீவாவின் கண்களில் தென்பட்டது....
வெற்றுப் படுக்கை....
எழுந்து வெளியே வந்தபோது எதிர்ப்பட்ட முகங்களில் எல்லாம் மலர்ச்சி தென்பட்டது ....புத்துணர்வோடு விழித்த அன்றைய தினத்திற்கு நன்றி சொல்லியபடி நடந்த ஜீவா ,
அங்கிருந்தவர்களிடம் "குழந்தை சத்யா எங்கே??"என்று வினவினான்...
"அவனை அப்பொழுதே சரஸ்வதி வந்து எடுத்துப் போய்விட்டாளே!!"ஆனந்தி பதில் கூறினாள்...
இம்முறை விழிகளின் தேடுதலில் சரஸ்வதி கிடைத்தாள் ....
வாசல் கதவைத் திறந்து கொண்டு மெதுவாக வந்தவளை வெறித்தன விழிகள் .....
அவளைப் பார்த்த அதே கணத்தில் அதிர்ந்து சிலையாய் நின்றுவிட்டான் ஜீவா....
ஆயிரமாயிரம் இடிகள் சரமாரியாய்த் தாக்கியதில் ஒரு கணம் ஸ்தம்பித்துப் போய்த் தெளிந்தான் ஜீவா....
"சரஸ்வதி ஏன் .........??????"
வார்த்தைகள் குழறின.....
"எதற்காக??"
"எப்படி ?எனக்காகவா இதைச் செய்தாய் ??"
"சரஸ்வதீதீ ..........................................................!!"
வார்த்தைகள் தொலைத்து தனித்து நின்றான் ஜீவா!!
அது,அவள்........................................................................................................................................................
மூச்சு வாங்க, எழுந்து அமர்ந்தாள் கார்த்திக்கா....கண்கள் தானாக சுற்றுவது போல அவளின் அறை சுற்றியது.... பெரு மூச்சு வாங்கினாள். நுரையீரல், காற்றை வேண்டா வெறுப்பாக துப்பிக் கொண்டிருப்பது போல....மௌனத்துக்குள் கனமான ஒன்றை சுமந்திருந்தாள்... எதிரே கன்னத்துக்கு கை வைத்தபடி முகமூடி அணிந்த ஒருவன் அமர்ந்திருக்க.... பாதியில் இருந்து ஆரம்பித்த கத்தல்... உச்சம் வரை சென்று நின்றது.... நிற்க வைத்தது முகமூடியின் திடீர் அருகாமை....
இருவரும் நேருக்கு நேராக ஒருவரையொருவர் பார்த்தார்கள்.... அவளின் பார்வையில் அச்சம்..... முகமூடியின் பார்வையில் மிச்சம்....இடைவெளியில், பூமி இல்லாமல் போக .... பூமியின் ஆழத்தில் இருந்து கூக்குரல்கள்...... குழந்தைகளின் கூக்குரல்கள்.... அழு குரல்கள்... ஆற்றாமைகள்..... தவிப்புகள்.... உயிரின் வலிகள்....உயிரோடு உடல் எரியும் வாசசங்கள்.....
கார்த்திக்காவுக்கு கண்கள் இருந்த இடத்தில் பூமி இரண்டாகி நின்று கொண்டிருந்தது போல வேர்க்கத் தொடங்கியது...... உடல் நடுங்கி.. உயிர் வெளியேற பார்த்துக் கொண்டிருந்ததாக, அவள் என்றோ வரைந்து, பாதியிலேயே விட்ட சுவற்றுப் படம் தன் நிறம் மாற்றிக் கொண்டிருந்தது.....திடும்மென முகமூடி மனிதனுக்கு பின்னால் இருந்து மனித முகங்களுடன் கச கசவென எறும்புக் கூட்டங்கள் பறக்கத் தொடங்கின....அறையெங்கும் பாதைகள் பாம்பாய் நெளிய...முகமூடி மனிதன் தன்னை எறும்புக்கு தின்னக் கொடுத்துக் கொண்டும் எறும்புகளை தின்று கொண்டும் தன் உருவத்தை சிறிதாக்கிக் கொண்டே ஊரத் தொடங்கினான்....
