உயிர்
ஏன் இவளின் உணர்வுகள் என்னை இப்படி புரட்டிப் போட வேண்டும் என்பது சமீபத்திய ஆச்சர்யம்...! ஆனால் ஆரம்பம் முதலே எனக்கு ஏற்பட்டிருந்த பிணைப்பு...மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே இருப்பதில் ஆச்சர்யமும் ஒரு வித சிலிர்ப்புடன் கூடிய பயமும் இருப்பதை மறுப்பதற்கில்லை.
என் விடியலில் அவள் முகம் பார்த்துதான் எழுகிறேன்...! என் இரவுகள் அவள் இல்லையென்றால் எப்படியிருக்கும் என்று எண்ணிக் கொண்டிருக்கும் போதே மிகப்பெரிய ஒரு கேள்விக் குறி வந்து அந்த எண்ணத்துக்கு அருகே வந்து விழுந்து விடுகிறது.
ஒரு நாள் அவளை கவனியாதது போல நான் வேறு வேலையாயிருந்தேன்...என்னருகே வந்து பின்னால் என்னைக் கட்டிக்கொண்டு அந்த இரவின் குளுமைக்கு குளுமை சேர்த்த அவள்..ஏன் இன்னும் உறங்க வரவில்லை? என்று என் காதோரோம் கிசு கிசுத்தாள்....எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது என்று அலட்சியமாகவே சொல்லிவிட்டு நான் ஏதோ எழுதிக்கொண்டிருந்தேன்.. பின் கவனம் எல்லாம் என் எழுத்தில் மீது ஆதிக்கம் கொள்ள நேரம் அதில் காணமால் போகத் தொடங்கியது....
அயர்ச்சியில் நான் நேரத்தை நோக்கிய போது அது நள்ளிரவு 12 க்கு கால் மணி நேரமே இருப்பதாக காட்டிக் கொண்டிருந்து. விளக்கை அணைத்து விட்டு படுக்கையில் போய் விழுந்த நான் .......புரண்டு படுத்து திரும்பிய போது..அவள் அப்போதும் விழித்துக் கொண்டிருப்பதை பார்த்து அவளின் தலை கோதி ..உனக்கு உறக்கம் வரவில்லையா...? என்று கேட்டதற்கு அவள் சொன்ன பதிலில் அதற்கப்புறம் என் தூக்கம் கபளீகரம் ஆனது.
ஆமாம் என்னருகாமையில்லாமல் அவளுக்கு உறக்கம் வராதாம். இப்படி பல நாட்கள் உறங்காமல் காத்திருந்ததைக் சொல்லக் கேட்ட என் கண்கள் கசிந்தது அவளுக்குத் தெரியாது… ஆனால் அவள் உச்சியில் முத்தமிட்டு தலை கோதி உறங்க வைத்து அவள் உறக்கத்தின் ஆழத்தினை நான் ரசித்திருக்கிறேன்.
அப்படி ரசிக்கும் போதெல்லாம் வாழ்வின் அடர்த்தியும் இருத்தலின் அர்த்தமும் மெலிதாய் என்னைச் சுற்றி உணர்வுகளாய் கவிதைகள் எழுத ஆரம்பிக்கும். ஒரு அதிகாலை உறக்கத்தில் அவள் கலக்கமாய் என்னைத் தேடி கைகளால் என் கழுத்து வளைத்து கட்டியணைத்த தருணத்தில் கலக்கமாய் என் இருப்பை உணர்ந்திருக்கிறேன்.
ஒவ்வொரு விடியலிலும் எனக்கு முன்னே எழுந்து விடும் அவள்… நான் எழும் வரை என்னையே சுற்றி சுற்றி வருவதும்… எழுந்த பின் கண்கள் மலர சிரித்து குட்மார்னிங் சொல்வதும் என்று எல்லா செயல்களும் என் உயிர் கரைக்கத்தான் செய்கின்றன.
