ஆன்மிகம் --1

''விதியை வெல்ல வேதம் முதலான எந்த நூலிலும் வழி கூறப் பட்டிருக்கவில்லை '' என்று அவ்வையார் பாடியுள்ளதைப் படித்தவுடனே நமக்குப் பயம் வந்துவிடுகிறது. ஊரெல்லாம் ஒன்று கூடி வெறுத்தாலும் விதி போகாது என்றால் பிறகு நாம் ஏன் கடவுளைத் தொழவேண்டும். அது வீணான வேலைதானே என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா?

ஆனால் ..அதே அவ்வையார் அடுத்த இரண்டு வரிகளில் , ''நெஞ்சே! நீ கவலைப்படாதே, விதியை வெல்ல முடியாது என்பது அனைவருக்கும் பொதுவாகக் கூறப்பட்ட ஒரு கருத்தே. ஆனால், அந்த அனைவரிலும் வேறுபட்டவர் களாகச் சிலர் இருக்கிறார்கள் . அவர்களே மெய்யான முக்தி நிலையை அடைய முழு முயற்சி செய்யும் மேலோர்கள். சரி, விதி அவர்களை விட்டு விலகிப் பொய் விடுமா? போகாது .ஆனால் அது அவர்களிடம் இருப்பது போல் ஒரு பொய்த் தோற்றம் கொண்டு செயலற்று இருக்கும். அதாவது உண்மையில் அவர்களுக்கு விதி என்பது இல்லை'' என்கிறார் அவ்வையார்.

தேங்காய்கள் நிறைந்த குலை ஒன்றில் ஏதோ ஒரு தேங்காய் மட்டும் மட்டை,ஓடு ஆகியவற்றுடன் முழுத் தேங்காய் போலவே காட்சியளிக்கும். ஆனால் வெட்டிப் பார்த்தால் உள்ளே பருப்பு இருக்காது. அதை ஊமைத் தேங்காய் என்பார்கள்.

முக்தி வழியில் நிற்போரைப் பற்றுகின்ற விதியும் அந்த ஊமைத் தேங்காய் போல் செயலற்றுக் கிடக்கும். இதையே அன்னை சாரதா தேவியார், ''கடவுளைச் சரண் புகுந்தவரின் விதியின் கட்டளைகளும் மாற்றியமைக்கப்படும் ''என்றார்.

வினைப் பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
அனைத்தைய நூலகத்தும் இல்லை நினைப்பதெனக்
கண்ணுறுவது அல்லால் கவலைப்படேல் நெஞ்சே மெய்
விண்ணுறு வார்க்கு இல்லை விதி .. --- நல்வழி

குறிப்பு;

கண்ணுறுவது--தோன்றுவது
விண்ணுறுவார்--முக்தி நிலையை அடைய முயல்பவர்

எழுதியவர் : படித்தது (10-Nov-14, 11:38 am)
பார்வை : 247

சிறந்த கட்டுரைகள்

மேலே