கார்த்திக்கா, சட்டென முன்னால் கிடந்த கூந்தலை பின்னால் லாவகமாக தலையைத் தூக்கி போட்டுக் கொண்டு... தன்னை யாரோ போல நினைத்துக் கொண்டு அறைக்குள் அங்கும் இங்கும் நடக்கத் தொடங்கினாள்...முகமூடி மனிதன் ஒன்றுமில்லாமல் போன இடத்தில்....கண்ணீரோடு கண்கள் பல கசக்கப் பட்டுக் கொண்டே இருக்க..... அருவி ஒன்றின் ஆங்கார சத்தம் ஒப்பாரியாய்....உதிர்ந்துக் கொண்டிருந்தது....அறையெங்கும் ஒரு வகை குளிர்ச்சி பரவிக் கொண்டிருக்க........தான் இப்போது கடவுளாக மாறி விட்டதாக உணர்ந்த கார்த்திக்கா...... கண்ணாடி முன் நின்று தன்னைப் பார்க்க, அங்கே தன்னைப் போலவே பத்துக்கும் மேற்பட்ட உருவங்கள்... கடவுளாக யோசித்துக் கொண்டிருந்தன.......
அவளின் ஜன்னலின் அருகே கைக்கு எட்டும் தூரத்தில் இருந்த குருவிக் கூட்டில் கை வைத்துப் பார்த்தாள்...இன்றும், ஒரு பக்க சிறகு உடைந்த ஒரு குருவி...அழுகை வராமல் தவித்துக் கொண்டிருக்க... கடவுளான தருணத்தின் சூட்டோடு சூடாய்,... ஓடிப் போய், குருவியின் பாஷையில் பேசினாள்.... என்ன பாஷை என்று ஆழ்மனம் உற்று நோக்க..... "பெரிதாக ஒன்றும் இல்லை.. அன்பு தான் அந்த பாஷை" என்று கண்ணடித்த கடவுள்.... அடிபட்ட சிறகை தொட்டு குணமாக்கினார்..... குணமான குருவி.... தன் கூட்டை காலி செய்யப் போவதாக விரும்பியது.....
ஏன் என்று கேட்க......?
தன்னைப் போலவே காட்டுக்குள் ஒரு குருவி அடிபட்டு கிடப்பதாகவும் அதற்கும் இதே மருந்தைக் கொண்டு சென்று கொடுத்து, தான் சரி செய்யப் போவதாகவும் கூறியது......பிறகு அந்த குருவி முகமூடி மனிதனாக தன்னை மாற்றிக் கொண்டு அறையெங்கும் சிறகடித்துக் கொண்டே இருக்க... பூமி இடம் மாறி சுற்றுவதாக கார்த்திக்கா நம்பினாள்.....
உயிர் போகும் கடைசி மூச்சின் வடிவமாக ஒரு சத்தத்தோடு,தொண்டைக்குள்ளிருந்து நான்காக பிரிந்த குரலாக அணத்திக் கொண்டு எழுந்து அமர்ந்தாள்....... உடல், வியர்வை மழையில் நனைந்து... துவண்டது...... கத்தி கத்திப் பார்த்தாள்.. சத்தம் வரவேயில்லை.... ஆனால் அவளின் சத்தம், அவள் கத்தும் சத்தம் அவளின் காதுக்குள் சிறகடித்தது..........யாரோ மனதுக்குள் ஓடிக் கொண்டே இருப்பதை நன்றாக உள் வாங்க முடிந்த தருணத்தில் எதிரே முகமூடி அணிந்த ஒருவன் அமர்ந்திருந்தான்.... கண்கள் எட்டிக் குதிக்கும் பார்வையோடு, மயங்கிச் சரிந்தாள்......
