மாசில்லா உலகு - போட்டிக் கவிதை - தேன்மொழி

மாசில்லா உலகு - போட்டிக் கவிதை - தேன்மொழி
----------------------------------------------------------------------------

தெருவோரம் குவியும் குப்பையை
உரிமையோடு சுத்தம் செய்தால்
குழந்தையின் பாதமாய் மிளிரும்
ஒவ்வொரு தெருவும் அழகாய் ..!

காற்றோடு மிதக்கும் புகையை
புதுவழியில் விரைவில் தடுத்தால்
நுரையீரலில் நுழையும் சுவாசம்
இதயம் வருடும் இதமாய் ..!

நதிநீரில் கலக்கும் சாயங்களை
நங்கூரமாய் கட்டுப்பாடு செய்தால்
தாகத்தை தணிக்கும் குடிநீர்
நாவினில் சுவைக்கும் தேனாய் ..!

செவிதனை கிழிக்கும் இரைச்சலை
செல்லும் இடங்களில் குறைத்தால்
அவசரம் அறிவிக்கும் ஒலியும்
ஆழ்மனதில் நிலைக்கும் அமைதியாய் ..!

நிலத்தை கெடுக்கும் ரசாயனத்தை
நிரந்தரமாய் நிறுத்தி விட்டால்
வறண்டு வெடித்த மண்ணிலும்
பயிர்கள் முளைக்கும் புதிதாய் ..!

வழியில் ஓடும் சாக்கடையை
முழுதாய் ஒதுக்கி அமைத்தால்
கொசுக்கள் பரப்பும் நோயும்
குறைந்துப் போகும் விரைவாய் ..!

மனிதன் அழிக்கும் காட்டினில்
மரங்கள் மிகையாய் நட்டால்
மிச்சம் இருக்கும் இயற்கையும்
விரும்பி பரவும் தளிராய் ..!

சுரண்ட நினைக்கும் வளத்தினை
சுயநலம் மறந்து காத்தால்
நாளை வளரும் குழந்தையும்
மனிதம் பேசும் சுடராய் ..!

--- தேன்மொழி . B.E.
இளநிலை கட்டிடப் பொறியியல்
சூர்யா பொறியியல் கல்லூரி
ஈரோடு

எழுதியவர் : தேன்மொழி (10-Nov-14, 8:55 am)
பார்வை : 121

மேலே