வார இறுதியில் உறுதியாய் கேட்பாள் .. உங்களுக்கு ஏதேனும் வேலை இருக்கா இந்த விடுமுறையில்? நீங்கள் எங்காவது வெளியில் போவீர்களா? என்று...பல நேரங்களில் அவளின் எதிர்ப்பார்ப்புகள் பற்றி கவலைப்படாமல் ஊர் சுற்றிய நான் அவள் நான் இருக்கும் நேரங்களில் உயிர்ப்போடு இருக்கிறாள் மேலும் இல்லாத போது சோர்ந்து போய் விடுகிறாள்... என்பதை அறிந்து துடி துடித்துப் போனேன்.
அவளுக்கு தமிழ் வாசிக்கத் தெரியாது. ஆனால் என்னுள் எப்போதும் நுழைந்து கொண்டு என் எழுத்துக்களை கதையாய் கேட்டுத்தெரிந்து கொள்வதில் அவளுக்கு இருந்த ஆர்வத்தின் பின்னணியில் என் மீதான அதீத காதல்தானே இருந்திருக்கிறது.
எப்போதும் அவளை அழைத்துச் செல்வதற்காக அங்கே நான் வருவேன்.... அவள் எப்போதும் காத்திருக்கும் அறையில்தான் காத்திருப்பாள். வரவேற்பறையிலிருந்து கொஞ்சம் நடந்துதான் நான் உள்ளே செல்லவேண்டும்.......ஆனால் கடந்த சில நாட்களாக அவள் வரவேற்பரையில் எனக்காக காத்திருந்தது பற்றி பெரிதாக நான் அலட்டிக் கொள்ளாமல் வழக்கப்படி அவளை அழைத்துக் கொண்டு வந்து கொண்டிருந்த போது....
என்ன சார் கால் எப்படி என்று எனது கால் வலியை வரவேற்பரையில் இருந்த பெண் கேட்டதும் ஆச்சர்யத்தில் மூழ்கிய நான்… எனக்கு கால் வலிக்கும் நான் அதிகம் நடக்க கூடாது என்று அவளுக்கு தெரிந்த மொழியில் சண்டையிட்டு என் கால் வலியைச் சொல்லி....யாரையுமே அனுமதிக்காத நிர்வாகம் அவளை அங்கே அமரச் சொன்னதின் பின் புலத்தில் மறைந்திருந்த அன்பு என் மரித்தலுக்கும் பின் அவளையே தேடும்.
நேற்று அவள் காரில் பின் பக்க கதவினை திறந்து ஏறும் போது.... நோ.. நோமா.. என்று நான் சொல்லி அவளை முன்னால் அழைத்து.....
" ஏம்மா.... நீ இனிமே...குழந்தை இல்லை சிறுமி....(யூ ஆர் நாட் எ பேபி... நவ் யூ ஆர் எ கேர்ள் ரைட்) எனக்கு பக்கத்து சீட்டில் முன்னால்தான் இனி நீ அமர வேண்டும்" என்று உன் உச்சி முகர்ந்து உனக்கு ஷேக் ஹேண்ட் கொடுத்து கட்டியணைத்து முன்னிருக்கையில் உன்னை அமரச் சொன்னபோது குட்டிக் கண்களால் எனைபார்த்து சிரித்து....கன்னத்தில் அழுத்தமான முத்தமிட்டு வழி நடுகிலும்... ஐ லவ் யூ டாடி.....இல்ல... இல்ல...... அப்பான்னு சொல்லிக்கொண்டே உன் பள்ளி வரை வந்தாயே....
என் மகளே......என்னை ஆட்டுவிக்கும் ஏழாம் அறிவே....! என் உயிரே...! பெண்மையின் புனிதம் போதிக்கும் ஞான குருவே....கற்றுக் கொடும்மா.. இன்னும்... நான் கற்றுக் கொண்டே...இருக்கிறேன்..........!