மயக்க நிலையில் அவளின் மனம், எதையோ.....காய வைத்துக் கொண்டும் ஈரப் படுத்திக் கொண்டும்....ஏதோ ஒரு புதையலைத் தேடி, புதைந்து கொண்டு இருப்பதாகவும்... ஒரு அருவியை, ஆரண்யத்தை சமைத்துக் கொண்டிருந்தது....
"எறும்பு தேசத்தின் கொண்டை ஊசி வளைவுகள்" தொடர் கதையின் கடைசி பாகம் எழுதி ஒரு வருடம் ஆகிறது.... அதன் பிறகு அவ்வப்போது அது தொடர்பான கனவு வருவதும் அதைத் தொடர்ந்து அறைக்குள்ளும் அவளுக்குள்ளும் ஏதேதோ மாற்றம் நிகழ்வதும், அவளை ஒரு வித தேடலுக்குள் தள்ளி விட்டுக் கொண்டிருந்தன......அவள் கனவில் கண்ட இரு மரணங்கள், நிஜமாக அடுத்தடுத்து நடந்ததில் ஒரு வித தடுமாற்றத்தில் மிதந்து கொண்டிருப்பதையும்.. கனவு வந்தாலே பயமும் சேர்ந்தே வருவதையும், என்ன செய்தும் தடுக்க முடியவில்லை....
"இ எஸ் பி எல்லாருக்குமே இருக்கும்.... உதாரணத்துக்கு.... அட.. இப்பதான் உங்கள நினைச்சேன்.... நீங்க வந்துட்டீங்க... அட உங்களுக்கு கால் பண்ண போன எடுக்கறேன்.... நீங்களே கூப்ட்டுட்டீங்க....இன்னைக்கு என்னமோ மனசே சரி இல்ல... நீங்க ஊருக்கு போக வேண்டாம்னு.... சொன்ன அன்னைக்கு அவர் போக வேண்டிய பேருந்து விபத்துல சிக்கிருக்கும்.... இப்டி நிறைய சொல்லிட்டே போலாம்.. நமக்கு ஏதோ ஒரு வகையில நம்மளோட எதிர்கால நிமிடங்கள் சில மணித்துளிகள் நம்மை கடந்து போகும்.. ஆனா நாம அதக் கண்டுக்காம கடந்து போய்டுவோம்.. அந்த நிகழ்வு, நடந்த பின்னால, அட நான் அப்பவே லைட்டா நினைச்சேன்.... கொஞ்சம் யோசிச்சிருக்கணும்னு.. சொல்லுவோம்.. அந்த சக்தி தான் சிலருக்கு கொஞ்சம் அதிகமா இருக்கும் அவ்ளோ தான்.. அது எல்லாமே நடக்கும்னு அவசியல் இல்ல.. நடக்காதும்னு சொல்ல முடியாது....."
இப்டி பல மருத்துவர்கள் சொல்லிய பின்னும் இன்று கனவில் வந்த முகமூடி மனிதன் நிஜமாகாவே கடத்திக் கொண்டு போய்க் கொண்டு இருப்பதை கார்த்திக்காவின் ஆழ் மனம் உணர்ந்து கொண்டே இருக்க...தன்னை சத்யாவாகவே கற்பனை பண்ணிக் கொண்டாள்.... கற்பனையின் கனவில் அருவியாய் கொட்டிக் கொண்டிருந்தன பாதைகள்..... அருவிக்கு பதிலாக துளிகளில் எல்லாம் எறும்புகள் .....
ஒரு ஆரண்யம்.. விரியத் தொடங்கியது.......அருவி.... தன்னை களைந்து கொண்டிருந்தது.....
காடு கொள்ளும் காட்டில்.... கண்கள் கொள்ளாத காடு ஒன்று விரிந்து கொண்டே இருப்பதைக் கண்ட முகமூடி மனிதன் மெல்ல புன்னகைத்தான்....
மயக்கம் தெளிந்த கார்த்திக்கா..."ஹலோ சார்.... உங்களுக்கு என்ன வேணும்.... என்ன ஏன் இந்த காட்டுக்குள்ள கூட்டிட்டு வந்த்ருக்கீங்க ..." என்றாள்....
"ஹலோ... கார்த்திக்கா.... இந்த கேள்விய இவ்ளோ நேரம் கழிச்சா கேக்கறது...? இவ்ளோ நேரம் சத்தம் போடாம கூட நடந்து வந்தீங்களே....! என்றபடியே கலகலவே சிரித்தான்.. முகமூடி...
"அட பாவமே.. இதையும் கனவுன்னு தானே நினைச்சேன்..."என்று தன்னையே நொந்து கொண்டாள் கார்த்திக்கா.
அவளுக்கு தலை வலித்தது.... எது நிஜம் எது கனவு என்று உணர முடியாத மூளைக்குள் சில் காற்றின் ஈரப்பதம், அது நிஜம் தான் என்பதை பூமி சுற்றுவதை நிறுத்தி உணர்த்தியது....
மனதுக்குள் ஆயிரம் கேள்விகள் பட்டாம் பூச்சியாய்......... இடைவெளி இல்லாமல் பதிலளித்துக் கொண்டிருந்தன..... ஆனால் புரியாத பதில்... தெரியாத கேள்வி.....
"யார் இவன்.... எதற்கு எங்கு கூட்டிப் போகிறான்...."?
"ஹலோ முகமூடி உன் நினைப்பு பலிக்காது.. நான் யார் தெரியுமா....?"
"நான் என்ன நினைச்சேன்னு உங்களுக்கு எப்டி தெரியும்.... கார்த்திக்கா....?"-மீண்டும் சிரித்தான் முகமூடி....
"ஆமா.. என் பேர் உனக்கு எப்டி தெரியும்.....? யார் நீ..?... இப்ப எங்க கூட்டிட்டு போற...?"-கேட்டுக் கொண்டே சந்தேக பார்வையை அவனோடு மட்டுமல்லாமல் எதிர்ப்படும் காடெங்கும்.. எதிரே குதித்துக் கொண்டிருக்கும் அருவியெங்கும் சிதரவிட்டாள்.....
"ஒரு சின்ன வேலை இருக்கு.. அதையும் முடிச்சிட்டு சீக்கிரம் போக வேண்டிய இடத்துக்கு போய்டலாம் சரியா.. எழுத்தாளர் கார்த்திக்கா அவர்களே...."என்ற முகமூடி... சட்டென நின்றான்...
"இது ஏதோ வில்லங்கம் போல இருக்கே..." மனதுக்குள் எழுத்தாளர் கார்த்திக்கா யோசித்தபடியே... முன்னால் சென்ற முகமூடி, நிற்பதைக் கண்டு தானும் நிற்க, எதிரே ஒரு சிறுவன் முகமூடியைக் கண்டு பயந்து கத்திக் கொண்டே ஓடிக் கொண்டிருந்தான்.....
"யோவ்.. உன்னப் பார்த்து தான்யா அந்த பையன் பயந்து ஓடறான்.. அந்த கருமம் புடிச்ச முகமூடிய கழட்டித் தொலையே.... எனக்கும் பயமாத்தான் இருக்கு...." என்றாள் கார்த்திக்கா... அந்த பையன் ஓடிய திசையில் கண்களை சுழலவிட்டபடியே....
அதை காதில் வாங்காமல்.. "டேய் தம்பி.... நில்டா.. ஓடாத... அங்க பள்ளம்... தவறுனா கீழ போய்டுவடா.... நில்லு.... நான் ஒண்ணும் பண்ண மாட்டேன்.. டேய்..... தம்பி...... " என்று கத்திக் கொண்டே அந்த சிறுவன் போன திசையில் முகமூடி ஓட...
"ஏய் முகமூடி நில்லு.. காட்டுக்குள்ள இப்டி தனியா விட்டுட்டு ஓடற.. லூசாயா நீ.. நானும் வரேன்" என்று கத்திக் கொண்டே கார்த்திக்காவும் ஓட... சற்று நிமிடத்தில் அந்த சிறுவனைக் காணாமல் மூச்சு வாங்கிக் கொண்டு அருவியின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தான் முகமூடி......
அருவியின் சத்தம்..... திபு திபுவென.... கொட்டிக் கொண்டிருந்தது....
காதுக்குள் இல்லாத ஒரு இரைச்சல்..... கண்களுக்குள் இருக்கின்ற ஒரு இரைச்சல்....
மோனலிசா ஓவியம் போல காடு தன்னை விரித்துக் கொண்டும் சுருக்கிக் கொண்டும்.. தீர்ந்து கொண்டும் நிறைந்து கொண்டும்.... மினுங்கிக் கொண்டிருக்க... சட்டென ஏதோ ஒரு மரத்தில் இருந்து எழுந்து வானத்தைத் துளைத்துக் கொண்டு, மேலே, மேலே போய்க் கொண்டே இருந்த ஒரு பறவையின் சிறகடிப்பில் அருவியின் சப்தம்.... நனைந்திருந்ததாக நினைக்கும் வேளையில்...... அந்த சத்தங்களைத் தாண்டி அந்த சிறுவனின் கதறல் சத்தம் தூரத்தில் கேட்டது.... காதுக்குள் அருவியின் சத்தத்தை எடிட் செய்த முகமூடி, கண்களை உற்று நோக்கி... இன்னும் ஆழமாக தேடினான்...
சட்டென கண்ட கண்கள்... கால் இழந்த எறும்பாய் துடிக்க.....
"அயோ... டேய்.... தம்பி... நான் தான் சொன்னேன்லடா.... ஓடாத பள்ளம்னு.... இப்பப் பாரு....சரி... பயப்படாத.... .பார்த்து....... பார்த்து.. விழுந்துடாத.. என் கையப் பிடி.... பிடி..... பயப்படாத.. பிடிடா....... கொஞ்சம் முயற்சி பண்ணுடா.... பிடி......" முகமூடி மனிதன் குப்புறப் படுத்துக் கொண்டு.. காலை அருவியின் ஓரத்தில் இருந்தில் மரத்தின் வேருக்கடியில் விட்டு மாட்டிக் கொண்டு உடலை இன்னும் நன்றாக முன்னோக்கி சாய்த்து.. அவனைத் தூக்க போராடிக் கொண்டிருக்க.... அந்த சிறுவனோ.. முகமூடியைக் கண்டு கத்திக் கொண்டே இருந்தான்... அவனின் பிடி நழுவிக் கொண்டிருந்து... கீழே.... அருவியின் புகை... மேலேழும்பிக் கொண்டு, தொடர் இடியின் சத்தத்தை.... கொப்பளித்துக் கொண்டே இருக்க......
முகமூடி கத்திக் கொண்டே இருக்க... சிறுவனும் முகமூடியின் கையைப் பிடிக்க மாட்டேன் என்று கத்திக் கொண்டு பின்னால் திரும்பிப் பார்த்து அருவியைக் கண்டு அலறி.. கண்களில் சாவின் பயத்தை வெளிறிக் கொண்டிருந்தான்....
இருவரையும் மாறி மாறிப் பார்த்த கார்த்திக்கா, சட்டென ஒரு முடிவுக்கு வந்தவளாய், " யோவ்.. முகமூடி.. அந்த பையன்... உன் முகமூடிய பார்த்து தான் பயப்படறான்.. எனக்குத் தோணுது....என் உள்ளுணர்வு சொல்லுது .....அத கழட்டுயா... ஒரு உயிர் உன்னால போய்ட போகுது.. நீ கழட்டு.. அவன் உன் கைய பிடிப்பான் பாரேன்...." என்று பின்னால் நின்று கத்த... சற்று நொடியில் ஏதோ உணர்த்த.... சட்டென தன் முகமூடியைக் கழற்றினான்.....முகமூடி
அந்த பையனின் முகம் சத்யாவை நினைவு படுத்துவதைத் தடுக்கமுடியவில்லை கார்த்திக்காவுக்கு
அருவி..... இன்னும் வேகமாய் பாய்ந்து கொண்டிருந்தது......
இனி..........
கவிஜி